Skip to main content

ஆசிபா... அசுரவதம்... என்ன தொடர்பு?

Published on 30/06/2018 | Edited on 04/07/2018

முதல் காட்சி... ஒருவரின் செல்ஃபோன் ஒலிக்கிறது. எடுத்துப் பேசுவதற்குள் மிஸ்ட் கால் ஆகிறது. மீண்டும் அதே போல நான்கைந்து முறைகள். திருப்பி அழைத்தாலும் எடுக்கவில்லை. வெறியேறுகிறது அவருக்கு. கடைசியில் அழைத்து, "இன்னும் ஒரு வாரத்தில் உன்னைக் கொல்லப் போகிறேன்" என எச்சரிக்கிறது ஒரு குரல். அப்பொழுதிலிருந்து எங்கு சென்றாலும் யாரோ ஒருவர் பின்தொடர, ஏதோ ஒன்று தவறாக நடக்க என அவருக்கு நொடிக்கு நொடி பதைபதைப்பு, உயிர்பயம். வதம் செய்யத் துரத்தும் சரவணனாக சசிகுமார், உயிர் பிழைக்க ஓடும் அசுரனாக வசுமித்ர நடிக்க மருதுபாண்டியன் இயக்கியுள்ள திரைப்படம் 'அசுரவதம்'.

 

sasi



எந்த வித எக்ஸ்ட்ரா கதைகள், காட்சிகள் இல்லாமல் நேரடியாக முக்கிய கதைக்குச் சென்று பதற்றம் நிறைந்த காட்சிகளால் தொடரும் படம் தொடக்கத்தில் மிகுந்த நம்பிக்கையை அழிக்கிறது. பழிவாங்கும் கதை என்பது சற்று நேரத்தில் தெரிந்துவிட்டாலும் எதற்கு, எப்படி என்பதை பேச்சைக் குறைத்து காட்சி மொழியில் சொல்லியிருப்பதில் வித்தியாசப்படுகிறது அசுரவதம். ஆனாலும் ஒரே ஒரு எதிரி, அவரைப் பழிவாங்க ஒரே ஒரு ஆள், தொடர்ந்து பல முயற்சிகள் என்பதுதான் சற்று அயற்சியைத் தருகிறது. தொடக்கக் காட்சிகளில் சசிகுமார் யாரென தெரியாமல் பரபரப்படையும் நம்மை, இடைவேளை வரை சசிகுமார் குறித்த சிறிய தகவல் கூட இல்லாமல் இருப்பதால், இடைவேளை நெருங்க நெருங்க  "யார்ரா நீ" என வசுமித்ரவுடன் சேர்ந்து கத்த வைக்கிறது திரைக்கதை. காரணம் சொல்ல வரும் ஃபிளாஷ்பேக்  தாமதமாக வருவது ஒரு குறை.
 

vasumithra



சசிகுமார், எதையும் செய்யக் கூடியவர், எத்தனை பேர் வந்தாலும் அடிக்கக் கூடியவர், அரிவாளை வைத்து வெட்டி, அறுத்து, துப்பாக்கி கொண்டு சுட்டு என எல்லா வழிகளிலும் எப்பொழுதும் போல துவம்சம் செய்கிறார். ஃபிளாஷ்பேக்கில் கலங்கிக் கதறும் காட்சியில் நம்மையும் கலங்க வைக்கிறார். வசுமித்ர, தமிழுக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு சிறந்த நடிகர். முதலில் அவரோடு சேர்ந்து நமக்கும் பயம் வருகிறது, பதற்றம் வருகிறது, இறுதியில் வெறுப்பும் வருகிறது. அப்படியொரு இயல்பான நடிப்பு. நந்திதா ஸ்வேதா, இயல்பான நடிப்பு, மேக்-அப்பால் சற்றே அந்நியமாகத் தோன்றும் தோற்றம். நமோ நாராயணன், ராஜசிம்மன், ஸ்ரீஜித் ரவி, 'ஆடுகளம்' முருகதாஸ் என தேவைக்கேற்ப சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் நடிகர்கள் படத்துக்கு பலம்.

 

asuravadham



பெரிய அடுக்குகள் இல்லாத  வழக்கமான ஒரு கதையை காட்சி மொழியில் இத்தனை புதியதாய் காட்ட முடியுமென்று நிரூபித்து தன் ஒளிப்பதிவால் இயக்குனரின் விஷனாய் இருந்து நம்மை படத்தோடு பரபரப்பாகக் கூட்டிச் சென்றுள்ளார் எஸ்.ஆர்.கதிர். இருளில் நிழல்கள், ஒற்றை சிகரெட் நெருப்பை அத்தனை சிறப்பாகப் பயன்படுத்தியது, பயத்தை ஊட்டும் கோணங்கள் என ஒளிப்பதிவில் உண்மையாகவே தன் வித்தைகளை மொத்தமாக இறக்கி வைத்திருக்கிறார் கதிர். கோவிந்தின் பின்னணி இசை பதற்றத்தை அதிகரிக்கிறது, சசிகுமாருக்கு பில்ட்-அப்பும் கொடுக்கிறது. பாடல்கள் படத்தோடு கடந்து செல்கின்றன. திலீப் சுப்பாராயனின் சண்டைக் காட்சிகள் செம்மை. அந்த லாட்ஜ் சண்டைக் காட்சி ஒரு பரபர விருந்து.

 

 


விறுவிறுப்பான த்ரில் காட்சிகள், அழுத்தமான ஃபிளாஷ்பேக் இரண்டும் இருந்தும் இவை இணைக்கப்பட்ட விதம் நம்மை படத்தின் தாக்கத்தை சற்றே குறைத்திருக்கிறது. ஆனாலும், ரசிக்க சில பல விஷயங்களைக் கொண்ட ஒரு அதிரடி, அடிதடி, பழிவாங்கல் படம், இந்த அசுரவதம். கொடூரர்களால் நசுக்கப்பட்ட பிஞ்சு ஆசிபா நம் நினைவில் வந்து படம் முடியும்போது ஒரு அழுத்தத்தை ஏற்படுத்துகிறாள்.                                             
           

 

 

சார்ந்த செய்திகள்