Skip to main content

முதல்வர் வேட்பாளர் யார்? ஓபிஎஸ்-இபிஎஸ் வசம் ஒப்படைத்த அதிமுக செயற்குழு!

Published on 28/09/2020 | Edited on 28/09/2020

 

kp munusamy

 

அ.தி.மு.க.வின் முதல் வேட்பாளர் யார் என்பதை அக்டோபர் 7-ஆம் தேதி ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்., இருவரும் கூட்டாக அறிவிப்பார்கள் என செயற்குழு முடிவெடுத்திருப்பதாக அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்திருக்கிறார். 

 

முதல்வர் வேட்பாளர் யார் என்கிற பஞ்சாயத்து கடந்த சில மாதங்களாகவே அ.தி.மு.க.வில் வெடித்தபடி இருக்கிறது. முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் எனச் சொல்லி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதெல்லாம் முடியாது; தேர்தல் முடிந்ததும் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் என்றும், அதற்கு முன்பாக பொதுக்குழுவில் எடுத்த முடிவின்படி கட்சிக்கு 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் போர்க்கொடி உயர்த்தினார். 


இதனால், இரு தரப்பு ஆதரவாளர்களும் முஷ்டியை உயர்த்துவதால் சமீபகாலமாக அ.தி.மு.க.வில் அதிகாரப் போட்டி விஸ்வரூபம் எடுத்து வந்தது. இந்த நிலையில், இதுகுறித்து செயற்குழுவைக் கூட்டி விவாதிப்பது என அண்மையில் தீர்மானிக்கப்பட்டது. அதனால், அ.தி.மு.க.வின் செயற்குழு மீது, மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. அதன்படி, இன்று (28-ஆம் தேதி) காலையில் கட்சியின் தலைமையகத்தில் செயற்குழு கூடியது. 


கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சுமார் நாலரை மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில், காரசார விவாதங்களும் நடந்துள்ளன. ஆனால், முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் இறுதியாக எந்த முடிவும் எடுக்கப்படாமல், இ.பி.எஸ்சும் ஓ.பி.எஸ்சும் இணைந்து முடிவெடுக்க செயற்குழுவில் ஒப்புதல் அளித்து கூட்டத்தை முடித்திருக்கிறார்கள். 


"முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டு தேர்தலை எதிர்கொள்வதுதான் சரியாக இருக்கும்" என எடப்பாடி ஆதரவு அமைச்சர்கள் பலரும் வலியுறுத்தியிருக்கிறார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவாக சில அமைச்சர்கள் களமிறங்கினர். அவர்கள், "கட்சியை இரட்டைத் தலைமையில் வழி நடத்திச் செல்லும் போது, முதல்வர் வேட்பாளர் என ஒருவரை முன்னிறுத்துவது நிறைய குழப்பங்களை உருவாக்கும். அதனால், கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிக்காட்டுதல் குழு அமைக்க வேண்டும். அதனை அமைப்பதில் உங்களுக்கு என்ன சிக்கல் வந்து விடப்போகிறது‘’ என எகிறியிருக்கிறார்கள். 

 

Ad


இதே ரீதியிலேயே விவாதங்கள் நடந்த நிலையில், கடைசியில், "முதல்வர் வேட்பாளர் அறிவித்து தேர்தலைச் சந்திக்கலாமா? அல்லது இரட்டை தலைமையிலேயே தேர்தலைச் சந்திக்கலாமா? என்பதை முடிவெடுக்கும் அதிகாரத்தை இருவர் வசமும் செயற்குழு ஒப்படைக்கிறது. இருவரும் கலந்துப்பேசி ஒரு வாரத்தில் முடிவுக்கு வாருங்கள்’’ என்று முதல்வர் வேட்பாளர் பிரச்சனைக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது அ.தி.மு.க செயற்குழு.