தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் பேத்தி மீது நடந்த தாக்குதலில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜாமீனில் வரமுடியாத செக்சன்களில் எஃப்.ஐ.ஆர். போடப்பட்டிருப்பதால் அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது செய்யப்படுவாரா? என்கிற அதிர்ச்சியும் கூடுதலாக பரவி வருகிறது.
சென்னையில் பரபரப்பாக இயங்கும் சாலைகளில் ஒன்றான வடபழனி 100 அடி சாலையில் கடந்த 30-ந் தேதி இரவு 9.30 மணி அளவில் பறந்து சென்ற இரண்டு கார்கள், ஒன்றை ஒன்று முந்திக்கொள்ள முயற்சிக்கிறது. லஷ்மன் சுருதி சிக்னல் அருகே ஒரு காரை வழிமறித்து நிற்கிறது மற்றொரு கார். வழி மறித்த காரில் இருந்து இறங்கிய ஒரு பெண்ணும் ஒரு இளைஞனும், வழி மறிக்கப்பட்ட காரினுள் உட்கார்ந்திருந்த பெண்மணியிடம், "எதற்கு இப்படி காரை ஓட்டுகிறீர்கள்? யார் நீங்கள்?'' என்று அதட்டலாக கேட்டிருக்கிறார்கள். அதற்கு கோபமாகப் பேசுகிறார் அந்த பெண்மணி. இரு தரப்பிலும் கோபமாகவும், ஆபாச மாகவும், ஒருமையிலும் வார்த்தைகள் தடித்தன. காரில் இருந்து இறங்கிய அந்த பெண்மணியும் அவரது கார் டிரைவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில், விஷயமறிந்து பைக்கில் விரைந்து ஸ்பாட்டுக்கு வந்த அந்த பெண் மணியின் கணவர், இளம் பெண்ணை அறைந்திருக்கிறார். இதனால் அந்த பகுதியே பரபரப்புக்குள்ளானது.
சம்பவத்தை அறிந்து ஓடோடி வந்த போக்குவரத்து போலீசார், இரு தரப்பையும் சமாதானப்படுத்தி விசாரித்த போதுதான், அந்த இளம் பெண்ணும், இளைஞரும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் பேரன் பேத்தி (சுபாஷ், பாரதி) என்பதும், அறைந்த நபர் ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் என்பதும். அந்த பெண்மணி அவரது மனைவி என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தது போலீஸ். இதனை மேலதிகாரியிடம் போலீசார் தெரிவிக்க, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார் அசோக்நகர் காவல்நிலைய உதவி கமிஷனர் தனசெல்வம்.
இரு தரப்பும் சமாதானமாகாததால் ஸ்டேஷனுக்கு வாருங்கள் என அவர்களை அழைத்துச் சென்றார் உதவி கமிஷனர். நடந்த சம்பவத்தை தனது தாத்தா அழகிரியிடம் தெரிவித்தார் அவரது பேத்தி பாரதி. பதறிப்போன அழகிரி அந்த இரவு நேரத்தில் அவசர அவசரமாக ஸ்டேஷனுக்கு வந்தார். ஸ்டேசனுக்கு அழகிரி செல்வது காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு பாஸ் ஆக, காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் ஸ்டேசனில் குவிந்தனர்.
இரு தரப்பும் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டியதால் அவர்களைச் சமாளிக்க முடியாமல் திணறியது போலீஸ். உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இரு தரப்பிலும் புகாரை பெற்றுக் கொண்டு பதிவு செய்து கொள்ளுங்கள் என மேலிடத்திலிருந்து வந்த உத்தரவின்படி இரு தரப்பிலும் புகார் பெறப்பட்டிருக்கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன், டாக்டர் விஜயலட்சுமி, கார் டிரைவர் முத்துராஜா ஆகியோர் மீது அழகிரியின் பேரன் சுபாஷ் கொடுத்த புகாரை பதிவு செய்தனர்.
இவர்கள் மீது ஜாமீனில் வரமுடியாத பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது (க்ரைம் எண்: 261/2022, 30.09.2022). அதே சமயம், அழகிரியின் பேரன் சுபாஷ், பேத்தி பாரதி மீது டாக்டர் விஜயலெட்சுமி கொடுத்த புகார் பதிவு செய்யப்படவில்லை.
இந்த விவகாரம் அரசியலிலும், அதிகாரிகளிடத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், என்ன நடந்தது என்பதையறிய கண்ணன் ஐ.ஏ.எஸ்.ஸை தொடர்புகொண்டு பேசியபோது, "நாங்கள் எந்தத் தவறையும் முதலில் செய்யவில்லை. கோபமாகவும் ஆபாசமாகவும் பேசியது அவர்கள் தான். இந்த பிரச்சனை போலீஸ் விசாரணையில் இருப்பதால் மேற்கொண்டு எதையும் நான் பேச விரும்பவில்லை'' என்பதோடு முடித்துக் கொண்டார்.
கண்ணனுக்கு நெருக்கமான தரப்பினரிடம் விசாரித்தபோது, “கண்ணன் மனைவி சென்ற காரை எம்.எம்.டி.ஏ. 100 அடி சாலையில் இருந்தே ஹாரன் அடித்தபடி ஓவர்டேக் செய்ய அழகிரியின் பேத்தியும் பேரனும் முயற்சித்தனர். அவர்கள் அடித்த ஹாரன் அலறலில் விஜயலட்சுமி பயந்தார். இயல்பாக வரக்கூடிய கோபம் அவருக்கு வந்தது. அழகிரி பேத்தியின் கார் ஓவர்டேக் செய்த போது, அவர்களை கோபமாக திட்டியிருக்கிறார் விஜயலெட்சுமி. அத்துடன் அவர்களது காரை முந்திச் செல்லுமாறு தனது டிரைவரிடம் விஜயலட்சுமி சொல்ல, அவரும் முந்திச்சென்றார்.
இதனால் ஆத்திரமடைந்த சுபாஷ், விஜயலெட்சுமியின் காரை ஓவர்டேக் செய்து வழிமறித்தனர். கீழே இறங்கி வந்த அழகிரியின் மகள் மற்றும் சுபாஷும் பாரதியும் மிக மோசமாக நடந்து கொண்டனர். விஜயலெட்சுமியை அர்ச்சித்தார் சுபாஷ். காரிலிருந்து இறங்கிய விஜயலெட்சுமியிடம், "நான் யார்னு தெரியுமா? காங்கிரஸ் தலைவரோட பேரன்' என்றெல்லாம் திமிராகப் பேச, அந்த சமயத்தில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை அழகிரியின் பேத்தி பாரதி, விஜயலட்சுமியை அறைய கையை ஓங்கியிருக்கிறார். அதனைத் தடுப்பதற்காக விஜயலட்சுமியும் கையை ஓங்க, அங்கே ரசாபாசமாகி விட்டது.
இப்படி பிரச்சனை நடந்து கொண்டிருப்பதை கண்ணனுக்கு இன்ஃபார்ம் பண்ணியிருக்கிறார் விஜயலட்சுமியின் டிரைவர் முத்துராஜா. அதைக் கேட்டு டென்சனாகி ஸ்பாட்டுக்கு வந்த அவர், சுபாஷை அறைந்துவிட்டார். அது உணர்ச்சி வேகத்தில் நடந்த தவறு. அரசியல் செல்வாக்கினாலும் சட்டப் படிப்பை படித்து வருவதாலும் உருவான திமிரில்தான் அழகிரியின் பேத்தியும் பேரனும் அப்படி நடந்துகொண்டனர்'' என்கிறார்கள்.
அழகிரியின் பேரன் சுபாஷ், பேத்தி பாரதி இருவரிடமும் பேச நாம் முயற்சித்த போது அவர்களது தொடர்பு கிடைக்கவில்லை. கே.எஸ். அழகிரியை தொடர்பு கொண்டபோது நமது லைனை அவர் அட்டெண்ட் பண்ணவில்லை. இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று போலீஸ் ஸ்டேசனில் திரண்டிருந்த காங்கிரஸ்காரர்களிடம் விசாரித்தபோது, “அண்ணாநகரில் பரதநாட்டியம் வகுப்பை முடித்துவிட்டு கே.கே.நகருக்கு அழகிரியின் பேரனும் பேத்தியும் திரும்பிக் கொண்டிருந்தனர். எம்.எம்.டி.ஏ. காலனியை தாண்டியதிலிருந்தே பின்னால் வந்த ஒரு ஹோண்டா சிட்டி கார் ஹாரன் அடித்தபடி ஓவர் டேக் பண்ண முயற்சித்தது. காரை உரசுவது போல பயமுறுத்தியது. வடபழனி சிக்னல் வரை பிரச்சனை பண்ணிக்கொண்டே இருந்தது.
லஷ்மண் சுருதி சிக்னலில் இவர்களின் காரை வழிமறித்தார். அந்தப் பெண்மணி வண்டியிலிருந்து இறங்காமலே ஆபாசமாக திட்டினார். வண்டியிலிருந்து இறங்கிய பாரதியும் சுபாஷும் அந்த பெண் மணியிடம் "ஏம்மா இப்டி ஸ்பீடா ஓட்டுறீங்க?' என்று கேட்க, அவரோ கார் கண்ணாடியையே இறக்காமல் செருப்பைத் தூக்கிக் காட்டியிருக்கிறார். மேலும் அந்தப் பெண்மணி, "நான் யார் தெரியுமா? ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவி. தொலைச்சிடுவேன்' என மிரட்டினார். இதனால் வாய்த்தகராறு நடக்க, கீழே இறங்கிய அந்த பெண்மணி, பாரதியிடம் "வாயை மூடுடி' எனச் சொல்லிக்கொண்டே, கன்னத்தில் அறைந்தார். அப்போது பின்னாலேயே வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன், "என்னடா நாயே' எனத் திட்டிக்கொண்டே சுபாஷை அடித்தார். இதனால் சாலையில் களேபரமானது. ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ், சமாதானப்படுத்த முயற்சிக்க, கண்ணன் அடங்கவில்லை. மது அருந்தியிருந்ததால் அவர் பேச்சு மிக மோசமாக இருந்தது. பாரதியையும் சுபாஷையும் ஆபாசமாக திட்டிக்கொண்டே இருந்தார்கள்.
ஸ்டேசனுக்கு அழைத்து சென்றது போலீஸ். விஷயமறிந்து ஸ்டேசனுக்கு வந்தார் அழகிரி. காங்கிரஸ் நிர்வாகிகளும் திரள, காவல்துறை அதிகாரிகளிடம், "பொறுப்புள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தும் அவரது பேச்சும் செயலும் நாகரீகமாக இல்லை. என்னுடைய பேரன் பேத்தி என்பதற்காகவோ, அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதற்காகவோ எந்தச் சலுகையும் காட்ட வேண்டாம். சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுங்கள். அதேசமயம், அவர் மன்னிப்பு கேட்டுவிட்டால் பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம்' எனச் சொன்னார் அழகிரி. மன்னிப்பு கேட்கச் சொல்லி கண்ணனிடம் வலியுறுத்தினர் போலீஸார். ஆனா, அவரோ, "எஃப்.ஐ.ஆர். போட்டுக்கோ; பார்க்க வேண்டிய இடத்தில் பார்த்துக்கிறேன்' என ஓவராக எகிற, "புகார் கொடுங்கள்; நடவடிக்கை எடுக்கிறோம்' என போலீஸ் சொன்னதும், நடந்ததை விவரித்து புகார் கொடுத்தார் சுபாஷ்.
அதன்பேரில் ஜாமீனில் வரமுடியாத செக்ஷனில் வழக்குப் பதிவு செய்தனர். தலைவர் அழகிரி சொன்னது போல, அவர் மன்னிப்பு கேட்டிருந்தால் பிரச்சனை பூதாகரமாகியிருக்காது. மது அருந்தியிருந்ததால் கண்ணனின் பேச்சு எல்லை மீறிப்போனது. அவர் மது அருந்தியதற்கான சான்றிதழும் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், "நடந்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன். புகாரை வாபஸ் வாங்குங்கள்' என மறுநாளிலிருந்து கெஞ்சிக் கொண்டிருக்கிறார் ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன்'' என்று நடந்ததை விவரிக்கின்றனர்.
இதற்கிடையே, அழகிரியின் பேத்தி பேரனுக்கு எதிராக டாக்டர் விஜயலட்சுமி கொடுத்த புகார் பதிவாகாததால் அது குறித்து போலீசாரிடம் விசாரித்தபோது, “புகார் கொடுத்தனர். ஆனால், அது முறையாக இல்லை. கேட்ட கேள்விகளுக்கும் சரியான பதிலை அவர்கள் சொல்லாததால் பதிவு செய்யாமல் கிடப்பில் வைத்திருக்கிறோம். முழு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே, விஜயலட்சுமி, கண்ணனின் மனைவி இல்லை என ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. அது உண்மையா என விசாரித்து வருகிறோம்'' என்றனர்.
இந்த விவகாரம் 30-ந் தேதி இரவு முழுக்க வெடித்துக் கொண்டிருக்க, அக்டோபர் 1-ந் தேதி சிவாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மணிமண்டபத்துக்கு வந்திருந்தார் முதல்வர் ஸ்டாலின். அழகிரியும் அந்த நிகழ்வுக்கு வர, முந்தைய நாள் நடத்த விவகாரத்தை அவரிடம் கேட்டறிந்தார் ஸ்டாலின்.
இந்த நிலையில், கண்ணனை கோட்டைக்கு வரவழைத்து விசாரித்திருக்கிறார் தலைமைச் செயலாளர் இறையன்பு. தன் மீது தவறில்லை என்கிற தொனியில் விளக்கமளித்துள்ளார் கண்ணன்.
ஆனால், கடந்த 10 ஆண்டு காலமாக பெரும்பாலான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் சேவை மனப்பான்மை சுத்தமாக இல்லை. குறுநில மன்னர்கள் போல அதிகாரம் செலுத்துகின்றனர். இதனால் மக்களுக்கும் அதிகாரிகளுக்குமான இடைவெளி அதிகரிப்பதுதான் பொதுவெளியில் இப்படிப்பட்ட எல்லை மீறும் அதிகாரமாக வெளிப்படுகிறது'' என்கிறார்கள் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள்.