பெண் வேடமிட்டு ரீல்ஸ் செய்யும் ஆண் மேக்கப் கலைஞர் தன்னுடைய செயலால் பல்வேறு கிண்டலுக்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகி இருக்கிறார். ஆனாலும் அதையும் கடந்து தன்னம்பிக்கையாக வளர்ந்து வரும் செலிபிரிட்டிகளுக்கான மேக்கப் கலைஞர் ஷெல்டனுடன் ஒரு சிறப்பு நேர்காணல்.
சிறு வயதிலிருந்தே கலைகளில் எனக்கு ஆர்வம் அதிகம். கல்ச்சுரல் நிகழ்ச்சிகளில் எப்போதும் முன்னணியில் இருப்பேன். நடிப்பிலும் ஆர்வம் இருந்தது. ஆனால் அதற்குள் நான் செல்லவில்லை. மேக்கப்பில் எப்போதும் இருந்த ஆர்வம் இப்போது வரை தொடர்ந்து வருகிறது. என்னுடைய ஊர் தென்காசி மாவட்டத்தில் இருக்கிறது. காலேஜ் முடித்து நான் வந்தபோது இருந்த சென்னைக்கும் இன்றைய சென்னைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. என்னுடைய இந்த வளர்ச்சிக்குக் காரணம் சென்னை தான். நம் நாட்டில் மட்டும்தான் யார் எதைச் செய்தாலும் குறை சொல்வார்கள். வெளிநாட்டில் 18 வயதுக்குப் பிறகு பெற்றோர் கூட தலையிட மாட்டார்கள்.
பெண் வேடமிட்டு நான் வருவது என்னுடைய விருப்பத்திற்காக மட்டும்தான். மூன்றாம் பாலினத்தவராக மாற வேண்டும் என்று நான் நினைத்திருந்தால் எப்போதோ மாறியிருப்பேன். எனக்கு இது பிடித்திருக்கிறது. என்னுடைய தொழிலில் நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு மற்றவர்களுக்கு உரிமை கிடையாது. நான் பெண் வேடமிட்டு வீடியோ போடுவதால் யாருக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் பரதநாட்டியம் ஆடினேன். அப்போது என்னுடைய சகோதரர் தான் எனக்கு மேக்கப் செய்தார். அதை என் அம்மா பார்த்திருக்கிறார்.
வட இந்திய இளைஞர்கள் இயல்பாகவே பெண் தோற்றம் போல் சில விஷயங்களை ஏற்படுத்திக் கொள்வார்கள். தென்னிந்தியாவில் தான் பெண் தோற்றம் என்றால் அசிங்கம் என்கிற எண்ணம் இருக்கிறது. என்னுடைய கெட்டப்பிற்காக என்னை இவர்கள் இழிவு செய்வதைப் பற்றி இப்போது நான் கவலைப்படுவதில்லை. பொதுவெளியில் பெண்கள் சந்திக்கும் பாலியல் ரீதியிலான பிரச்சனைகளைக் கூட நான் சந்தித்திருக்கிறேன். மேக்கப் என்பது எப்போதுமே சிம்பிளாக இருக்க வேண்டும். நடிகை ஶ்ரீரெட்டி அவர்கள் ரொம்ப நல்ல மனிதர். அவரோடு பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது.
அம்மாவுக்குப் பிறகு வாழ்க்கையில் எதுவுமே இல்லை என்று நினைத்தேன். அதன் பிறகு என்னுடைய முடிவுகளை நானே எடுக்க ஆரம்பித்தேன். என்னை விரும்பி, என்னைப் புரிந்துகொண்டு என்னோடு வாழ வேண்டும் என்று ஒரு பெண் நினைத்தால் நிச்சயம் அவரை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். எனக்கு பெரிதாக எந்த ஆசைகளும் கிடையாது. எது கிடைக்கிறதோ அதை வைத்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.