நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் செந்தில்குமரன், நக்கீரன் 360 யூட்யூப் சேனலில் 'தமிழன் என்றோர் இனமுண்டு' என்ற நிகழ்ச்சி வாயிலாக தமிழ் மொழியின் வரலாறு, தமிழர்களின் வரலாறு, தமிழ் மக்களின் வாழ்வியல் உள்ளிட்ட தமிழ் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசிவருகிறார். அந்த வகையில், லெமூரியா என மேலைநாட்டவர்களால் அழைக்கப்படும் குமரிக்கண்டம் பற்றிய மேற்கத்திய அறிஞர்களின் ஆய்வு பற்றி அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
ஸ்காட் எலியட், ருடால்ஃப் டைசன், லாசன் கார்வே ஆகிய மேற்கத்திய அறிஞர்கள் லெமூரியா கண்டத்தைப் பற்றி நிறைய ஆய்வுகள் செய்து, லெமூரியா கண்டத்தில் வாழ்ந்த மக்கள் எப்படி இருந்தனர், அந்த நிலப்பகுதி எப்படி இருந்தது எனப் பல விஷயங்களை வெளிக்கொண்டுவந்துள்ளனர். அந்த லெமூரியா கண்டத்தைத்தான் நாம் குமரிக்கண்டம் என்கிறோம். அவர்கள் ஏன் அதை லெமூரியா என்று குறிப்பிட்டனர்? ஒரு செல் உயிரியிலிருந்து எப்படி படிப்படியாக பரிணாம வளர்ச்சி ஏற்பட்டது என்பது பற்றி கடந்த பகுதிகளில் பார்த்தோம். அப்படி பரிணாம வளர்ச்சி நடைபெறுகையில் குரங்கிற்கு இணையாக ஓர் உயிர் இருந்துள்ளது. அது லீமர் என அழைக்கப்பட்டது. லீமர் என்ற உயிரி அந்த நிலப்பகுதியில் வாழ்ந்த காரணத்தினால்தான் அதை லெமூரியா என்றழைத்தனர். ஆரம்பக்கட்டத்தில் அங்கு வாழ்ந்த மக்கள் மிக உயரமான மனிதர்களாக இருந்துள்ளனர். அவர்கள் ஆறு முதல் ஏழு அடி உயரமும், 160 முதல் 200 கிலோவரை எடை கொண்டவர்களாகவும் இருந்துள்ளனர். நீளமான மற்றும் பருத்த கைகளைக் கொண்டிருந்த அவர்களுக்கு 7 அங்குல அளவில் நெற்றி இருந்துள்ளது. மேலும், பெரிய கண்களையும் சிறிய காதுகளையும் கொண்டிருந்தனர். மூக்கிற்கு மேலே சிறிய அளவில் நெற்றிக்கண் இருந்துள்ளது. இதை அடிப்படையாக வைத்து சிவன் தத்துவம் உருவானது பற்றி முந்தைய பகுதிகளில் ஏற்கனவே கூறியிருந்தேன்.
அந்த நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு அணிகலன்கள் மீது பெரிய அளவில் ஆர்வம் இருக்கவில்லை. ஆனால், தலைமுடி அலங்காரத்தில் அவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர். பல விஷயங்களில் அவர்கள் மேம்பட்ட அறிவு கொண்டவர்களாக இருந்துள்ளனர். பகல் நேரத்தில் கிடைக்கும் ஒளியைச் சேகரித்து இரவு நேரங்களில் ஊர் பகுதி முழுமைக்கும் வெளிச்சம் ஏற்படுத்தக்கூடிய வகையிலான ஒரு முறை அவர்களிடம் இருந்துள்ளது. அவர்களிடம் பேச்சுமொழி என்ற ஒன்று இருந்தாலும்கூட, உணர்வு மொழியைத்தான் அதிகம் பயன்படுத்தியுள்ளனர். இரவு உறங்கும்போது தன்னை எந்தப் பூச்சியும் தாக்காமல் இருக்க இலைதழைகளாலான இன்றைய கொசு வலை போன்ற தற்காப்பை உருவாக்கிப் பயன்படுத்தியுள்ளனர். அருகே இருப்பவரை இவன் என்கிறோம். தூரத்திலிருப்பவரை அவன் என்கிறோம். எங்கோ இருப்பவரைக் குறிப்பிட உவன் என்ற வார்த்தை அவர்களிடம் புழக்கத்தில் இருந்துள்ளது. அதேபோல பாதைகள் அமைப்பதிலும் கைதேர்ந்தவர்களாக இருந்துள்ளனர்.
சுண்ணாம்பு போன்ற ஒருவகையான பொருளைப் பயன்படுத்தி பாதைகள் அமைத்துள்ளனர். சுண்ணாம்பு போன்ற பொருளைத் தாவரத்தின் மீது ஊற்றினால் அந்த இடத்தில் செடி முளைக்காது என்ற அறிவியலை அவர்கள் அறிந்திருந்தனர். அவர்களின் திருமண முறையே வித்தியாசமாக இருந்துள்ளது. திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு இருவரையும் சில காலம் காட்டிற்குள் அனுப்பி வைப்பார்கள். அங்கு உணவு தேடுவது, விலங்குகளிடமிருந்து தற்காத்துக்கொள்வது மாதிரியான விஷயங்களில் ஒற்றுமையாக செயல்படுகிறார்களா, அவர்களுக்குள் இணக்கமான புரிதல் இருக்கிறதா என்பதைப் பார்த்து திருமணம் செய்துவைப்பார்கள். கடவுள் நம்பிக்கை கொண்ட அவர்கள், ஆன்மீக அமைதியை நாடுபவர்களாக இருந்துள்ளனர்.
சதுப்பு நிலம்... அதில் வெந்நீர் ஊற்றுகள்... எப்போது வேண்டுமானாலும் நீருக்குள் அமிழ்ந்துவிடலாம் என்பன போன்ற சூழல்கள் இருந்த பகுதிகளில்தான் அந்த மக்கள் வசித்துள்ளனர். இவை அனைத்துமே லெமூரியா கண்டம் குறித்து ஆய்வுசெய்த அந்த மேலைநாட்டு அறிஞர்கள் கூறிய விஷயங்கள். இவர்கள் வாழ்ந்த காலம் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து 50,000 ஆண்டுகளுக்கு முன்புவரை என கண்டறியப்பட்டுள்ளது. அந்த மக்களிடம் மரணம் குறித்த பயமில்லை. தான் வாழ்ந்ததுபோதும் என்று நினைத்தால் உயிர் நீப்பதற்கான உத்தி அவர்களிடம் இருந்துள்ளது. நம்முடைய இலக்கியங்கள் குமரிக்கண்டம் பற்றி கூறிய விஷயங்கள் அனைத்தும் மேலை நாடு ஆய்வாளர்கள் கூறும் லெமூரியா கண்டத்தோடு ஒத்துப்போகிறது. இது பற்றி அடுத்தடுத்து வரும் பகுதிகளில் விரிவாக பேசுவோம்.