Skip to main content

முதன் முதலில் அப்படிப்பட்ட இயக்கத்தைத் தோற்றுவித்தது தமிழ்நாடுதான்... வாஜ்பாய் நக்கீரனுக்கு அளித்த சிறப்பு பேட்டி... பகுதி 2

Published on 16/08/2018 | Edited on 16/08/2018

இந்தியப் பிரதமரை தமிழ் பத்திரிகைக்காக தனி பேட்டி காண்பது பகீரத பிரயத்தனம் என்பது தெரிந்தும், நக்கீரன் தனது முயற்சியை உறுதியுடன் தொடங்கியது. தேசிய ஏடுகள் தவிர, வேறு எந்த மாநில மொழி ஏட்டிற்கும் பிரதமர் வாஜ்பாய் அதுவரை சிறப்பு பேட்டி அளித்ததில்லை. 1998 செப்டம்பரில் முதல்முறையாக நக்கீரனுக்கு பேட்டியளித்தார் அடல் பிஹாரி வாஜ்பாய். அப்போது அவர் நக்கீரன் குறித்து கூறியது...

 

vaajpeyee


 

நக்கீரன்: தமிழ் மக்களைப் பற்றியும், தமிழ்நாட்டைப் பற்றியும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 
 

வாஜ்பாய்: இந்தியாவின் பல்வேறு பகுதிகளையும் நான் நேசிக்கிறேன். அதுபோலவே தமிழ் மக்களையும், தமிழ்நாட்டையும் நான் நேசிக்கிறேன். தமிழர்களுக்கென்று பெருமைமிகு வரலாறு இருக்கிறது. அதுபோலவே தமிழ் மக்கள் தங்கள் மொழி மீது அபாரமான பற்று வைத்திருக்கிறார்கள். தமிழ்க் கலாச்சாரம் குறித்தும், அவர்களுக்கு பெருமையும் பெருமிதமும் உண்டு. என்னைப் பொறுத்தவரையில் வட்டார மாநிலப் பற்றும் பெருமையும் தேசியப்பற்று, பெருமைக்கு எதிரானவை என்று ஒருபோதும் கருதுவதில்லை.

 

 

 

தமிழ்நாட்டின் பண்டைய வரலாறு - தற்கால வரலாறு ஆகியவை தேசிய பார்வையை உள்ளடக்கியதாகவே அமைந்திருப்பதைக் காணலாம். இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் மக்கள் ஆற்றிய பங்கும் பணியும் மகத்தானவை. இந்த சந்தர்ப்பத்தில் இன்னொரு விஷயத்தையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்த துணிச்சலும் திறமையுமிக்க மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலும குறிப்பாக தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் எல்லாம் வாழ்கிறார்கள். அவர்களைப் போலவே, தமிழர்களும் மேற்கண்ட எல்லாப் பகுதிகளிலும் குடியேறி வாழ்ந்து வருகிறார்கள். உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழ் மக்களின் வாழ்க்கையில் அமைதியும், எல்லா வளமும், நலன்களும் நிறைந்திட வாழ்த்துகிறேன்.

 

 

 

நக்கீரன்: தமிழகத்தில் நிலவும் திராவிட பாரம்பரியம் பற்றி உங்கள் கருத்து என்ன?


வாஜ்பாய்: நமது தேசிய பாரம்பரியத்தில் மிகவும் உயர்ந்த பெருமைமிக்க பாரம்பரியமாக திராவிட பாரம்பரியம் திகழ்கிறது. இந்தியாவின் தனிப்பெருமையாக விளங்கும் நமது ஆலயங்களின் சிற்பக் கலை சிறப்புகளுக்கு தமிழகமே தாயகம் என்பதை யார்தான் மறுக்க முடியும்? தேசபக்தியின் சிறப்பை விளக்கும் வகையில் சமீபகாலத்தில் வெளிவந்த திரைப்படங்கள் தமிழகத்தின் தயாரிப்புகள் என்பதைத்தான் யார் மறுக்க முடியும்? சமூக நீதிக்காக உருவாக்கப்பட்ட இயக்கங்கள் தற்காலத்தில் பல உண்டு. ஆனால் முதன் முதலில் அப்படிப்பட்ட இயக்கத்தைத் தோற்றுவித்தது தமிழ்நாடுதான் என்பதையும் நாம் மறக்க முடியுமா?