அரசியல் பிரபலம் மற்றும் திரைப்பிரபலங்கள் உடனான தன்னுடைய அனுபவத்தையும், அவர்களின் அறிந்திடாத பக்கம் குறித்தும் பல்வேறு தகவல்களை, நடிகர் ராஜேஷ் நம்மோடு பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஜெயலலிதா அவர்கள் குறித்தும், கலைஞர் கருணாநிதி அவர்கள் குறித்தும் பகிர்ந்து கொண்ட செய்திகளைப் பார்ப்போம்...
ஒரு பிரபலத்தை நாம் சந்திக்கப் போகிறோம் என்றால் அவரைப் பற்றி குறைந்த பட்சம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதுதான் அவர்களுக்கு நாம் தரும் மரியாதை. உதாரணமாக ஜெயலிதாவைச் சந்திக்கச் சென்றால் பச்சை நிற சால்வை வாங்கிச்செல்ல வேண்டும், கலைஞர் என்றால் மஞ்சள் நிற சால்வை, கம்யூனிச தலைவர்களைப் பார்க்கச் சென்றால் சிவப்பு நிற சால்வை வாங்கிச்செல்ல வேண்டும். அதேபோல நம்முடைய உடையையும் கொஞ்சம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களது வாழ்கையின் முக்கியமான சில விஷயங்களைப் பற்றி தெரிந்து வைத்திருந்து அதைப் பற்றி பேச வேண்டும். அதையும் அளவாகப் பேச வேண்டும். நம்மைப் போல ஆயிரம் பேர் அதைப் பேசி அவர்கள் கேட்டிருப்பார்கள்.
ஜெயலலிதாவிடம் ஒரு நல்ல குணம் இருந்தது. நான் என்னுடைய மகள் திருமணத்திற்கு பத்திரிகை வைக்க வேண்டும் என்று அவர் உதவியாளரிடம் அனுமதி கேட்டேன். அவர் அப்போது ஜெயலலிதா வெளியூர் சென்றிருப்பதாகவும், இரு தினங்கள் கழித்துத் தொடர்பு கொள்ளுங்கள் என்றும் சொன்னார். அதே போல தொடர்பு கொண்டேன். சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டது. நாங்கள் எத்தனை பேர் வருகிறோம், என்ன காரில் வருகிறோம், யார் யார் வருகிறோம் என அத்தனை விவரங்களையும் முன்கூட்டியே கேட்டு வாங்கிக்கொண்டனர். பின் போயஸ்கார்டனில் சந்திக்கச் சென்றோம். நாங்கள் போய் உட்காரக் கூட செய்யவில்லை அதற்குள் அனைவருக்கும் தேநீர் கொண்டு வந்து கொடுத்தனர். பின் சந்திப்பு நடந்தது. முடிந்ததும் வெளியே வந்தால், என் கார் ஏசி போட்டு தயாராக இருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. "பத்து நிமிடங்களில் சார் வந்துவிடுவார், ஏசி போட்டுத் தயாராக இருங்கள் என்று ஜெயலலிதா சொன்னதாக ஒருவர் வந்து சொன்னார்" என டிரைவர் கூறினார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஜெயலலிதா நடிகையாக இருந்த சமயத்தில் அவர் வீட்டிற்குள் செல்கிறார் என்றால் குறைந்தது முக்கால் மணி நேரம் ஏ.சி ஓடிக்கொண்டிருக்க வேண்டும் என்பாராம். அதை முன்னர் கேள்விப் பட்டிருக்கிறேன். அப்போது எனக்கு 'என்ன ஒரு பணக்காரத்தனம்' என அவர் மேல் கோபம் கூட வந்தது. பின் அன்று தான் புரிந்தது, அவர் தன்னைப் போலவே பிறரையும் பார்க்கிறார் என்று. இது அவரிடம் நான் பார்த்து வியந்த குணம். இது ஒரு பண்பாடான செயல்.
கலைஞர் அவர்களிடமும் ஒரு நாகரிகமான குணம் இருந்தது. நாம் சின்னச் சின்ன விஷயங்களைச் சொல்லும் போதும்கூட வியந்து கேட்பார். கடந்த கால விஷயங்கள் அத்தனையும் நினைவில் வைத்திருப்பார். ஒருமுறை, அவரை பேட்டி எடுக்க நேரம் கேட்டேன். அவரும் மறுநாள் வரச் சொன்னார். நான் தயாராக இருந்தேன். முந்தைய நாள் இரவு திடீரென கோபாலபுரத்தில் இருந்து, ஒரு அழைப்பு வந்தது. ஐயாவுக்கு உடல்நிலை சரியில்லை, நாளை யாரையும் அவர் சந்திக்கவில்லை, இது மருத்துவர்கள் அறிவுரை. அடுத்து ஒரு நாள் தேதி கொடுப்பார். அன்று வாருங்கள் என்றனர். இது எவ்வளவு பெரிய குணம் என்று பாருங்கள்.
அதே போல, தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் ஒரு விஷயத்தை என்னிடம் சொன்னார். அவர்கள் பத்திரிகையில் கலைஞர் அவர்களை விமர்சித்து ஒரு தலையங்கம் எழுதிவிட்டனர். மறுநாள் அதிகாலை நான்கு மணிக்கு அதைப் படித்து விட்டு, அதற்கான விளக்கத்தை எழுதி, காலை ஒன்பது மணிக்குள் அவரிடம் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டாராம் கலைஞர். அவர் இத்தனையாண்டு காலம் அரசியலில் நிலைத்து நின்றதற்குக் காரணம் அவருடைய இது போன்ற குணங்கள் தான்.