பெண் என்பவள் அன்பானவள். மனதில் அழகை சுமப்பவள். பெண்களை மதிக்கும் சமூகம் தான் நாகரீக சமூகமாகும் என பேசினார் தமிமுன் அன்சாரி.
நாகப்பட்டிணத்தில் விதவைப் பெண்கள் வாழ்வுமைச் சங்கத்தின் சார்பில் அகில உலக பெண்கள் எழுச்சி தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் நாகப்பட்டிணம் சட்டமன்ற உறுப்பினரும, மஜக பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய அவர்,
மகளிர் தினம் என்ற பெயரில் நட்சத்திர விடுதிகளில் கூடி கலைபவர்களுக்கு மத்தியில் இந்த தினத்தை அர்த்தமுள்ளதாக, சாமானிய பெண்களை அழைத்து திரட்டிக் நடத்தியதற்காக 'விதவைப் பெண்கள் வாழ்வுரிமை சங்க'த்திற்கு எனது மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்னை இந்திரா காந்தி, ஜெயலலிதா அம்மா, அன்னை சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, மாயாவதி, மெஹ்பூபா முப்தி என பல பெண் ஆளுமைகள் நமது நாட்டின் வரலாற்றில் இடம் பெற்றுள்ளார்கள்.
அமெரிக்காவில் ஒரு ஹில்லாரி கிளிண்டன் என்ற ஒரு பெண்மணி அதிபராக வரமுடியவில்லை என்பதை நினைக்கும்போது, நமது நாட்டில் பெண்கள் அரசியல் அதிகாரத்தில் முன்னேறி இருக்கிறார்கள்.
அதே நேரம் பல இன்னல்களும் இங்கு நடக்கிறது. தினமும் 22 பெண்கள் நமது நாட்டில் வரதட்சனை கொடுமையால் உயிரிழக்கிறார்கள். குடும்ப வன்முறை சட்டம் இருந்தும் கூட, 80% பெண்கள் தினமும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்படுகிறார்கள்.
விழுப்புரத்தில் 13 வயது சிறுமி தனம் கற்பழிக்கப்பட்டதும், தூத்துக்குடியில் 5 வயது குழந்தை சிவகாமி கற்பழிக்கப்பட்டதும், நேற்று இரவு திருச்சி-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் கணவருடன் பைக்கில் சென்ற 3 மாத கர்ப்பிணி உஷா போலிசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததும் வேதனையளிக்கிறது.
பெண் என்பவள் அன்பானவள். மனதில் அழகை சுமப்பவள். பெண்களை மதிக்கும் சமூகம் தான் நாகரீக சமூகமாகும். ஒரு பெண்ணின் சுதந்திரம், கல்வியுறிமை, திறமை, வாழ்வுரிமை ஆகியவைகளை மதிக்க வேண்டும்.
14 நூற்றாண்டுகளுக்கு முன்பே விதவை பெண்களின் மறுவாழ்வுக்கு நபிகள் நாயகம்தான் வித்திட்டார். தன்னை விட வயது மூத்த விதவை பெண்ணான கதீஜா என்பவரைத்தான் அவர் திருமணம் செய்து, தன்னையே அதற்கு முன்மாதிரியாக்கினார்.
ஆனால் இன்றும் நாகரிக வளர்ச்சியடைந்த காலகட்டத்திலும் கூட பெண்களை இயந்திர மனநிலையிலையே வைத்திருக்கிறோம். அவர்களின் தியாகங்களை மதிப்பதில்லை. உழைப்பை போற்றுவதில்லை.
ஒரு முறை தந்தை பெரியாரை சந்திக்க ஒரு இளைஞர் வந்தார். அவரிடம் பெரியார் உங்கள் அப்பா என்ன செய்கிறார் என்றதும், அவர் வேலைக்கு செல்கிறார் என பதிலளித்தார். அம்மா என்ன செய்கிறார்? என்றதும், 'அவங்க வீட்ல இருக்காங்க' என்றார்.
உடனே பெரியாருக்கு கோபம் வந்து விட்டது. உங்களுக்கு சமைப்பது யாரு? டீ, காபி கொடுக்கிறது யாரு? துணி துவைக்கிறது யாரு? வீட்டை சுத்தம் செய்வது, நிர்வாகம் செய்வது யாரு? என்று அடுக்கடுக்காக பதில் கேள்வி கேட்டதும், வந்தவர் 'அம்மா' என பதறிப் போய் கூறினார். இவ்வளவு வேலையும் செய்கின்ற 'அம்மா'வை 'சும்மா வீட்ல இருக்காங்க' என்பது நியாயமா? என பெரியார் கேட்டார். அதனால் தான் அவரை 'பெரியார்' என்கிறோம்.
இன்று அந்த பெரியாரின் சிலையை உடைப்போம் என்கிறார்கள். அதன் மூலம் இன்று அவரின் ஆதிக்க எதிர்ப்பு கொள்கைகளை தகர்க்க நினைக்கிறார்கள். தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு உதவித் தொகை வழங்கி, விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டங்களை தொடங்கினார்கள். ஜெயலலிதா அம்மா அவர்களின் ஆட்சியில் தொட்டில் குழந்தை திட்டத்தையும், பாலுட்டும் தாய்மார்களுக்கு பொது இடத்தில் தனி அறை வழங்கும் திட்டத்தையும், மானிய விலையில் ஸ்கூட்டி என்ற திட்டத்தையும் தந்தார்கள்.
பெண் சேவை எனும் போது அன்னை தெரஸாவைத்தான் நாம் குறீயீடாக பார்க்கிறோம். அவர்தான் ஐரோப்பாவிலிருந்து ஏழை நாடாக இந்தியாவுக்கு வருகை தந்து, தொழு நோயாளிகளுக்காக, அழுக்கு நிறைந்த கல்கத்தாவில் ஆஸிரமம் அமைத்து சேவை செய்தார்.
இன்று கிறிஸ்த்தவ தொண்டு இயக்கங்களின் பிண்ணணியில், இந்த 'விதவை பெண்கள் வாழ்வுரிமை சங்கம்' பெண்களை தன் முனைப்பு உள்ளவர்களாக மாற்றி அரசிடம் கையேந்தாமல், சுய தொழில் நடத்துபவர்களாக மாற்றியிருப்பதை பாராட்டுகிறேன். உங்கள் பணி தொடரட்டும். அனைவருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்கள். இவ்வாறு பேசினார்.