முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் அ.தி.மு.க- பா.ஜ.க. கூட்டணி தொடரும் என்பதை அமித்ஷா பங்கேற்ற சென்னை விழாவின் மேடையிலேயே உறுதிபட அறிவித்தது அ.தி.மு.க .சீனியர் களையும் விசுவாசிகளையும் அதிர வைத்துள்ளது. சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் எதிர்பார்ப்பு என்னவென்பதை அமித்சாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கூட்டணியை இறுதி செய்யலாம் என கடந்த 20-ந்தேதி மூத்த தலைவர்களுடன் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு மாறாக, 21ந் தேதி இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ் இருவரும் அமித்சாவிடம் உறுதி அளித்துவிட்டனர்.
கலைவாணர் அரங்கத்தில் நடந்த அரசு விழாவை முடித்துக்கொண்டு ஹோட்டல் லீலா பேலஸுக்கு திரும்பிய அமித்ஷாவை எடப்பாடி, பன்னீர், ஜெயக்குமார் மூவரும் சந்தித்தனர். மத்திய அரசிடம் எதிர்பார்க்கும் சில திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் ஒப்புதல் குறித்த கோரிக்கைகளை அமித்ஷாவிடம் கொடுத்த ஜெயக்குமார், 7 பேர் விடுதலை குறித்து வலியுறுத்தியபோது, ""அவர்களின் விடுதலையை சி.பி.ஐ. எதிர்க்காது; விரைவில் நல்லது நடக்கும்; சட்டம் தனது கடமையைச் செய்யும்; ஆனால், இந்த விவகாரத்தில், தமி ழகத்திலுள்ள அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் அர சியல் செய்கின்றன'' என அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.
பின்னர் ஜெயக்குமாரை வெளியே அனுப்பி வைத்து விட்டு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.சும் சுமார் 50 நிமிடங்கள் தேர்தல் கூட்டணி குறித்து விவாதித்தனர். 234 தொகுதிகளையும் எந்த எண்ணிக்கையில் பகிர்ந்துகொள்வது என்பது பற்றித்தான் விவாதத்தின் பெரும் பகுதி கழிந்துள்ளது. எடப்பாடி கொடுத்த பட்டியலை பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார் அமித்ஷா. இரு தரப்பிலும் நடந்த பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தை எட்டியிருந்தாலும், பிரதமரிடம் கலந்தாலோசித்து விட்டு மீண்டும் பேசுவோம் என அமித்ஷா சொல்ல, சந்திப்பு நிறைவடைந்தது.
எடப்பாடியிடமும் பன்னீரிடமும் நெருக்கமாக உள்ள அ.தி.மு.க. மேலிட தொடர்பாளர்களிடம் விசாரித்த போது, ""அமித்சாவுடன் பேசிய எடப்பாடி, விழாவில் அதி.மு.க. அரசை பாராட்டியும் தி.மு.க.வின் அரசியலை கடுமையாக விமர்சித்தும் நீங்கள் பேசிய பேச்சு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூப்பராக இருந்தது உங்கள் பேச்சு என பாராட்டிவிட்டு, பா.ஜ.க.வுடனான கூட்டணியை தொடர்வதில்தான் எங்களுக்கும் விருப்பம். பாஜகவுக்கு எதிரான கருத்து வேறுபாடுகள் எங்கள் கட்சியின் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளிடம் இருந்தாலும் எதார்த்த அரசியலை சுட்டிக்காட்டி அவர்களுக்குப் புரிய வைத்திருக்கிறோம் என அமித்சாவிடம் விவரித்திருக்கிறார் எடப்பாடி.
அப்போது பேசிய அமித்சா, தி.மு.க.வின் வாரிசு அரசியலையும் ஊழல்களையும் விமர்சித்திருக்கிறேன். அதே விமர்சனம் உங்களுக்கும் பொருந்தும். குறிப்பாக, ஊழல் விவகாரங்களில் அதி.மு.க.வை தள்ளிவைத்துவிட முடியாது. இதனையும் மீறி அதி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்கான காரணங்களை இப்போது விவாதிக்க வேண்டாம். எங்களைப் பொறுத்த வரை, வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சியை பிடித்திருக்கிறோம். தென்னிந்தியாவில் அதே நிலை வர வேண்டும்.
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் அல்லது பாஜக கூட்டணி ஆட்சியில் இருக்க வேண்டும். தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி என்ன என்பது எங்களுக்குத் தெரியும்ங்கிற நிலையில், அதி.மு.க.வுடனான கூட்டணியை வலிமைப்படுத்த நினைக்கிறேன். அதனால், பாஜகவுக்கு 100, அதி.மு.க.வுக்கு 134, கூட்டணி கட்சிகளுக்கு நீங்கள் சீட் ஒதுக்கிக் கொள்ளுங்கள் என பேரத்தை துவக்கியிருக்கிறார்.
அதிர்ச்சியடைந்த எடப்பாடி, பீகார் பாணி அரசியல்போல தமிழகத்தில் கூட்டணி பேசுகிறீர்கள். இதை எங்கள் நிர்வாகிகள் யாரும் ஏற்க மாட்டார்கள். அது தி.மு.க. கூட்டணிக்குத்தான் சாதகமாகும் என்றவர், ஓபிஎஸ்சை பார்க்க, தம்மிடமிருந்த ஒரு பட்டியலை அமீத்ஷாவிடம் ஓபிஎஸ் தந்துள்ளார். அதில், தி.மு.க. கூட்டணியை வீழ்த்த அதி.மு.க.வுக்கு 190, பாஜகவுக்கு 12, பாமகவுக்கு 17, ரஜினிக்கு 10, தேமுதிகவுக்கு 5 என சீட் ஷேரிங் செய்யப்பட்டிருந்தது.
அந்த பட்டியலைக் கண்டு அதிர்ந்து போன அமித்சா, இது ஆரோக்கியமானதாக இல்லையே என சொல்ல, தமிழகத்தில் அதி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும்தான் எப்போதுமே போட்டி. இதற்கு மாறாக, கூட்டணி கட்சிகளுக்கு யார் அதிகம் சீட்டுகளை தருகிறார்களோ அந்த கட்சி பெரும்பாலும் தோல்வியடைகிறது. அதாவது, தோழமை கட்சிகளை பிரதான கட்சி ஈசியாக ஜெயித்து விடுகிறது. அதனால்தான் இந்த தேர்தலில் 200 இடங்களில் போட்டிபோட தி.மு.க. திட்டமிடுகிறது. அதே அளவுக்கு அதி.மு.க.வும் போட்டியிட்டால்தான் தி.மு.க.வை வீழ்த்த முடியும்.
ரஜினி அரசியலுக்கு வந்தால்தான் தி.மு.க. கூட்டணிக்கு எதிரான வாக்குகள் பிரியும். ஆனால், கொரோனா நெருக்கடியால் அரசிய லுக்கு வர ரஜினி தயங்குகிறார். அவரை தனிக்கட்சி ஆரம்பிக்க வைத்து அ.தி.மு.க.-பா.ஜ.க. அணியுடன் கூட்டணி வைப்பதற்கான சம்மதத்தைப்பெற உங்களால்தான் முடியும். 5 முக்கிய இடங்களிலும், 3 முறை ஊடகங்கள் மூலமாகவும் அவர் பிரச்சாரம் செய்தால் போதும். மேலும், பா.ஜ.க.- ரஜினியின் வேட்பாளர்களை ஜெயிக்க வைக்க வேண்டிய அனைத்து செலவுகளையும் நாங்கள் ஏற்று கொள்கிறோம். பா.ஜ.க.வின் 12 பேர் சட்டமன்றத்துக்குள் நுழைய நாங்கள் கேரண்டி. அதனால், இந்த சீட் ஷேரிங்கிற்கு சம்மதியுங்கள் என இயல்பாக சொல்லியிருக்கிறார் எடப்பாடி.
அப்போது குறுக்கிட்ட ஓபிஎஸ், ஒருவேளை ரஜினியை சம்மதிக்க வைக்க முடியாமல் போனால், அவருக்கான 10 சீட்டுகளை பா.ஜ. க.வுக்கு ஒதுக்கு கிறோம் என்றிருக்கிறார். எடப் பாடியும் பன்னீரும் பேசியதன் பொருளை அமித்ஷா உணர்ந்திருந்தாலும், குறைந்த பட்சம் பா.ஜ.க. 54 சீட்டுகளில் போட்டியிட வேண்டுமென தொகுதிகளை அடையாளப் படுத்தியிருக்கிறோம். அதனால், பிரதமரிடமும் பேசிவிட்டுச் சொல்கிறேன் என பேச்சு வார்த்தையை முடித்துக் கொண்டார்''‘’ என்று சந்திப்பில் நடந்ததை சுட்டிக்காட்டுகிறார்கள் மேலிட தொடர்பாளர்கள்.
அ.தி.மு.க. தலைமையிடம் பேசியதைத் தொடர்ந்து தமிழக பாஜகவின் மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகள், அணித் தலைவர்களுடன் ஆலோசித்த அமித்ஷா, ""கூட்டணி பற்றி யாரும் பேச வேண்டாம். கட்சித் தலைமை பார்த்துக் கொள்ளும். தேர்தலை எதிர்கொள்ளும் பணிகளில் கவனம் செலுத்துங்கள். ஜனவரியில் வேட் பாளர்களை அறிவித்து விடலாம். பாஜக இடம் பெறும் கூட்டணிதான் ஆட்சியைப் பிடிக்கும்'' என்று நம்பிக்கைத் தெரிவித்தார். மாநில தலைவர் முருகன் பேசும் போது, சட்டமன்றத்தில் வலிமையான கட்சியாக பாஜக இருக்கும் வகையில் பாஜகவின் தேர்தல் வியூகம் இருப்பதாக குறிப்பிட்டார்.
அதன்பிறகு இரவு 11 மணிக்கு அமித்சாவை சந்தித்தார் ஆடிட்டர் குருமூர்த்தி. கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆலோசித்துவிட்டு நள்ளிரவு 2 மணிக்கு ஹோட்டலை விட்டு வெளியே வந்தார். அ.தி.மு.க. தலைமை முன்வைத்த சீட் சேரிங் விசயத்தையும் ரஜினியை பற்றியும் அமித்ஷா சொல்ல, பாஜகவுக்கு 100சீட்! இதில் ரஜினிக்கு 50 சீட்டுகளை நாம் ஒதுக்கலாம்; அ.தி.மு.க.வுக்கு 134 சீட்! அதில் பா.ம.க.-தே.மு.தி.க.வுக்கு அ.தி. மு.க. ஒதுக்கினாலும் சரி, அல்லது அக்கட்சிகளை கழட்டி விட்டா லும் சரி என்கிற யோசனையை தெரிவித்துள்ளார் குருமூர்த்தி என்கின்றன உளவுத்துறை வட்டாரங்கள். இந்த நிலையில், 22-ந்தேதி டெல்லிக்கு அமித்சா புறப்படுவதற்கு முன்பு ரஜினியை சந்திக்க திட்டமிட்டார். ஆனால், அஷ்டமி என்பதால் சந்திப்பு தவிர்க்கப்பட்டது என்கிறது பா.ஜ.க தரப்பு.
அமித்சாவுடனான சந்திப்பு விபரங்களை கட்சியின் சீனியர்களிடம் எடப்பாடியும் பன்னீரும் பகிர்ந்துகொள்ள, இந்த சீட் ஷேரிங் பட்டியல்தான் சரியானது. இதற்கு பாஜக ஒப்புக் கொண்டால் அவர்களுக்கு லாபம்தான் என்றிருக்கிறார்கள். சென்னை பயண விபரங்களை மோடியிடம் அமித்ஷா விவாதித்த பிறகே, அமித்சாவின் சென்னை வருகை அ.தி.மு.க.வுக்கு அதிர்ச்சியை தருமா அல்லது மகிழ்ச்சியைத் தருமா என்பதை எடப்பாடிக்கு உணர்த்தும் என்கிறார்கள் தமிழக பாஜகவினர்.
-இரா.இளையசெல்வன்
___________
Go back! பதாகை வீச்சு!
விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்து ரோட்டில் நடந்தபடி தொண்டர்களின் வரவேற்பை ஏற்ற அமித்ஷாவை நோக்கி வந்த பழவந்தாங்கலைச் சேர்ந்த 67 வயது துரைராஜ், "அக்கவுண்ட்டில் போடுறதா சொன்ன 15 லட்சம் எங்கே?' எனக் கேட்டபடி தன் கையிலிருந்த வரவேற்பு பதாகையை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தனர் போலீசார். அவருக்கு பா.ஜ.க.வினரிடமிருந்து தொடர்ந்து கொலை மிரட்டல் வருகிறது. இதனிடையே, தமிழகத்தின் நிதி தேவையை நிறைவேற்றாத பா.ஜ.க அரசைக் கண்டித்து, GoBackAmitShah என்ற ஹேஷ்டாக்கும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது.
-கீரன்