விஷ்ணு விஷால், சூரி, அப்புக்குட்டி ஆகியோரை தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து சுசீந்திரன் என்ற ஒரு நல்ல இயக்குனரை தமிழ் திரையுலகுக்குக் கொண்டுவந்தது 'வெண்ணிலா கபடி குழு' திரைப்படம். தமிழ் திரையுலகில் உச்சத்தில் இருக்கும் பார்ட் 2 காய்ச்சல் இந்தக் குழுவுக்கும் ஏற்பட்டு இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ளது வெண்ணிலா கபடி குழு -2. ஆனால் இந்த முறை படத்தை இயக்கியிருப்பது சுசீந்திரன் அல்ல, அவருடன் பணியாற்றிய செல்வசேகரன். சுசீந்திரனின் மூலக்கதையில் வெளிவந்திருக்கும் இந்தக் குழு, அந்தக் குழு அடைந்த வெற்றியை பெற்றதா?
1989ல் அரசு பஸ் டிரைவராக இருக்கும் பசுபதி பொறுப்பில்லாமல் வேலை பார்ப்பதை தவிர்த்து கபடி மேல் பைத்தியமாக இருக்கிறார். கேசட் கடை வைத்திருக்கும் இவரது மகன் விக்ராந்த்திற்கு அப்பா செய்வது சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவரை கண்டபடி விக்ராந்த் திட்ட, அதை பொறுத்துக்கொள்ளாத அவர் அம்மா அனுபமா குமார் பசுபதி ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என்ற உண்மையை போட்டு உடைக்கிறார். பசுபதி வெண்ணிலா கபடி குழுவை சார்ந்த முன்னாள் கபடி வீரர் என்பதும், தான் கபடியில் சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தை மகன் விக்ராந்த்துக்காகக் கைவிட்டதையும் தன் தாய் மூலம் தெரிந்துகொள்ளும் விக்ராந்த் தந்தையின் ஆசையை தான் நிறைவேற்ற முடிவு செய்து வெண்ணிலா கபடி குழுவில் சேர்ந்து சாதிக்க முடிவெடுக்கிறார். இதையடுத்து முதல் பாகத்தில் விஷ்ணு இறந்த பிறகு சிதறிக் கிடக்கும் வெண்ணிலா கபடி குழு என்னவானது, விக்ராந்த் தன் தந்தையின் ஆசையை நிறைவேற்றினாரா எனபதே வெண்ணிலா கபடி குழு 2 படத்தின் கதை.
முதல் பாகத்தின் திரைக்கதை டெம்பிளேட்டிலேயே இப்படமும் நகர்கிறது. முதல்பாதி முழுவதும் கொஞ்சம் கபடி, குடும்பம், காதல், நட்பு என பழைய ரூட்டில் பயணித்து பின் இரண்டாம் பாதி முழுவதும் கபடியிலேயே பயணித்துள்ளது. கதைக்கரு மற்றும் முதல் பாதியை தொடர்புபடுத்தியது என கதை தேர்வில் கவனமாக இருந்து கவனம் ஈர்த்த இயக்குனர் செல்வசேகரன் காட்சியமைப்பில் சற்று கோட்டை விட்டுள்ளார். குறிப்பாக முதல் பாகத்தில் கவனம் ஈர்த்த பாடல்கள் மற்றும் சூரி காமெடி இதில் இருக்கின்றன, ஆனால் மிக சுமாராக இருப்பது சற்று அயர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருந்தும் படத்தில் இடம்பெற்ற வசனங்கள், கபடி விளையாட்டு சீக்குவன்ஸ் ஆகியவை படத்தை தாங்கி பிடித்துள்ளது.
நாயகன் விக்ராந்த் கதாபாத்திரத்தில் நச் என பொருந்தி பர்ஃபெக்ட் கபடி வீரராகத் தெரிகிறார். நடிப்பிலும் உற்சாகமாக காணப்படுகிறார். அவரது அர்பணிப்புக்கான வெற்றி கூடிய சீக்கிரம் கிடைக்கவேண்டும். சம்பிரதாய நாயகியாக வந்து செல்கிறார் அர்த்தனா பினு. படத்திற்கு ஜீவனாக பசுபதி கதாபாத்திரம் அமைந்துள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் தன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்குத் தூணாக இருக்கிறார். கோச்சாக வரும் கிஷோர் முதல் பாகத்தைப் போலவே சிறப்பாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் கஞ்சா கருப்பு, சூரி, அப்புக்குட்டி, அருள்தாஸ், ரவி மரியா, ஆகியோர் அவரவர் வேலையை செய்துள்ளனர். வெண்ணிலா கபடி குழு முதல் பாகத்தில் ஒவ்வொரு பாத்திரமும் ஒரு விதத்தில் ஈர்த்தது. அந்த ஈர்ப்பு இதில் மிஸ்ஸிங்.
செல்வகணேஷ் இசையில் பாடல்கள் ஓகே. கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் கபடி மைதானமும் விளையாட்டும் சிறப்பு. 1989ல் நடக்கும் கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் காட்சியமைப்பில் செயற்கைத்தனங்கள் சற்று மேலோங்கிக் காணப்படுவதும் படத்தின் நீளமும் பலவீனங்கள்.
வெண்ணிலா கபடி குழு 2 - பார்ட் 2 எடுத்தவர்களின் குழுவில் சேர்ந்துகொண்டது.