முழு ஊரடங்கில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அதிக அளவிலான தளர்வால், சென்னை மண்டலம் பெரும் ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. முழு ஊரடங்கு காரணமாக கரோனா தொற்றின் வேகம் மட்டுப்பட தொடங்கிவிட்டது என்று சொல்லும் அரசு, அதேநேரம் 6-ந் தேதி முதல் பெரும் தளர்வுகளையும் அறிவித்தது.
ஆனால் சென்னையின் கரோனா மரண எண்ணிக்கை குறைவதற்கு முன்பாகவே, இங்குள்ள தனியார் நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் நூறு சதவித தொழிலாளர்களுடன் இயங்கலாம் என்றும் அது பச்சைக்கொடி காட்டியது. பொது போக்குவரத்து இன்னும் தொடங்கப்படாத நிலையில் இப்படி அரசு காட்டிய பச்சைக்கொடியால் சென்னை, அம்பத்தூர், பாடி, கிண்டி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் தனியார் தொழிற்சாலைகள் அனைத்தும் முழு வேகமெடுத்து இயங்க தொடங்கிவிட்டன.
போக்குவரத்து வசதியில்லாமல் தவித்த தொழிலாளர்களிடம் “வேலைக்கு வந்தே ஆகவேண்டும், இல்லையென்றால் வேலையை விட்டு நீக்கிவிடுவோம்” என்று அந்த நிறுவனங்கள் கறாராய் மிரட்டத்தொடங்கியதால், கிடைத்த வாகனங்களில் ஒருவருக்கு மேற்பட்டோர் அடித்து பிடித்து பயணித்து வேலைக்கு சென்று வர ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால் சென்னை மாநகர சாலைகள் முழுக்க நெரிசலில் திணற தொடங்கிவிட்டது.
தொழில் நிறுவனங்களின் நிர்பந்தத்தால் வேலைக்கு சென்றுவரும் தொழிலாளர்கள் மூலம் அவர்கள் குடும்பத்தினருக்கும் தொற்று பரவும் ஆபத்து மிகுந்திருக்கிறது. இப்போது யார் மூலம் யாருக்கெல்லாம் கரோனா தொற்று பரவுமோ என்ற திகிலோடு தொழிலாளர்கள் வேலைக்கு போய்வருகிறார்கள்.
தொழிற்சாலைகள் இயங்கினால் கரோனா பரவுமா? என்று கேட்கலாம். நீலகிரி மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தது கலெக்டர் இன்னோசென்ட் திவ்யா தலைமையிலான மாவட்ட நிர்வாகம். இந்த நிலையில், ஊட்டி அருகே இருக்கும் எல்லநல்லி பகுதியில் இருக்கும் ஒரு தனியார் தொழிற்சாலையில், பணிபுரியும் கோவையை சேர்ந்த பி.ஆர்.ஓ..வுக்கு தொற்று ஏற்பட்டது. அவர் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
அவரால் அவர் வேலை பார்த்த தொழிற்சாலை ஊழியர்கள் ஏறத்தாழ 100 பேருக்கு கரோனா பரவியது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இந்த தொழிற்சாலை ஊழியர்கள் மூலம் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களால் இந்த தொற்றின் எண்ணிக்கை 155ஐ கடந்திருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை கண்டறிந்துள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட பகுதிகள் சீல் வைக்கப்பட்டு, அங்கே திகில் சூழ்ந்திருக்கிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நடமாடிய தமிழக அமைச்சர்களான கே.பி.அன்பழகனும், தங்கமணியுமே தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கும் நிலையில், எவ்வித பாதுகாப்பு உத்தரவாதமும் இல்லாத தொழிலாளர்கள், பீதியோடு வேலைக்குப் போய்வருகிறார்கள். அரசின் தளர்வுகளால் தொற்று ஆபத்தை நோக்கித்தான் சென்னை மண்டலம் சென்று கொண்டிருக்கிறது.