Skip to main content

நான் அடிக்காத விசிலா..? மேடையிலேயே கண்டித்த கே.என்.நேரு..! அதிர்ச்சியடைந்த திமுக எம்.எல்.ஏ.!!!

Published on 17/08/2020 | Edited on 18/08/2020

 

k n nehru

 

 

நாடாளுமன்றத் தேர்தலில் உதயசூரியன் உதித்தாலும் மேற்கு மாவட்டங்கள் இப்போதும் தி.மு.க.வுக்கு சவாலானவைதான். பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் மூலம் கிடைத்த சர்வே ரிப்போர்ட்டுகளில் மக்கள் ஆதரவு சாதகமாக இருந்தாலும், மேற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள்தான் கட்சியின் வெற்றிக்கு எதிரியாக இருக்கிறார்கள் எனத் தெரியவரவே, கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என் நேரு, கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த திண்டுக்கல் மேற்கு மாவட்ட அமைப்பாளர் சக்கரபாணி எம்.எல்.ஏ. இருவரையும் கோவை மாவட்டத்தை ஆய்வு செய்ய அனுப்பினார் ஸ்டாலின்.


கோவை தி.மு.க.வின் 4 மாவட்டங்களிலும் ஆய்வுக் கூட்டம் நடந்தது. மாநகர கிழக்கு மாவட்டத்தின் மாவட்ட அமைப்பாளரும், சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏவுமான கார்த்திக் மீது அதிக புகார் கடிதங்கள் வந்திருக்கின்றன என நேரு ஆரம்பித்ததுமே, கார்த்திக் மீதான புகார்களை நிர்வாகிகள் கொட்ட ஆரம்பித்தனர். கட்சிக்காரர்களை மதிப்பதில்லை என்பதில் தொடங்கி, கம்மவா நாயுடுவுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கிறார் என்பது வரை புகார்களில் அனல் பறந்தன. கொங்கு வோளாளக் கவுண்டர் சமுதாயத்தின் கட்சியாக அ.தி.மு.க. அடையாளப்பட்டிருக்கும் நிலையில், அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகளை அமைச்சர் வேலுமணியின் ஆட்கள் என கார்த்திக் ஓரங்கட்டுவதும் புகாராக வெளிப்பட்டது. மேடையிலேயே கே.என்.நேரு, கார்த்திக்கை கண்டித்து, இதோட நிறுத்திக்கணும் என்றதும் முகம் வெளிறிப் போய்விட்டதாம் கார்த்திக்குக்கு.

 

r.sakkarapani mla

 

அதன்பிறகு, சக்கரபாணி எம்.எல்.ஏ... "தம்பிகளா உங்கள பணிவோடு கேட்டுக் கொள்கிறோம். தி.மு.க.வை இந்த முறை இங்கே ஜெயிக்க வைக்க வேண்டும்... ''எனப் பேச... இடைமறித்த நேரு, "கவுண்டர்களோட பேசறதுக்குத்தான் பெரிய கவுண்டரான உன்னையக் கூட்டிட்டு வந்திருக்கேன்...'' எனச் சொல்ல, விசில் சத்தம் பறந்திருக்கிறது. நான் அடிக்காத விசிலா என இறுக்கத்தைத் தளர்த்தியிருக்கிறார் நேரு.

 

coimbatore

 

மாநகர மேற்கு உடன் பிறப்புகளோ... "கோவை மாநகரத்தில் 100 வார்டுகள் இருக்கு. அதுல 71 வார்டுகளை மாநகர கிழக்குக்கு கொடுத்திருக்கீங்க. 21 வார்டுகள்தான் மேற்குக்கு கொடுத்து இருக்கீங்க. எங்க மாவட்ட அமைப்பாளர் முத்துசாமி குனியமுத்தூர் பகுதி கழகச் செயலாளரா 10 வருஷத்துக்கும் மேலா இருக்காரு. ஆனா அதற்கு மா.செ.வா கார்த்திக்கைப் போட்டு இருக்கீங்க. முத்துசாமி பகுதியிலேயே அவரைப் போராட்டத்துக்கு கூப்பிட முடியலை'' என பார்டர் பிராப்ளத்தை கிளப்பியுள்ளனர். பத்மாலயா சீனிவாசன் தனக்கு 19 பேரூராட்சி வார்டு மெம்பர் ஆதரவு இருந்தும் ஒ.செ. பதவியை பறித்த வடக்கு மாவட்ட அமைப்பாளர் சி.ஆர். ராமச்சந்திரன் மீது புகார் வாசிக்க, சி.ஆர்.ஆர். முகத்தில் ஈயாட வில்லை.


புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் தென்றல் செல்வராஜை மேடைக்கு வரவழைத்த நேரு... "கண்காணிப்பு குழு தலைமைக்கு உங்கள் மேல் அளித்த புகாரை நீங்களே படியுங்கள்...'' எனச் சொல்ல, இதனை எதிர்பாராத தென்றல் செல்வராஜ் வியர்க்க விறுவிறுக்க அவற்றைப் படித்துள்ளார். சார்பு அணிகளுக்கான போஸ்டிங், 2016 தேர்தலில் தி.மு.க வேட்பாளர் தமிழ்மணியைத் தோற்கடிக்க அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தாமோதரன் போட்ட ப்ளானுக்கு உதவி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு டஃப் கொடுக்க முடியாத நிலை எனத் தன் மீதான புகார்களை தென்றல் செல்வராஜ் தடுமாற்றத்துடன் படித்து முடிக்க, அவருக்குத் துணைபோன நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீதும் நடவடிக்கை உண்டு என்றும், ஒன்றியப் பிரிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.

 

http://onelink.to/nknapp

 

ஆய்வுக் கூட்டம் முடிந்தபோது... நேரு, கோவை மாநகர கிழக்கு மாவட்டத்தில் கார்த்திக்கால் ஒதுக்கப்பட்ட மு.மா.செ நாச்சிமுத்து, மு.மாநகரச் செயலாளர் வீர கோபால், கவுன்சிலரும், வடக்கு தொகுதியில் வேட்பாளராய் நின்ற மீனா லோகுவையும் அழைத்து ஸ்டாலினிடம் செல்போனில் பேச வைத்தாராம். அவர்களின் பதவிகள் குறித்து ஸ்டாலினும் நம்பிக்கை அளித்துள்ளார்.

 

கே.என்.நேருவும் சக்கர பாணியும் கோவை தி.மு.க நிர்வாகிகளை கதிகலங்க வைத்திருக்கிறார்கள்.