கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார் என அறிவிப்பு வெளியான நாள்தொட்டே ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. ‘புதுப்பேட்டை’க்குப் பிறகு யுவனுடன் செல்வராகவன் இணையும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் கூடுதலான எதிர்பார்ப்பு இருந்தது (இடையில் NGK எடுக்கப்பட்டு வெளியானது). இந்நிலையில், பல சிக்கல்களுக்குப் பிறகு இப்படம் செல்வராகவன் பிறந்தநாளான இன்று வெளியாகியிருக்கிறது. எப்படி இருக்கிறது படம்? ‘என்.ஜி.கே’ தோல்விக்குப் பிறகு தன்னை நிலைநிறுத்தியிருக்கிறாரா செல்வராகவன்?
ஒவ்வொரு படத்தையும் வெவ்வேறு ஜானர்களில் முயற்சி செய்யும் செல்வராகவன், இம்முறை பேய்க்கதை சொல்ல முயன்றிருக்கிறார். வழக்கமான பயமுறுத்தல்கள், ‘திடீர் திடீர்னு உடையுதாம், சாயுதாம்’ மொமண்ட்கள், நீளமான ஃப்ளாஷ்பேக்குகள் இல்லாத பேய்படம் என்பது ஆறுதல். மற்றபடி செல்வராகவன் க்ளிஷேக்கள் நிறைந்த படம் என்பதால் செல்வா ரசிகர்கள் உற்சாகமாகவே ரசிக்கலாம். மிக எளிமையான கதை, அதை தன் திரைக்கதையால் சற்றே சுவாரசியப்படுத்தி இருக்கிறார் செல்வராகவன்.
தொழிலதிபரான எஸ்.ஜே.சூர்யா தன் மனைவி, குழந்தையுடன் தனியாக வசித்துவருகிறார். குழந்தையை கவனித்துக்கொள்ளும் வேலைக்காக, ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த ரெஜினா அந்த வீட்டிற்கு வருகிறார். உலகில் உள்ள தீயவர்களின் ஒட்டுமொத்த உருவமாக இருக்கும் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினாவை அடைய முயல்கிறார். அதற்கு அவர் இணங்காததால், அவரை வன்கொடுமைக்கு உள்ளாக்கி, கொல்கிறார். ஆவியான ரெஜினா எஸ்.ஜே.சூர்யாவைப் பழிவாங்குகிறார். அவ்வளவுதான் கதை. அரதப்பழசான கதையை தன்னுடைய பாணியில் சொல்லியிருக்கிறார் செல்வராகவன்.
ஒரு வீடு, மூன்று முக்கியக் கதாபாத்திரங்கள், ஆறு உப கதாபாத்திரங்கள்... இதற்குள்ளாகவே தன்னுடைய விளையாட்டை விளையாடியிருக்கிறார் இயக்குநர். படம் முழுக்க எஸ்.ஜே.சூர்யா ராஜ்ஜியம்தான். கத்துக்குட்டி இங்கிலீஷ் பேசுவது, மனைவி, மாமனாரிடம் குழைவது, ரெஜினாவிடம் உருகுவது, இரட்டை முகம் காட்டுவது என ஒரு உடலுக்குள் பல உருவங்களை வெளிபடுத்துகிறார். நந்திதா, ரெஜினா உள்ளிட்ட நடிகர்களும் தங்களுக்கான பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். செல்வராகவன் சின்னச்சின்ன கதாபாத்திரத்தின் நடிப்புத் திறனுக்கும் இடம்கொடுப்பார், ஆனால் பெரும்பாலும் அனைத்து கதாபாத்திரங்களிலும் செல்வவராகவனே பிரதிபலிக்கப்படுவார். இதிலும் அப்படியே.
கடவுள் x மனிதன் அல்லது நன்மை x தீமை இரண்டுக்குமான உளவியலைச் சொல்ல முயன்ற இயக்குநர், அதை முழுமையாகச் சொன்னாரா என்றால் கேள்விக்குறிதான். ஆனால் பணக்காரன், ஏழை என எந்த வர்க்கமானாலும் தீமை தன்னை நிலைநிறுத்த கடைசிவரை போராடும், யாரைப் பற்றியும் கவலைப்படாது என்ற உளவியலை கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். பேய்க்கதையின் வழக்கமான ஃபார்மட்டில் படம் இல்லையென்றாலும், ஒரு தொடர்ச்சி இல்லாமல், தனித்தனியாக எடுத்த காட்சிகளை ஒட்ட வைத்து பார்ப்பதைப் போன்ற உணரை்வை தவிர்க்க முடியவில்லை.
செல்வராகவன் - யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி, பின்னணி இசையில் தங்கள் பலத்தை காட்டியிருக்கிறது. ஒரு முழு ஆல்பமாக, தங்கள் முந்தைய படங்கள் அளவுக்கு இல்லையென்றாலும் பாடல்கள் சிறப்பாகவே அமைந்திருக்கின்றன. நன்மை x தீமை, கடவுள் x மனிதன் என்ற உளவியல் முரண்களை ஒளிகளை வைத்தே பார்வையாளர்களுக்குக் கடத்துகிறார் ஒளிப்பதிவாளர் அர்விந்த் கிருஷ்ணா.
வர்க்க, இன வேறுபாடுகளைக் கடந்தும் மனித மனத்தின் மூர்க்கத்தனத்தை சொல்ல முயன்ற செல்வராகவன், அதற்கான வலுவான கதைக்களத்தைத் தேர்ந்தெடுக்காததால், பேய்படமாகவும் இல்லாமல், செல்வராகவன் படமாகவும் இல்லாமல் கொஞ்சம் தள்ளாடுகிறது 'நெஞ்சம் மறப்பதில்லை'.