
மிர்ச்சி சிவா நடிப்பில் ‘தமிழ் படம் 2’-வுக்கு பிறகு உருவான திரைப்படம் சுமோ. பல ஆண்டுகளாக ரிலீசுக்கு தயாராகி தவிர்க்க முடியாத சில காரணத்தினால் கிடப்பிலேயே கிடந்த இந்த சுமோ, மீண்டும் தூசி தட்டி தற்பொழுது திரையரங்குக்கு வந்திருக்கிறது. தற்பொழுது வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் போதிய வரவேற்பை பெற்றதா, இல்லையா?
கையில் ஒரு பெட்டியுடன் போலீசில் அகப்படும் விடிவி கணேஷ் அந்தப் பெட்டியை திறந்து காட்டும் படி போலீசார் வற்புறுத்தியும் திறக்காமல் அந்த பெட்டி குறித்த கதை ஒன்றை தான் கூறப்போவதாகவும் முழு கதையும் கேட்டுவிட்டால் மட்டுமே அந்த பெட்டியை திறந்து காட்டுவேன் என்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷிடம் கூறுகிறார். விடிவி கணேசனின் வற்புறுத்தலை மறுக்க முடியாத போலீசார் அந்த கதையை வேறு வழியின்றி கேட்க ஆரம்பிக்கின்றனர்.
கோவளத்தில் விடிவி கணேஷின் ரெசார்ட் ஒன்றில் சர்ஃபிங் விளையாட்டை மையமாக கொண்ட விடுதியை மிர்ச்சி சிவா பராமரித்து வருகிறார். ஒரு நாள் மிர்ச்சி சிவா கடலுக்கு சர்ஃபிங் செய்ய செல்லும் பொழுது அங்கு ஜப்பானை சேர்ந்த யோஷினோரி தாஷினோ என்ற ராட்சச சுமோ கலைஞரை கடலின் அலைகளுக்கு மத்தியில் கண்டுபிடிக்கிறார். உடலளவில் ஆஜான பாகுவான தாஷினோ மனதளவில் குழந்தையாகவே இருக்கிறார். கிடைக்கின்ற அனைத்தையும் தின்று தீர்த்து விடுகிறார். இதைத் தொடர்ந்து அந்த ஜப்பானிய நபர் தாஷினோ யார்? அவர் ஏன் சென்னையில் கரை ஒதுங்க வேண்டும்? அவரின் பின்னணி என்ன? அந்தப் பெட்டிக்குள் என்னதான் இருந்தது? என்பதே இந்த படத்தின் மீதி கதை.

இது ஒரு கதை என எப்படி இயக்குநர் மிர்ச்சி சிவாவை நம்ப வைத்தார் என தெரியவில்லை. அந்த அளவு ஒரு சிறிய கதையை வைத்துக்கொண்டு அந்த கதைக்கு ஏற்றவாறு நகைச்சுவை காட்சிகளை அமைக்க முயற்சி செய்து அதன் மூலம் ரசிகர்களையும் சிரிக்க வைக்க முயற்சி செய்து அதில் தோல்வியும் அடைந்திருக்கிறார் இயக்குநர் எஸ் பி ஹோசிமின். படம் ஆரம்பித்தது முதல் மெதுவாக நகர்ந்து கிட்டத்தட்ட முதல் பாதி முழுவதும் ஜப்பானிய நபர் தாஷினோவை சுற்றியே கதை நகர்ந்து இரண்டாம் பாதியில் இருந்து கதை ஆரம்பித்து போகப்போக அழுத்தம் இல்லாத காட்சிகள் மூலம் க்ளைமாக்ஸை நோக்கி நகர்கிறது. தாஷினாவை ஒரு பொம்மை போன்றே வைத்துக் கொண்டு படம் முழுவதும் பயணிக்க செய்த இயக்குநர் அவருக்கான முக்கியத்துவத்தை பெரிதாக காட்டவில்லை. அதுவே இந்த படத்திற்கு சற்று மைனஸ் ஆக அமைந்திருக்கிறது.
அதேபோல் நகைச்சுவை காட்சிகளும் ஏதோ கடமைக்கு வைத்தது போல் இருப்பதும் நம்மை மிகவும் சோதிக்கிறது. இதுவே படம் முழுவதும் படர்ந்து இருப்பது அயர்ச்சியை கொடுத்திருக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் சுமோ சம்பந்தப்பட்ட காட்சிகளை முதல் பாதியில் காட்டி இருந்தால் அதே போல் அதை அழுத்தமாகவும் ஒரு ஸ்போர்ட்ஸ் மூவியாகவும் இதை மாற்றி திரைக்கதை அமைத்திருந்தால் இந்த படம் இன்னமும் சிறப்பான ஒரு படமாக மாறி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கும். ஆனால் இயக்குநர் அதை செய்யத் தவறியிருக்கிறார்.
மிர்ச்சி சிவா, வழக்கம் போல் தமிழ் படத்தில் என்ன செய்வாரோ அதையே இந்த படத்திலும் செய்திருக்கிறார். பல இடங்களில் இவரது காமெடிகள் சிரிப்பை வர வைக்க தவறி இருந்தாலும் சில இடங்களில் மட்டும் கிச்சுகிச்சு மூட்டி இருக்கிறது. குறிப்பாக அந்த ஐந்து ரூபாய் காமெடி நன்றாக இருந்தது. வழக்கமான நாயகியாகவே வந்து வழக்கமான நடிப்பை வழக்கம் போல் கொடுத்துவிட்டு சென்று இருக்கிறார் நாயகி பிரியா ஆனந்த். இவருக்கு படத்தில் பெரிதாக வேலை இல்லை நாயகனை சப்போர்ட் மட்டுமே செய்கிறார். இவரது தந்தையாக வரும் நிழல்கள் ரவி கடமைக்கு வந்து செல்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை வரும் விடிவி கணேஷ் தனக்கு என்ன வருமோ அதை உடல் பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்து நடித்து காட்டி கைத்தட்டல் பெற முயற்சி செய்திருக்கிறார். இவரின் பஞ்ச் வசனங்கள் பல இடங்களில் நம்மை சோதிக்கவும் செய்திருக்கிறது.

அதேபோல் இந்த படம் பல ஆண்டுகளுக்கு முன் இருந்த ட்ரெண்டுக்கு ஏற்ப எடுக்கப்பட்டு இருந்தாலும் அப்போது ரிலீஸ் ஆகி இருந்தாகும் வரவேற்பு பெற்று இருக்குமா என்றால் சந்தேகமே. அந்த அளவு இதில் நடித்த நடிகர்களும் கதை ஓட்டமும் பெரிதாக ஈர்க்கவில்லை. ஜப்பானிய விஷயங்களை அறிந்த நபராக வரும் ஸ்ரீநாத் உடல் அளவில் காட்டிய மாற்றத்தை நடிப்பிலும் காட்டி இருக்கலாம். இவரது அந்த சில்லறை காமெடி நன்றாக இருந்தது. மற்றபடி உடனடித்த வெளிநாட்டு நடிகர்களும் நம் நாட்டு நடிகர்களும் அவரவர் வேலையை நிறைவாக செய்திருக்கின்றனர். குறிப்பாக வழக்கம் போல் இந்த படத்திலும் யோகி பாபு இருக்கிறார் சிரிப்பு மட்டும் மிஸ்ஸிங்.
நிவாஸ் கே பிரசன்னா இசையில் பாடல்கள் சுமார், பின்னணி இசை ஓகே. இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு ராஜீவ் மேனன் என்ற பெயரை பார்த்ததுமே ஆச்சரியம் ஏற்படுகிறது. பின்பு படம் முழுவதும் பார்த்த பிறகு அவரா இப்படி எல்லாம் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் என்று அதிர்ச்சியும் ஏற்படுகிறது. உண்மையில் ஒளிப்பதிவு செய்தது அந்த ராஜீவ் மேனனா அல்லது புதுவித ராஜீவ் மேனனா என்பது தெரியவில்லை. அந்த அளவு சுமாரான ஒளிப்பதிவு இந்த படம் முழுவதும் படர்ந்து இருக்கிறது.
படத்திற்கு சுமோ என பெயர் வைத்து விட்டு அதை சுற்றிய விஷயத்தை இரண்டாம் பாதியில் மட்டுமே அறிமுகப்படுத்திய இயக்குநர் படம் ஆரம்பம் முதல் அதனை ஒரு சீரியஸ் விஷயமாக எடுத்துக்கொண்டு அதனை சுற்றி கதை எழுதியிருந்தால் இந்த படம் நிச்சயம் நன்றாக பேசப்பட்டிருக்கும். படம் ஆரம்பித்து கதைக்குள் செல்லும் திரைப்படம் போகப்போக வேகம் குறைந்து முக்கியமாக ஜப்பான் வீரர் தாஷினோவை ஒரு காட்சி பொருளாகவே காண்பித்து கடைசியில் ஏதோ சம்பிரதாயத்துக்கு சுபம் காட்சிகளை காட்டி ஒப்பேற்றி இருப்பது சற்றே ஏமாற்றம் அளித்திருக்கிறது. சுமோ என்ற பெயருக்கு ஏற்ப அதை சுற்றி இருக்கும் முக்கியத்துவத்தை வைத்து இந்த படத்தை கொடுத்திருந்தால் இந்த படம் நிச்சயம் நல்ல ஸ்போர்ட்ஸ் டிராமா படமாக அமைந்திருக்கும்.
சுமோ - குஸ்தி குறைவு!