சாமி ஸ்கொயர் கொடுத்த சறுக்கலுக்கு பிறகு மீண்டும் ஒரு கமர்சியல் படத்துடன் களமிறங்கியுள்ளார் இயக்குனர் ஹரி. அவரது அதே வழக்கமான பாணியில் ஆக்ஷன், காதல், குடும்ப பாசம் என களத்தில் குதித்துள்ள இந்த யானை ஹரிக்கு கை கொடுத்ததா..?
ராமேஸ்வரத்தில் மிகப் பெரிய குடும்பமாக இருக்கும் பிஆர்வி குடும்பத்தின் தலைவரான ராஜேஷின் இரண்டாவது மனைவி ராதிகாவின் மகனாக இருக்கும் அருண் விஜய் அந்த குடும்பத்தை யானை போல் காத்து தன் தோள்மேல் சுமக்கிறார். இவர்களது எதிரி குடும்பமான சமுத்திரம் குடும்பத்தில் இரட்டை மகன்கள் ஆக இருக்கும் கேஜிஎப் வில்லன் ராமசந்திர ராஜு இவர்களின் குடும்ப தகராறில் இறந்துவிட இன்னொரு ராமச்சந்திர ராஜு அருண் விஜய்யின் பிஆர்வி குடும்பத்தை பழிவாங்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதையடுத்து நடக்கும் சம்பவங்களே படத்தின் மீதி கதை.
இயக்குநர் ஹரியின் அதே வழக்கமான கமர்சியல் பார்முலாவில் உருவான இப்படம், ஆரம்பத்தில் சற்று மெதுவாக ஆரம்பித்து அப்படியே நகர்ந்து போகப்போக அழுத்தமான செண்டிமென்ட் காட்சிகளுடன் வேகமாக நகர்கிறது. தன் முந்தைய படங்களில் சென்டிமென்ட் குறைவாகவும் ஆக்சன் காட்சிகளை அதிகமாகவும் வைத்து ரசிகர்களை ரசிக்க வைத்த இயக்குநர் ஹரி இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளையும் சென்டிமென்ட் காட்சிகளையும் சரிசமமாக அமைத்து புது முயற்சி செய்துள்ளார். சரியான கலவையில் ஆக்ஷன் காட்சிகளையும் சென்டிமென்ட் காட்சிகளையும் கலந்து, கூடவே தன் படங்களுக்கே உரித்தான பஞ்ச் வசனங்களையும், பொறி பறக்கும் காட்சி அமைப்புகளையும் வைத்து விட்ட இடத்தை பிடித்துள்ளார் இயக்குநர் ஹரி.
ஹரி படங்களுக்கே உரித்தான நாயகர்களின் பிம்பத்தை அப்படியே பிரதிபலித்து நடித்துள்ளார் நாயகன் அருண் விஜய். நிமிர்ந்த நடையும், மிடுக்கான தோற்றமும், அதிரடியான பஞ்ச் வசங்களும், நெகிழ்ச்சியான காட்சிகளில் கண்கலங்க வைக்கும் நடிப்பும் என ஹரி படத்தின் ஆஸ்தான நாயக பிம்பத்தை அப்படியே கண்முன் நிறுத்தியுள்ளார் அருண் விஜய். குறிப்பாக இவரின் உடல்வாகு அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் கம்பீரமாக அமைந்துள்ளது படத்துக்கு பிளஸ் ஆக அமைந்துள்ளது. வழக்கமான நாயகியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி சென்றுள்ளார். முந்தைய படங்களில் வரும் அதே நாயகி மெட்டீரியல் தான் என்றாலும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நன்றாகவே கையாண்டுள்ளார். நகைச்சுவை காட்சிகளுக்கு பொறுப்பேற்றுள்ள யோகி பாபு சில இடங்களில் சிரிக்க வைக்கவும் பல இடங்களில் சோதிக்கவும் செய்கிறார்.
குறிப்பாக இவருடன் சேர்ந்து காமெடி செய்துள்ள விஜய் டிவி புகழ் காமெடியை தவிர்த்து மற்ற அனைத்தையும் செய்து ரசிகர்களை சோதித்துள்ளார். ஜாதி வெறி பிடித்த மிருகமாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். அதேபோல் மூத்த நடிகர் ராஜேஷ் மற்றும் அவரது மூத்த தாரத்தின் மகன்களாக வரும் சஞ்சீவ், போஸ் வெங்கட், சமுத்திரக்கனியின் மகள் அம்மு அபிராமி, சமுத்திரக்கனியின் மனைவி ஐஸ்வர்யா ஆகியோர் அவர் அவருக்கு கொடுத்த வேலையை நிறைவாக செய்துள்ளனர். வில்லன் ராமசந்திர ராஜுவுக்கு படத்தில் அதிக வேலை இல்லை. அவ்வப்போது வந்து முகபாவனைகள் மூலமே திகில் காட்டி சென்றுள்ளார். மற்றபடி ஆக்சன் காட்சிகளில் இவரின் சம்பவம் வெறித்தனமாக இருக்கப்போகிறது என்று ரசிகர்களை என்ன வைத்து கடைசியில் ரசிகர்களுக்கு பல்பு கொடுத்துள்ளார்.
ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை மெர்சல். சென்டிமென்ட் காட்சிகளிலும், ஆக்ஷன் காட்சிகளிலும் சிறப்பான இசையை கொடுத்து அந்த காட்சிகளுக்கு உயிரூட்டி உள்ளார். ஒளிப்பதிவாளர் கோபிநாத் சிறப்பான முறையில் ஒளிப்பதிவு செய்து ராமேஸ்வரத்தை சுழன்று சுழன்று படம்பிடித்து அந்த ஊருக்கே நம்மை கூட்டி சென்றுள்ளார். இவரும் ஆக்சன் காட்சிகளை சிறப்பான முறையில் கையாண்டு பார்ப்பவர்களுக்கு பரவசம் கொடுத்துள்ளார். குறிப்பாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட ஆக்சன் காட்சி கைத்தட்டல் பெற்றுள்ளது.
படம் ஆரம்பம் ஆகி அரை மணி நேரம் வரை வரும் சம்பிரதாய காட்சிகள் சற்று சலிப்பை கொடுத்தாலும் அதன் பின் வரும் சென்டிமென்ட் காட்சிகளும் ஆக்ஷன் காட்சிகளும் அதனை சரிசெய்கிறது. மொத்தத்தில் குடும்பத்துடன் சென்று ரசிக்கும்படியான ஒரு நிறைவான படத்தை கொடுத்து, விட்ட இடத்தை பிடித்துள்ளார் இயக்குநர் ஹரி.
யானை - பலம்!