சிறிய பொறுப்பில் இருப்பவர்கள் நூறு, இருநூறு லஞ்சம் வாங்குவார்கள். இந்திய சிவில் விமான போக்குவரத்துத் துறையின் தலைமை இயக்குநராக இருப்பவர் என்ன லஞ்சம் வாங்குவார் என நினைக்கிறீர்கள்? விமானத்தையே லஞ்சமாக வாங்கி, இந்தியாவை அதிரவைத்திருக்கிறார் கேப்டன் அனில் கில்.
கடந்த மாதம்தான் இந்த விஷயம் அரசல் புரசலாக அடிபட ஆரம்பித்தது. ஒரு ஊழல் ஒழிப்புத் தன்னார்வலர் ஒருவர் கடந்த மாதம், விமானப் பயிற்சி நிறுவனங்களிடமிருந்து அனில் கில் லஞ்சம் வாங்குவதாகவும், அந்த லஞ்சத்தையும் பணமாகப் பெறாமல் அவர்கள் இயக்கும் விமானங்களை, குறைந்த வாடகைக்குப் பெற்று, விமானப் பயிற்சி நிறுவனங்களுக்கே நல்ல வாடகைக்கு விட்டு வருடத்துக்கு ரூ 90. லட்சம் லட்சம் வரை மோசடி செய்திருப்பதாகவும் புகாரளித்தார். விமான பயிற்சி நிறுவனங்கள் ஏன் கில்லுக்கு லஞ்சம் தரவேண்டும்?
இந்த விமான பயிற்சி நிறுவனங்கள், பயிற்சியளித்தபின் அந்த மாணவர்கள் உரிமம் பெற கில்லிடம்தான் வரவேண்டும். அது போதாதா? இதில் இரண்டு விதமாக லஞ்சம் பெற்றிருக்கிறார் கில். ஒன்று, அந்த பயிற்சி நிலையங்கள் லஞ்சத்தைப் பணமாகத் தந்துவிட வேண்டும் அல்லது கில்லின் உறவினர்கள் வைத்திருக்கும் விமான பயிற்சி நிலையத்துக்கு மற்ற விமான பயிற்சி நிலையங்கள் சலுகை விலையில் விமானத்தை வாடகைக்குத் தந்து உதவ வேண்டும்.
விஷயம் தெரிந்ததும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அதிர்ந்துபோனது. ஏனெனில், இதில் இரண்டு விஷயங்கள் உள்ளடங்கியுள்ளது. தனது சுயலாபத்துக்காக சட்டத்தை மீறி லஞ்சம் வாங்குவது, லஞ்சத்துக்குக் கைமாறாக, இத்தகைய விமானப் பயிற்சி நிலையங்கள் கொஞ்சம் பாதுகாப்பில்லாத விமானங்களை இயக்கினாலும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது.
சில மாதங்களுக்கு முன்பு ரெட் பேர்ட் என்ற விமானப் பயிற்சி நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு பயிற்சி விமானங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாயின. இதையடுத்து இந்த நிறுவனத்தின் மீது தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, விஷயம் அம்பலமானதும், “விசாரணை நிறைவு பெறும் வரை அனில் கில் தனது அலுவலகத்தையும், நியூ டெல்லியையும் விட்டு எங்கும் செல்லக் கூடாது” எனத் தடை விதித்துள்ளார். தற்போது இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், விமான போக்குவரத்துத் துறையில் நடந்த மிகப்பெரிய மோசடியாக இது இருக்கும் என்கிறார்கள். ஆனாலும் அனில் கில் அரசியல்வாதிகளைப் போலவே எந்த விதி மீறலையும் மேற்கொள்ளவில்லை என இப்போது வரை தைரியமாகப் பேசிவருகிறார்.