திராவிட இயக்க மூத்த தலைவரும், எம்.ஜி.ஆர். கழகத்தன் நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் தனது 94வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். ஆர்.எம்.வீரப்பன் பிறந்தநாளையொட்டி அவரது இல்லத்திற்கு இன்று காலை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.
அப்போது, தனது 90வது பிறந்தநாளின்போது கலைஞர் தன்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததை நினைவுகூர்ந்ததுடன், அதன்பிறகு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வரும் மு.க.ஸ்டாலினுக்கு ஆர்.எம்.வீரப்பன் நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து அவர்கள் பேசிக்கொண்டபோது, ஆல் இந்திய ரேடியோவில் இந்தி ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இந்திக்கும், ஆங்கிலத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து தமிழை பின்னால் தள்ளிவிட்டனர். இதற்கு எதிராக நீங்க ஒரு போராட்டம் நடத்த வேண்டும் என்று ஸ்டாலினிடம் தனது பிறந்த நாள் வேண்டுகோளாக வைத்துள்ளார் ஆர்.எம்.வீரப்பன். அதுக்கு என்னென்ன செஞ்சிருவோம் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.
எம்ஜிஆருடன் நெருக்கமான நண்பராக பழகிய ஆர்.எம்.வீரப்பன், சத்யா மூவிஸ் என்ற பட நிறுவனத்தை உருவாக்கி, எம்ஜிஆரை கதாநாயகனாக வைத்து ‘காவல்காரன்’ ’ரிக்ஷாகாரன்’ ‘இதயக்கனி’ ‘நான் ஆணையிட்டால்’ போன்ற படங்களை தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த ‘ராணுவவீரன்’ ‘மூன்றுமுகம்’ ‘தங்கமகன்’ ‘பாட்ஷா’ போன்ற படங்களையும், கமலஹாசன் நடித்த இரண்டு படங்களையும் சேர்த்து மொத்தம் 25 படங்களை சத்யா மூவிஸ் சார்பாக தயாரித்து உள்ளனர்.
ஆர்.எம்.வீரப்பன் சட்டமேலவை உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா அமைச்சரவைகளில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.