Skip to main content

பா.இரஞ்சித் ஸ்போர்ட்ஸ் படம் எடுத்தா எப்படி இருக்கும்? சார்பட்டா பரம்பரை - விமர்சனம்  

Published on 23/07/2021 | Edited on 23/07/2021
sarpatta parambarai

 

அட்டகத்தி, மெட்ராஸ் படங்களின் மூலம் ஒரு புதிய வாழ்வை, வெகுஜன சினிமாக்களில் சொல்லப்படாத அல்லது சரியாய் சொல்லப்படாத கதைகளை, போராட்டத்தை சரியாக சொன்னதன் மூலம் ஒரு பெரும் நம்பிக்கையை உருவாக்கியதோடு ஒரு புதிய அலையையும் ஏற்படுத்தியவர் பா.இரஞ்சித். அதன் பிறகு வந்த கபாலி, காலா படங்களில் மலேசியா, மும்பை என்று சுற்றி வந்த இரஞ்சித் தற்போது 'சார்பட்டா பரம்பரை' மூலம் மீண்டும் வடசென்னைக்கு வந்துள்ளார். இந்த முறை வடசென்னையில் பிரபலமாக இருந்த 'பாக்சிங்' போட்டிகளின் அடிப்படையில் 1970களில் நடக்கும் கதையுடன் களமிறங்கியுள்ளார்.

 

'ரோசமான ஆங்கில குத்துசண்டை' என்ற கேப்சனில் இருந்தே இது வழக்கமான ஸ்போர்ட்ஸ் படமாக மட்டும் இருக்காது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி ஆழமான ஆய்வு, நிஜமான வாழ்வியல், அந்த காலகட்டத்தின்  அரசியல், வியக்கவைக்கும் கலை வேலைப்பாடுகள், மறக்க முடியாத பாத்திரங்கள் என சேர்த்து அந்த நம்பிக்கையை காப்பாற்றியுள்ளார் இரஞ்சித். இந்தியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஆண்டில் நடக்கும் கதையாகத் தொடங்குகிறது படம். ஆங்கிலேயர்கள் பழகிக்கொடுத்துப் போன குத்துச்சண்டை விளையாட்டில் முக்கிய இரு அணிகளாகத் திகழும் சார்பட்டா பரம்பரை மற்றும் இடியாப்ப பரம்பரை, இரண்டுக்கும் இடையிலான போட்டியில் சார்பட்டா பரம்பரையின் பயிற்சியாளரான ரங்கன் வாத்தியார் ஏற்றுக்கொள்ளும் ஒரு பெரிய சவாலை நிறைவேற்ற கபிலன் களமிறங்குகிறார். அதற்கு ஏற்படும் தடைகள், இடையில் குறுக்கிடும் தமிழக அரசியல் சூழ்நிலை, திசைமாறும் கபிலன் வாழ்க்கை என ஒரு சுவாரசியமான படமாக அமைந்திருக்கிறது சார்பட்டா பரம்பரை.

 

sarpatta parambarai arya dushara

 

'பரம்பரை' என்றதும் நமக்கு ஒரு குடும்பத்தின் வாரிசுகள் அல்லது உறவுகள் என்று தோன்றுகிறது அல்லவா? ஆனால், அந்தப் பரம்பரைகள் பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்களையும் கொண்ட, பாக்சிங் விளையாட்டுக்காக ஒருவரை குருவாக ஏற்றுக்கொண்டவர்களால் உருவான பரம்பரைகள். பரம்பரைகளுக்கு இடையிலான போட்டி, ஒரே பரம்பரைக்குள்ளும் நிலவும் வன்மம், சாதிய வெறுப்பு, பரம்பரையின் மீது சேர்க்கப்படும் மான உணர்வு, விளையாட்டில் அரசியல் கலப்பு, குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும் விளையாட்டு வீரர்கள் என பாக்சிங் ஸ்டோரிக்கு மிக சுவாரசியமான பின்னணி சேர்த்ததிலும் கபிலன் (ஆர்யா),  ரங்கன் வாத்தியார் (பசுபதி), மாரியம்மா (துஷாரா விஜயன்), டாடி (ஜான் விஜய்), வேம்புலி (ஜான்) என மிக மிக சுவாரசியமான பாத்திரங்களை உருவாக்கியதிலுமே பாதி வெற்றியை உறுதி செய்துவிட்டது பா.ரஞ்சித் - தமிழ்பிரபா கதைக்கூட்டணி. அதிலும் டான்சிங் ரோஸ் (ஷபீர்) பாத்திரம் ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸ். ஆர்யா, பசுபதி, துஷாரா, கலையரசன், ஜான் விஜய், ஷபீர், சந்தோஷ், முத்துக்குமார், ஜி.எம்.சுந்தர் என படத்தின் நடிகர்கள் ஒவ்வொருவரும் பெரும் பலம். படம் முடிந்தும் பாத்திரங்கள் பெயர்களுடன் நினைவில் நிற்கும் அளவுக்கு சிறப்பான உருவாக்கம் மற்றும் நடிப்பு அமைந்திருக்கிறது. ரஞ்சித் படங்களில் பெண் பாத்திரங்கள் சித்தரிக்கப்படும் விதம் முக்கியமானது. நாயகி மாரியம்மாவாக வரும் துஷாரா, நாயகன் கபிலனின் தாயாக வரும் அனுபமா, இருவரின் பாத்திரங்களும் மிக தைரியமான, நாயகனை சார்ந்து மட்டுமே வாழாத உறுதியான பெண்கள். அதிலும் நாயகி பாத்திரம் திருமணம் முடிந்ததும் போடும் ஆட்டம், முழு உற்சாகம்.

 

ரஞ்சித் படத்தில் அரசியல் இல்லாமலா? எமெர்ஜென்சி காலகட்டம், திமுக - அதிமுக தொண்டர்களின் எதிரெதிர் மனநிலை உள்ளிட்ட அந்த காலகட்டத்தின் அரசியல் நிகழ்வுகள் சரியாக சேர்க்கப்பட்டுள்ளன. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து பாக்சிங்குக்கு வரும் வீரன் எப்படி ஆதிக்க மனநிலை கொண்டவர்களால் தடுக்கப்படுகிறான் என்பதும் குற்ற நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறான் என்பதும் அழுத்தமாக சொல்லப்பட்டுள்ளது. குத்துச்சண்டை நடக்கும் அரங்கம், கதை நடக்கும் களம் உள்ளிட்டவற்றை மிக சிறப்பாக உருவாக்கியுள்ளது கலை இயக்குனர் ராமலிங்கத்தின் குழு. ஒளிப்பதிவாளர் முரளி, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் எப்போதும் ரஞ்சித் படங்களுக்கு பலம் சேர்ப்பவர்கள். சார்பட்டாவிலும் அது தொடர்கிறது.

 

இரண்டாம் பாதியின் நீளமும் தொய்வும் படத்தின் குறைகள். ஒரு கட்டத்திற்கு மேல் இதுதான் நடக்கப்போகிறது என்பதை அறிந்தே அரை மணிநேரம் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆனாலும் அதையெல்லாம் தாண்டி கெலிக்கிறது சார்பட்டா பரம்பரை.                                                             
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சர்ப்ரைஸ் கொடுத்த தங்கலான் படக்குழு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

தமிழ் சினிமா ஹீரோவில், ஹேட்டர்ஸே இல்லாத எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் விக்ரம். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் வகையில் தனது அர்ப்பணிப்பை கொடுக்கும் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து பெற்றாலும் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள், ஐ உள்ளிட்ட படங்கள் அவரது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. 

அந்த வரிசையில் தற்போது தங்கலான் படம் உருவாகி வருகிறது. இந்த சூழலில் இன்று பிறந்தநாள் காண்கிறார் விக்ரம். அதனால் ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கலான் படக்குழு, விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளது. அதில் அவரது கதாபாத்திரத்திற்காக அவர் தயாராகும் முறையை மற்றும் அவரது அர்ப்பணிப்பை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. 

pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

இப்படத்தை பா. ரஞ்சித் இயக்கி வரும் நிலையில், விக்ரமோடு பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ள நிலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் தள்ளி போய் இம்மாதம் வெளியாவதாக பின்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் ரிலீஸ் தேதி அறிவித்தபாடில்லை. இந்த சூழலில் தற்போது வெளியாகியுள்ள ஸ்பெஷல் வீடியோவில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

“கடன் வாங்கி கதை சொல்ல முடியாது” - மாரி செல்வராஜ் ஆதங்கம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
mari selvaraj about maamannan in pk rosy film festival

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘ரோஸி திரைப்பட விழா’ கடந்த  8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் நிறைவடையும் இந்த விழாவில் இன்று மாமன்னன் திரைப்படம் திரையிடப்பட்டது. பின்பு படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.  

அப்போது, மாமன்னன் படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார் மாரி செல்வராஜ். அதன் ஒரு பகுதியில், “மாமன்னன் படம் ஒரு சாதாரண சம்பவம். எங்க அப்பா ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். நான் சேரில் உட்காந்திருக்கேன். அவர் உட்காரவில்லை. அன்னைக்கு எங்க அப்பா உட்பட யாருமே ஃபீல் பண்ணவில்லை. ஆனால் எனக்கு அவர் உட்காரவில்லை என தோன்றியது. ஏன் என கேட்டபோது நாங்க உட்காரமாட்டோம் என்றார். சின்ன வயதில் நானே நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு பார்க்கும் போது அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அது ஒரு கதையாக மாறுகிறது. இன்றைக்கு பரியேறும் பெருமாள் பண்ணிட்டு போனபோது கூட, எங்க அப்பா அப்படித்தான் நின்னுகிட்டு இருந்தார். 

என்னுடைய படைப்பு 10 வருடம் கழித்து கேள்விக்கு உட்படுத்தப்படலாம். எனக்கு இன்றைக்கு உள்ள வலி, அதை வெளியேற்ற வேண்டும் அவ்வளவுதான். ஒரு படைப்பாளியாக ஒரு சுமையை இறக்குகிறேன். எனக்கு விடுபடுவதற்கான வழி தான் இந்த சினிமா. என்னுடைய படைப்பு எதுவாக மாறும் என்பது தெரியாது. எனக்குள் இருக்கும் கோவத்தை மட்டும் கலையாக மாற்றுவதற்கு நான் விரும்பவில்லை. என் வாழ்க்கையை கலையாக மாற்றுவது ரொம்ப ஈஸி. என் வாழ்க்கையில் ஒரு அறம் இருக்கிறது என நம்புவது, அந்த அறத்தை படம் பிடித்துக் காட்டுவது, அதன் மூலம் மனிதத் தன்மையை கேள்விக்குட்படுத்துவது. இதைத்தான் என்னால் பண்ண முடியும். அது ஏற்றுக் கொள்ளப்படுகிறதா? இல்லையா? என்பது பற்றி எனக்கு கவலை கிடையாது.      

நமக்கு முன்னாடி ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கையைத்தான் படம் எடுத்துட்டு இருக்கிறோம். தமிழ்நாட்டில் ஒரு 10 பேர் முக்கிய ஆளுமைகளாக பேசிக்கொண்டு வருகிறோம். தனக்கு நடந்ததை எல்லாம் சொல்ல முடியாமல் நசுங்கி இறந்து போனவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள். அவர்கள் வாழ்கையும் கதைதான். 10 பேரோட வெற்றிக்கதையை சொல்வது மட்டும் என்னுடைய வேலை கிடையாது. நசுங்கி, பிசுங்கி காணாமல் போனவர்களின் கதையைத் தோண்டி எடுத்து, அவர்கள் யாரால் நசுக்கப்பட்டார்கள் என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது. ஏன் நசுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம் என சொல்லிக்கொண்டே இருக்கீங்க என கேட்பார்கள். வேறு வழி இல்லை. என்னுடைய கதையைச் சொல்லும் போது அப்படித்தான் சொல்ல முடியும். நான் இன்னொருத்தன் கதையை கடன் வாங்கி சொல்ல முடியாது. அந்தக் கதைக்குள் ஒரு முரண்பாடு இருந்தது என்றால், அதற்கு நான் ஒன்னும் செய்ய முடியாது. மறுபடி மறுபடி எனக்கு அப்படிப்பட்ட வாழ்க்கைதான் கொடுக்கப்பட்டது. அந்தக் கேள்விகளை நான் கேட்டுக்கொண்டுதான் இருப்பேன்” என ஆதங்கம் நிறைந்து பேசினார்.