Skip to main content

எவ்வளவு சொல்லியும் கேட்கல... அப்புறம் இப்படி தானே ஆகும் புலம்பும் காங்கிரஸ்... தோல்வியால் அதிருப்தி!

Published on 05/11/2019 | Edited on 05/11/2019

"வெளக்கப் புடிச்சிக்கிட்டுப் போயி கெணத்துல விழுந்தானாம்' -தமிழக கிராமங்களில் பரவலான சொலவடை இது. அதே நிலைதான் தமிழக காங்கிரசின் நிலையும். காங்கிரசின் தற்கொலை பாலிஸியால் கையிலிருந்த வைரத்தை இழந்துவிட்டோம்' என ஆதங்கப்பட்ட முன்னாள் தென் மாவட்ட காங்கிரசின் மாஜி தலைவர்களில் ஒருவர் "அடையாளம் வேண்டாமே' என்று சொன்னதோடு, எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை. இப்ப குத்துதே, கொடையுதே என்று அலறும், பின்னணியில் நடந்தவைகளை நம்மிடம் சொன்னார்.

 

congress



தமிழக காங்கிரசின் தலைவராக திருநாவுக்கரசர் செயல்பட்டபோதே தனது ஆதரவாளரான ரூபி மனோகரனை காஞ்சிபுரம் மாவட்டத் தலைவராக்கினார். எம்.பி. தேர்தல் நேரத்தில் ரூபி மனோகரன், குமரி தொகுதி வேட்பாளர் சீட் கேட்டதற்கு திருநாவுக்கரசரும் அவருக்குத் துணை நின்றார். "குமரியில் காங்கிரசுக்கு வாய்ப்பிருக்கிறது வெற்றி பெறலாம்' என்று காங்கிரசின் தமிழக கண்காணிப்புக் கமிட்டி மூலமாக சோனியா காந்திவரை கொண்டு சென்றார். இதையறிந்த நாங்குநேரியின் எம்.எல்.ஏ.வான வசந்தகுமாரும் தன் டெல்லி ஸோர்சுகள் மூலம், குமரியைப் பெற முயற்சி செய்திருக்கிறார். அங்கே சீட் கேட்பது தனது சம்பந்தியான ரூபி மனோகரன் என்று தெரிந்தும்கூட அவரை ஓவர்டேக் செய்ய முயற்சிகளை மேற்கொண்டார். இதற்கு எக்ஸ் எம்.பி. தனுஷ்கோடி ஆதித்தனும் துணைபோயிருக்கிறார். ஆனாலும் தளராத திருநாவுக்கரசர், "வசந்தகுமார் எம்.எல்.ஏ. சரிப்பட்டுவராது; ரூபி மனோகரனே பெஸ்ட் சாய்ஸ்' என்று அகில இந்திய காங்கிரசின் டெல்லி தலைமை வரை தெரியப்படுத்தியுள்ளாராம். இந்தச் சமயத்தில் திருநாவுக்கரசர் தமிழக தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு கே.எஸ்.அழகிரி தலைவராக்கப்பட்டார்.

 

congress



வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட வசந்தகுமார், தலைவர் அழகிரியைக் காம்ப்ரமைஸ் செய்திருக்கிறார். மட்டுமல்லாமல் காங்கிரசின் தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளரான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய பொறுப்பாளர் சஞ்சய்தத் போன்றவர்களும் சரிக்கட்டப்பட்டார்கள். ஆனாலும் தொடர்ந்து போராடிய திருநாவுக்கரசர், "நாங்குநேரி எம்.எல்.ஏ.வுக்கு எம்.பி. வேட்பாளர் என்றால் அவர் ராஜினாமா செய்ய நேரிடும். காலியான அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும். தமிழகத்தின் நிலைமை வேறு தன்மையைக் கொண்டது. பொதுத்தேர்தல் என்றால் அதன் க்ளைமேட் வேறு. அதே க்ளை மேட் இடைத்தேர்தலில் இருக்காது.

தற்போது ஆட்சிப் பொறுப்பில் இருப்பது அ.தி.மு.க. இடைத் தேர்தலில் மொத்தமாக அங்கே குவிவார்கள். ஆளும் தரப்பு பண பலம், அதிகார பலம் அத்தனையையும் இறக்கும். அதனை மீறி நமது அணி ஜெயிப்பது கடினம். எனவே குமரியில் வேறு வேட்பாளரை நிறுத்துங்கள். ரூபி மனோகரன் அல்லது ஒத்த செல்வாக்குடையவர்களை தேர்வு செய்யுங்கள். அதை விடுத்து நம் கட்சியின் ஒரு எம்.எல்.ஏ. சீட்டை பலி கொடுத்து எம்.பி. வேட்பாளராக்குவது சரிப் பட்டு வராது. அது தற்கொலை பாலிஸிக்குச் சமம்' என்றெல்லாம் திருநாவுக்கரசர் அகில இந்தியத் தலைமையிடம் எடுத்துச் சொல்லியுள்ளாராம். அவரது வாதம், பேச்சுக்கள் புறக்கணிக்கப்பட்டன. நாங்குநேரித் தொகுதியின் கட்சித் தொண்டர்களும் இதையேதான் சொன்னார்கள், கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.


ஆனால் தயார்படுத்தப்பட்ட அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர்கள் வசந்தகுமார் பக்கமே மேளம் வாசித்திருக்கிறார்கள். அது சமயம் ப.சிதம்பரமும் பிரச்சினையில் சிக்கியிருந்தது அவர்களுக்கு வாய்ப்பாகிவிட்டது. சொன்னதுபோல் வசந்தகுமார் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து எம்.பி.யானார். காங்கிரஸ் ஒரு எம்.எல்.ஏ. சீட்டை இழந்தது. இது தேவை தானா. இதுதானே இப்ப நடந்தது. ஆனாலும் தேர்தலில் ரூபி மனோகரன் கூட்டணிக் கட்சியினர், சொந்தக் கட்சியினரின் தேர்தல் செலவுகளுக்குக் குறையே வைக்க வில்லை. அவரால் முடிந்த அளவுக்கு எதிர் அணியை ஈடுசெய்யும் வகையில் மோதவும் செய்தார். பணப் பொறுப்பைக் கூட திருநாவுக்கரசரின் நம்பிக்கைக்குரியவரிடமே ஒப்படைத்திருந்தாராம் ரூபி மனோகரன்.


ஆனால் இதில், வெளியே தெரியாத சம்பவங்கள்கூட நடந்திருக்கின்றன. குமரியின் அந்த எம்.பி. கூட, நாங்குநேரி பகுதிகளில் தேர்தல் பொருட்டு, "சி'’அளவிலான பெரிய அமௌண்ட்டை, தான் செலவு செய்ததாகப் பில்களைத் தர... அதுவும் மறு பேச்சின்றி செட்டில் செய்யப்பட்டிருக்கிறது. தேர்தல் தலைமைப் பொறுப்பிற்காக திண்டுக்கல்லிருந்து வந்த தி.மு.க.வின் எக்ஸ் அமைச்சரின் லாட்ஜ் வாடகை உட்பட அனைத்து செலவுகளுக்குமான "10 எல்' பில்களும் தடையின்றி செட்டிலாகியிருக்கு.

இந்த அளவுக்குப் பொருளாதாரம், மனித சக்திகள் வீணாகியுள்ளன. இது அவசியமா? ஆராய்ந்து பார்க்காததன் விளைவு... ஒரு எம்.எல்.ஏ. சீட்டை அகில இந்தியக் காங் கிரசே தாம்பாளத்தில் வைத்து எதிரணிக்குத் தாரை வார்த்திருக்கும் கொடுமை, இதுவரை நடந்த தேர்தலில் நடக்காத விஷயம்'' என ஆதங்கப்பட்டார்.