Skip to main content

விஜய்க்கு டஃப் கொடுக்கும் விஜய் சேதுபதி! மாஸ்டர் - விமர்சனம்

Published on 13/01/2021 | Edited on 13/01/2021
master vijay

 

கரோனா ஊரடங்கு காரணமாக கிட்டத்தட்ட பத்து மாத இடைவெளிக்கு பிறகு 'மாஸ்டர்' பட ரிலீஸ் மூலம் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது தமிழ் திரையுலகம். எனினும் தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள இந்த சூழலில் வெளிவந்துள்ள 'மாஸ்டர்' அனைவராலும் ரசிக்கப்பட்டாரா?

 

குடி போதைக்கு அடிமையான கல்லூரி பேராசிரியராக வரும் விஜய் மாணவர்களுக்கு மிகவும் பிடித்தவராகவும் அதே சமயம் அதிகாரிகளால் வெறுக்கப்படுபவராகவும் இருக்கிறார். இதனால் அவர் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு ஆசிரியராக அனுப்பப்படுகிறார். அங்கு இருக்கும் மாணவர்களை சீரழித்து தன் தொழில் ஆதாயத்திற்காக விஜய் சேதுபதி பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை விஜய், விஜய் சேதுபதியிடம் இருந்து காப்பாற்ற முற்படுகிறார். இதனால் விஜய்க்கும் விஜய் சேதுபதிக்கும் மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலில் யார் ஜெயித்தார்கள், விஜய் சேதுபதியின் இந்த செயலுக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பதே மாஸ்டர் படத்தின் மையக் கதை.

 

விஜய் இதில் மிகவும் ஸ்டைலிஷாக வருகிறார். அவரின் 'ஸ்வேக்' படம் முழுவதும் பரவசப்படுத்துகிறது. மற்ற படங்களை காட்டிலும் இதில் அவர் இயல்பான மனிதராகவே பல காட்சிகளில் தென்படுகிறார். அது விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவருக்கும் பிடிக்கும் விதமாகவே அமைந்துள்ளது. இருந்தும் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட இடங்களில் அவர் தன் மாஸ் இமேஜில் இருந்து வெளியே வந்து அண்டர் பிளே செய்யும் காட்சிகள் முழு திருப்தியாக இல்லை.

 

master vijay sethupathi

 

நாயகனின் கதையை காட்டிலும் படத்தின் வில்லனாக வரும் விஜய் சேதுபதியின் கதை அழுத்தம் நிறைந்ததாக அமைந்துள்ளது. அதுவே படத்தின் அரணாக இருந்து காத்திருக்கிறது. அந்த வாய்ப்பை மிக சிறப்பாகப் பயன்படுத்தி விஜய்க்கு டஃப் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி. கூடவே எப்போதும்போல் விஜய் சேதுபதியின் குறும்பு கலந்த வில்லத்தனமும் விஜய் ரசிகர்களையும் கூட கவர்வது போல உள்ளது. குறிப்பாக விஜய்யும் விஜய் சேதுபதியும் சந்தித்துக்கொள்ளும் காட்சி 'பக்கா மாஸ்' என்று சொல்லத்தக்கது.

 

விஜய்க்கு என பிரத்தியேக பில்டப் காட்சிகள், கேமராவை பார்த்து பேசும் பன்ச் வசனங்கள்,சர்ச்சையை கிளப்பும் அரசியல் விமர்சனங்கள் என டெம்பிளேட் விஷயங்களை தவிர்த்து மாஸ்டர் படத்தை  உருவாக்கியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இருந்தும் ரசிகர்களை கவரும் வகையில் கதையோடு சேர்ந்த சில கூஸ்பம்ப் மொமெண்ட்டுகளை அமைத்து தியேட்டரை அதிரவைத்துள்ளார். குறிப்பாக கபடி ஆடும் காட்சி, கிளைமாக்ஸ் காட்சி அதற்கு சான்றாக அமைந்துள்ளது. படத்தின் முக்கிய பிரச்னையாக இருப்பது நீளம். கதைக்குள் செல்லவே நெடுநேரம் எடுத்துக்கொள்கிறது படம். முதல் பாதி நீளத்தை காட்டிலும் இரண்டாம் பாதி நீளம் இன்னும் அதிகமாக இருப்பது அயர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் திரைக்கதையின் வேகமும் ஒரே சீராக இல்லாமல் ஏற்ற இறக்கமாக இருப்பது படத்தின் சுவாரஸ்யத்தை சற்று குறைத்துள்ளது.

 

விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் பெரும் பிம்பத்திற்கு நடுவே மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், மாஸ்டர் மகேந்திரன், பூவையார், சாந்தனு, '96' கௌரி கிஷன், 'விஜய் டிவி' ரம்யா, தீனா ஆகியோர் ஆங்காங்கே பளிச்சிட்டுள்ளனர். அவரவர் அவரவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்துள்ளனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படம் நெடுக பல சின்னச் சின்ன சுவாரசியமான ஐடியாக்களை பயன்படுத்தி ரசிக்க வைத்துள்ளார். ஆனால், ஒரு முழுமையான படமாக ரசிக்க வைப்பதில் 'ஏதோ குறையுதே' என்ற உணர்வை ஏற்பட விட்டுவிட்டார். தரமான, தீவிரமான படங்கள் எடுக்கக்கூடிய இயக்குனர் மிகப்பெரிய நாயகனை கையாளும்போது ஏற்படக்கூடிய நேர்மறை விளைவுகளும் இந்தப் படத்தில் இருக்கின்றன, எதிர்மறை விளைவுகளும் இருக்கின்றன. 

 

malavika mohanan

 

மாஸ்டர் படத்தின் மற்றுமொரு பலமாக அமைந்துள்ளது சத்யன் சூர்யன் ஒளிப்பதிவும், அனிருத்தின் அதிரடி இசையும். கல்லூரி சம்பத்தப்பட்ட காட்சிகளை கலர்ஃபுல்லாகவும், சீர்திருத்தப் பள்ளி சம்பந்தப்பட்ட காட்சிகளை 'ரா'வாகவும் காட்டி ரசிக்க வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன். அனிருத்தின் வாத்தி கம்மிங் மற்றும் வாத்தி ரெய்டு பாடல்கள் குத்தாட்டம் போட வைத்துள்ளது. குறிப்பாக பின்னணி இசையில் எப்போதும்போல் மாஸ் காட்டியுள்ளார். பல காட்சிகள், இசையால் சிறப்பாகின்றன.

 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மக்களை தியேட்டர்களுக்கு பாதுகாப்புக்கு நெறிமுறைகளோடு படையெடுக்க வைக்கும் விதமாக வெளிவந்துள்ள மாஸ்டர் படம் தமிழ் திரையுலகிற்கு மீண்டும் புத்துயிர் கொடுப்பதாக அமைந்துள்ளது.

 

ஆனாலும், மாஸ்டர் - கண்டிப்பும், கலகலப்பும் கொஞ்சம் குறைவு!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘இந்த முறை காரில் வருகை; கையில் பிளாஸ்திரி’ - ஜனநாயக கடமையாற்றிய த.வெ.க. தலைவர் விஜய்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
casted his vote at Neelankarai polling station. T.V.K. Leader Vijay

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது வீட்டிலிருந்து வந்து சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தனது வீட்டில் இருந்து சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு வந்த நிலையில் தற்போது தனது வீட்டில் இருந்து கார் மூலம் வாக்குச்சாவடிக்கு வந்து தனது ஜனநாயக கடமையாற்றியுள்ளார்.  சமீபத்தில் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் த.வெ.க. தலைவராக முதல்முறையாக வாக்களித்துள்ளார். காயம் காரணமாக கையில் ப்ளாஸ்திரி ஒட்டியுள்ள நிலையில் தற்போது வாக்கினை செலுத்தியுள்ளார்.முன்னதாக கோட் படப்பிடிப்பிற்காக துபாயில் இருந்த விஜய் இன்று காலை விமானத்தின் மூலம் சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

ரஜினி படத்தில் இணையும் ஸ்ருதிஹாசன்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
shrtthi hassan to join rajini 171

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இப்படத்தைத் தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூனில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.  

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்பு பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் ரன்வீர் சிங் நடிப்பது உறுதியாகிவிட்டதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் டைட்டில் டீசர் வீடியோ, வருகின்ற 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது தொடர்பான போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் அந்த போஸ்டரில் ரஜினி வித்தியாசமான தோற்றத்தில் இடம்பெற்றிருந்தார். மேலும் கையில் கடிகாரத்தை விலங்காக கட்டியிருந்தார். இதை வைத்து ஏகப்பட்ட கதைகள் ரசிகர்களால் யூகிக்கப்பட்டது.

இதையடுத்து இப்படத்தில் ஷோபனா நடிக்கவுள்ளதாகவும், அவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் இப்படத்தில் ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ஸ்ருதிஹாசன், கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான பிரபாஸின் சலார் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து, 'தி ஐ' (The Eye), ஹாலிவுட் படத்தை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவரது இசையில் இனிமேல் ஆல்பம் சமீபத்தில் வெளியானது. இதில் ஸ்ருதிஹாசனும் லோகேஷும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.