உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சென்னை ’மியாட்டில்’ இரண்டு வாரங்களாக கரோனாவுக்கு சிகிச்சை எடுத்து கொண்டிருக்கிறார். அவரைப் போலவே மின்துறை அமைச்சர் தங்கமணி ‘அப்பல்லோ’வில் சிகிச்சை பெற்றுவருகிறார். தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதேபோல் ஆளும்கட்சி, எதிர்க்கட்சியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் சிலரும் இப்படி கரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சையில் இருக்கிறார்கள். இவையெல்லாம் மக்களை திகைக்க வைத்திருக்கும் நிலையிலும், கரோனா சென்னையில் மட்டுப்பட்டு வருவதாகவும், கடந்த நான்கைந்து நாட்களாக 2 ஆயிரத்துக்கும் குறைவாகவே தொற்று இருப்பதாகவும் அரசு தரப்பு சொல்லிக்கொண்டே இருக்கிறது.
இப்போது தனது எண்ணிக்கையின் எல்லையாக 1500-ஐ வைத்துக்கொண்டு அதற்குள் சுகாதாரத்துறையினர் கபடி ஆடுகிறார்கள். அதன்படி 9-ந் தேதி சென்னையில் வெறும் 1,216 பேருக்கு மட்டுமே தொற்று என்று கணக்கை காட்டுகிறார்கள். உண்மையில் கரோனாவின் வேகம் குறையுமானால் மகிழலாம். ஆனால் இப்போது பெருமளவில் தளர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிலையிலேயே, சென்னையில் கரோனா குறைகிறது என்பதுதான் லாஜிக்கை உதைக்கிறது.
6-ந் தேதியில் இருந்து பெரும் தளர்வை அறிவித்த எடப்பாடி பழனிசாமி, 7-ந் தேதி 750 படுக்கைகள் கொண்ட கரோனாவுக்கான சிறப்பு மருத்துவமனையை கிண்டியில் திறந்து வைத்துவிட்டு, கரோனாவின் வேகம் குறைகிறது என்று மகிழ்வோடு அறிவித்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்புக்குப் பின்னர், அவர் பேச்சுக்குக் கட்டுப்பட்டதுபோல், வெளியிடப்படும் புள்ளி விபரங்களில் தொற்றின் எண்ணிக்கை குறைகிறது. அதிலும் வாழ்வாதாரம் கருதிதான் இந்த தளர்வு ஏற்படுத்தப்பட்டது என்று எடப்பாடி சொன்ன பிறகு, கரோனா இரக்கம் கொண்டு இப்போது படிப்படியாக சென்னையில் ’குறைவது’ ஆச்சரியத்தை தருகிறது.
அப்படியென்றால் சென்னையில் பழைய அளவுக்கு பரிசோதனைகள் நடக்கிறதா என்ற சந்தேகம்தான் நமக்கு எழுகிறது. ஏனெனில் தொற்றின் எண்ணிக்கை குறைவதாக சொல்லி அரசு கூத்தாடினாலும், தினந்தினம் அரங்கேறும் மரணத்தின் எண்ணிக்கை இன்னும் குறையவில்லையே அது எதனால், கரோனா கட்டுக்குள் வந்தால் மரணமும் கட்டுக்குள் வந்திருக்கவேண்டுமே, சென்னையில் கரோனா தொற்றின் எண்ணிக்கை பாதியாகக் குறைகிறபோது, மரண எண்ணிக்கையும் பாதியாகக் குறைந்திருக்க வேண்டுமே, அப்படியொரு ஆறுதலூட்டும் அறிவிப்பு இன்னும் வராதது ஏன்?
சென்னையில் ஜூலை 1-ந் தேதி வரை 888 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். 9-ந் தேதி வரை சென்னையில் மட்டும் 1,169 பேர் கரோனாவுக்குப் பலியாகி இருக்கிறார்கள்.
இந்த துக்க நிகழ்வுகளை சாதாரணமாக ஒதுக்கிவிடமுடியாது. இத்தனைக் குடும்பங்களின் கண்ணீரையும், ஒப்பாரியையும் அரசால் எளிதில் கடந்துவிட முடியாது. கடந்த நாட்களை திரும்பி பார்த்தால், மரணப் பேரழிவு தமிழகத்தை துரத்துவதை உணரமுடியும்.
தமிழகத்தில் ஏற்பட்ட முதல் கரோனா மரணம், கடந்த மார்ச் 24-ந் தேதி மதுரையில் ஏற்பட்டது. கட்டிட ஒப்பந்ததாரரும், மசூதி நிர்வாகியுமான 55 வயது நபர், அங்குள்ள அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததன் மூலம் கரோனா மரணக் கணக்கு ஆரம்பமானது. ஜூலை 9ந் தேதி வரையிலான மூன்றரை மாதத்தில் இந்த மரண எண்ணிக்கை 1,765 ஆகிவிட்டது.
பெரும் தளர்வுக் காலமான ஜூலை மாதத்தில் மரணத்தின் வேகம் எப்படி இருக்கிறது என்பதை கவனியுங்கள். ஜூலை 1-ல் 63 பேரும், ஜூலை 2-ல் 57 பேரும், ஜூலை 3-ல் 64 பேரும், ஜூலை 4-ல் 65 பேரும் என நீண்டுகொண்டே போனது. இதன்படி ஜூலை 1ல்- இருந்து ஜூலை 7 வரையிலான ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் 232 பேர் கரோனாவால் மரணம் அடைந்திருக்கிறார்கள். அதன் பின்னும் குறையவில்லை. 8-ந் தேதி 64 பேர், 9-ந் தேதி 65 பேர் உயிரிழந்துள்ளனர்.
இப்படி 9-ந் தேதி வரை தமிழகத்தில் 1,764 பேரின் உயிரைக்குடித்து ஏப்பம் விட்ட கரோனா, மக்களைத் தாறுமாறாக துரத்திக்கொண்டிருக்கும் நிலையில்தான், யாரும் அஞ்சவேண்டாம், யாரும் கவலைப்பட வேண்டாம். அரசு துரிதாமாக கரோனாவை கட்டுப்படுத்தி வருகிறது என்று அரசு பழைய பல்லவியையே பாடிவருகிறது.