1951 ல் இருந்து 1990 வரை ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. 1952ல் இருந்து காங்கிரஸைச் சேர்ந்த ஹீராலால் சாஸ்திரி, வெங்கடாச்சாரி, ஜெய் நாராயணன் வியாஸ், டீக்காராமன், மோகன்லால் சுகாத்தியா, பர்கத்துல்லாகான், ஹரி தேவ் ஜோஷ், ஜெகன்நாத், ஷிவ் சரண் மத்தூர், ஹீராலால் தேவ்பூரா, ஹரி தேவ் ஜோசி மாறி மாறி முதல்வர் நாற்காலியில் அமர்ந்தனர். மோகன்லால் சுகாத்தியா 1954ல் முதலமைச்சர் பதவியில் அமர்ந்தார். அது முதல் தொடர்ச்சியாக 17 ஆண்டுகள் 1971 வரை ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக பதவியில் இருந்தார். மோகன் லால் சுகாத்தியா முதல்வரானபின்தான் ராஜஸ்தான் மாநிலம் வளர்ச்சி பாதையில் தட்டுத் தடுமாறி எழத்துவங்கியது. மாடர்ன் ராஜஸ்தானின் உருவாக்கத்துக்கு அடிக்கல் நாட்டியவர் இவர்.
இந்திராகாந்தியால் நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு, பின் அது திரும்பப்பெறப்பட்ட பின் நடைபெற்ற தேர்தலில் ஜெயபிரகாஷ் நாராயணன் தொடங்கிய ஜனதாதளம் கட்சி ராஜஸ்தானில் ஆட்சி அமைத்தது. பைரன் சிங் ஷெகாவத் 1977 முதல் 1980 வரை என இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். காங்கிரஸ் சரித்திரத்தை ராஜஸ்தானில் உடைத்து முதல்வரான பைரன் சிங் ஷெகாவத் ஆட்சி அடுத்த இரண்டரை ஆண்டுகளில் கலைந்தது. மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் என்கிற மலையோடு மோதிக்கொண்டு இருந்தார் ஷெகாவத். இவரது ஆட்சி கலைக்கப்பட்டபின் 1980ல் பாஜகவில் இணைந்தார்.
காங்கிரஸை எதிர்த்து அரசியல் செய்தபடியே இருந்தார். 1989ல் பாரதிய ஜனதா கட்சி – ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பைரன் சிங் ஷெகாவத் முதலமைச்சராக பொறுப்பு ஏற்றார். தங்களது கோட்டையில் பாஜக கொடியா என அதிர்ந்தது காங்கிரஸ் கட்சி. மத்திய காங்கிரஸ் அரசு இரண்டு ஆண்டுகள் அவருக்கு நெருக்கடி தந்தது. ராஜஸ்தான் மாநில பாஜக அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது. ஒரு வருடம் ஜனாதிபதி வழியாக ஆட்சி நடத்திய காங்கிரஸ் 1993ல் தேர்தலை நடத்தவைத்தது. மீண்டும் பாஜக – ஜனதா தளம் கூட்டணி பெரும் பெற்றி பெற்றது. கடந்த காலத்தை விட இந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெற்றது பாஜக. இந்த முறை 5 வருடங்கள் முழுமையாக ஆட்சி செய்தார் ஷெகாவத்.
விஜயராஜே சிந்தியா
1998ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பைரன்சிங் ஷெகாவத் எதிர்கட்சி தலைவரானார். காங்கிரஸில் இருந்த 7 முதல்வர்களுடன் அரசியல் செய்த ஷெகாவத் அசோக்குடனும் அரசியல் செய்தார். சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக இருந்தவருக்கு இந்திய குடியரசு துணை தலைவர் பதவி தரப்பட்டு அரசியலில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். 1952 முதல் 1998 வரை ராஜஸ்தான் மாநில எம்.எல்.ஏவாக இருந்த வரலாற்றுக்கு சொந்தக்காரரான ஷெகாவத்தை ஓரம் கட்டியது பாஜக தலைமை. அதற்குக் காரணம், ராணியான வசுந்தரா ராஜே சிந்தியா.
ராஜஸ்தானின் குவாலியர் சமஸ்தானத்தின் ராஜபுத்திர வம்சத்தில் பிறந்த மகாராஜா ஜிவாஜிரோ – மகாராணி விஜயராஜே சிந்தியாவின் நான்காவது மகளாக 1953ல் பிறந்தவர் வசுந்தரா ராஜே சிந்தியா. தமிழகத்தில் கொடைக்கானலில் உள்ள கான்வென்ட்டில் படித்தவர், கல்லூரிக் கல்வியை மும்பை பல்கலைகழகத்தின் சோபியா கல்லூரியில் அரசியல், பொருளாதாரத்தில் பட்டப்படிப்பை முடித்தார். ராஜஸ்தானில் உள்ள தோல்பூர் சமஸ்தானத்தில் மகாராஜாவான ஹேமந்த் சிங்கை 1972ல் திருமணம் செய்துவைத்தனர். இந்த தம்பதிக்கு துஷ்யந்த்சிங் என்கிற மகன் பிறந்த சில ஆண்டுகளில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. ஹேமந்த்சிங், பவானிசிங் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டதால் கணவரை விட்டு சட்டரீதியாக அல்லாமல் பிரிந்து வாழ்கின்றார் வசுந்தரா.
கணவன் – மனைவி இடையிலான விரிசலில் வசுந்தராவின் மனதின் ஓரமாக இருந்த அரசியல் ஆசை நன்றாகத் துளிர்விடத்துவங்கியது. வசுந்தராவின் தாயார் விஜயா ராஜே சிந்தியா, பாஜகவில் தீவிரமாக இருந்தார். 1957ல் மத்திய பிரதேசத்தில் உள்ள குணா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார் மகாராணி விஜயாராஜே சிந்தியா. காங்கிரஸ் கட்சியின் சார்பில்தான் போட்டியிட்டார், வெற்றி பெற்றார். அடுத்த தேர்தலில் அப்படியே மாறியிருந்தார். 1980ல் பாஜகவின் முன்னணி தலைவர்களில் ஒருவராக உருவாகியிருந்தார் விஜயாராஜே சிந்தியா. ராமஜென்ம பூமி விவகாரத்தில் தீவிரமாகயிருந்தார். 2001ல் அவர் இறக்கும் வரை பாஜகவின் முகமாக மத்தியபிரதேசத்தில் இருந்தார். இவருக்கு கட்சியில் இருந்த செல்வாக்கால் மகள்களை பாஜகவில் உயர் பொறுப்புகளுக்குக் கொண்டு வர முடிந்தது.
தேர்தலில் தொடர்ச்சியாக போட்டியிட்டு வெற்றி பெற்று வந்த முன்னாள் மகாராணியாருக்கான மரியாதையை கட்சியில், மாநில நிர்வாகத்தில், மக்கள் தந்தாலும் உத்தரவு போடும் இடத்தில், தான் இல்லையே என்கிற ஏக்கம் விஜயாராஜே சிந்தியாவுக்கு இருந்தது. தாயின் இந்த ஏக்கம் வசுந்தரா ராஜேவுக்கு சிறு வயதில் இருந்தே ஆசையாக உருவாகியது. இதனால் தாயைப்போலவே தானும் அரசியலுக்குள் நுழைந்து முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டார்.
அத்வானி வாஜ்பாயுடன் பைரன் சிங் ஷெகாவத்
அரசியலில் தீவிர கவனம் செலுத்த துவங்கினார் வசுந்தரா. 1984ல் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1985ல் முதன் முதலாக ராஜஸ்தானின் தோல்பூர் தொகுதியில் இருந்து சட்டமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்ற இரண்டு ஆண்டுகளில் அதாவது 1987ல் கட்சியின் ராஜஸ்தான் மாநில துணை தலைவர் பதவி தரப்பட்டது வசுந்தராவுக்கு. அப்போது பாஜகவில் ராஜஸ்தானின் சிங்கம் என அழைக்கப்பட்ட பைரன் சிங் ஷெகாவத் கட்சியில் மிக வலிமையான தலைவராக இருந்தார். அவரோடு மோதி வெல்ல முடியாது என்பதால் மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு தன்னை மாற்றிக்கொண்டார் வசுந்தரா.
1998ல் தோல்பூர் பாராளுமன்ற தொகுதியில் இருந்து எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவருக்கு பிரதமராக இருந்த வாஜ்பாய், தனது அமைச்சரவையில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் பதவி தந்தார், பின்னர் மத்தியில் பாஜக ஆட்சியின் போது பலதுறைகளின் அமைச்சராக வலம் வந்தார். 1989 முதல் 2003 வரை தொடர்ச்சியாக ஜலாவார் தொகுதியில் எம்.பியாக இருந்தார். மத்தியில் அதிகாரத்தில் இருந்தாலும் அவருக்கு மாநிலத்தின் மீது ஒரு கண் இருந்துக்கொண்டே இருந்தது.
அதற்காக என்னவெல்லாம் செய்தார் வசுந்தரா, ராஜஸ்தான் மாநில பாஜகவில் ராஜஸ்தான் சிங்கம் பைரன் சிங் ஷெகாவத்தை எப்படி எதிர்கொண்டு ஓவர்டேக் செய்தார் என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
அடுத்த பகுதி:
முத்தத்தால் சர்ச்சைக்கு ஆளான முதல்வர்! முதல்வரைத் தெரியுமா #9
முந்தைய பகுதி:
பவாரியாக்கள்... பத்மாவத்... ராஜஸ்தானில் சாதி ஆதிக்கம்! முதல்வரைத் தெரியுமா #7