மேயாதமான், ஆடை படங்கள் மூலம் கவனிக்கத்தக்க இயக்குனர்கள் பட்டியலில் இணைந்த ரத்னகுமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் குலு குலு. எப்போதும் பஞ்ச் காமெடிகள் மூலம் தியேட்டரை அதிர செய்யும் சந்தானம் முதல்முறையாக ஒரு டார்க் காமெடி படத்தில் அதுவும் முற்றிலும் வாய் திறக்காத அமைதியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல் ஏ1 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அதே கூட்டணியில் உருவாகியிருக்கும் மற்றொரு படம். இப்படி இந்த படத்திற்கு பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் இப்படம் பூர்த்தி செய்ததா...?
அமேசான் காடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட சந்தானம் நாடோடியாக வாழ்ந்து வருகிறார். பல நாடுகள், பல ஊர்கள் திரிந்து, பல்வேறு மொழிகள் பேசி நாடோடியாக வாழ்ந்து வரும் இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். யார், எந்த சமயத்தில் என்ன உதவி கேட்டாலும் தயங்காமல் மற்ற வேலைகளை விட்டுவிட்டு உதவி செய்யும் சந்தானத்தை உபயோகப்படுத்திக் கொள்ள நினைக்கும் மூன்று நண்பர்கள் அவருடைய ஒரு நண்பரை காப்பாற்றச் சொல்லி உதவி கேட்கிறார்கள். வில்லன் கும்பல்களால் கடத்தி செல்லப்பட்ட அந்த நண்பரை சந்தானம் காப்பாற்ற செல்கிறார். இந்தப் பயணத்தின் கடைசியில் சந்தானம் அந்த நண்பரை காப்பாற்றினாரா இல்லையா என்பதே இப்படத்தின் மீதி கதை.
மேயாதமான், ஆடை படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் ரத்னகுமார் இந்த படத்தை ஒரு காமெடி படமாக கொடுத்து ரசிக்கவைக்க முயற்சி செய்துள்ளார். பொதுவாக சந்தானம் படங்கள் என்றாலே அவை முற்றிலும் கலகலப்பான காமெடி படமாக அமையும். ஆனால், இந்தப் படத்தில் அப்படி எதுவும் இல்லாமல் சந்தானத்தை சைலன்ட் ஆகவே காட்டி மற்றவர்களை காமெடி செய்ய வைத்து அவர்கள் மூலம் கிச்சுகிச்சு மூட்ட முயற்சி செய்த இயக்குனர் அதை இன்னமும் சிறப்பாக செய்திருக்கலாம். படம் ஆரம்பித்து ஒரே நேர்க்கோட்டில் பயணிக்காமல் ஆங்காங்கே பல இடங்களில் டைவர்ட் ஆகி சில பல கிளைக் கதைகள் மூலம் எங்கெங்கேயோ பயணித்து கடைசியில் விட்ட இடத்திலேயே வந்து முடிகிறது. சில பல காமெடி காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் மெஜாரிட்டியான காட்சிகள் பார்ப்பவர்களை சோதித்து அயர்ச்சியை கொடுத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது சந்தானம் படம். சந்தானத்தின் படம் என்றாலே கலகலப்பான படமாக இருக்கும் என்று எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு சந்தானத்தை வைத்து ஒரு டார்க் காமெடி படம் என்பதை ஏற்றுக்கொள்ளவே நேரம் பிடிக்கிறது. அதுமட்டுமின்றி திரைக்கதையின் வேகமும் சற்றே மெதுவாக நகர்ந்து ஆமை வேகத்தில் செல்வதும் படத்திற்கு மைனஸ் ஆக அமைந்துள்ளது. பொதுவாக ஒரே மாதிரியாக நடிக்கும் நடிகர்களை வைத்து இம்மாதிரியான பரீட்சாத்த முயற்சிகளில் ஈடுபடும் இயக்குனர் கதையாடல் மேல் இன்னமும் கவனமாக இருந்து திரைக்கதையை இன்னமும் வேகமாகவும், சிறப்பாகவும் அமைத்து ரசிகர்களுக்கு கொடுக்கும் பட்சத்தில் இம்மாதிரியான புது முயற்சிகள் கண்டிப்பாக வரவேற்பை பெறும். ஆனால், இப்படம் அந்த இடத்தில் தான் சறுக்கி இருக்கிறது.
எப்போதும் கலகலப்பான காமெடி காட்சிகளின் மூலம் கவனம் இருக்கும் சந்தானம் இப்படத்தில் சற்றே அடக்கி வாசித்திருக்கிறார். எந்த ஒரு இடத்திலும் வசனம் பேசாமல் வெறும் முகபாவனைகள் மூலமே உணர்ச்சிகளை கடத்தி தேவைப்படும் இடங்களில் மட்டும் ஓரிரு வரி வசனங்கள் பேசி ரசிக்க வைக்க முயற்சி செய்துள்ளார். தனியாக பார்க்கும் பொழுது சந்தானத்தின் நடிப்பு சிறப்பாகவே இருந்தாலும் கதைக்கும், கதையாடல்களுக்கும் அது பொருத்தமாக இருந்ததா என்றால் சற்று கேள்விக்குறியே?
சந்தானத்திடம் உதவி கேட்கும் மூன்று நண்பர்கள் அவரவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர். அவர்களின் கடத்தப்பட்ட நண்பனாக வரும் ஹரிஷ் குமார் ஆங்காங்கே சில இடங்களில் ஓவர் ஆக்டிங் செய்தாலும் அவை ரசிக்கும்படி இருந்து கவனம் பெற்றுள்ளது. இவரது காதலியாக வரும் நமிதா கிருஷ்ணமூர்த்தி துடுக்கான பெண்ணாக நடித்து சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். வெளிநாட்டிலிருந்து வரும் பெண்ணாக நடித்திருக்கும் அப்துல்லா சந்திரா கவனம் பெற்றுள்ளார். வில்லனாக வரும் பிரதீப் ராவத் வழக்கமான வில்லத்தனம் காட்டி மிரட்டியுள்ளார். கடத்தல்கார இலங்கை தமிழர்களாக நடித்து இருக்கும் ஜார்ஜ் மரியான் டி எஸ் ஆர், முருககனி, தர்ஷன் ஆகியோர் அப்பாவித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி ஆங்காங்கே சிரிக்க வைத்துள்ளனர். இருந்தும் இப்படியான அப்பாவி கடத்தல்காரர்களை கதைக்காக பயன்படுத்தி இருந்தாலும் அவர்களை ஏன் இலங்கை தமிழர்களாக காட்டவேண்டும் என்ற கேள்விக்கு விடை இல்லாதது சற்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
போலீசாக நடித்திருக்கும் தீனா மிடுக்கான தோற்றத்துடன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்துள்ளார். சில காட்சிகளே வந்தாலும் லொள்ளு சபா மாறன், சேசு ஆகியோர் கலகலப்பூட்டி சென்றுள்ளனர்.
விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் ட்ராவல் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன. சந்தோஷ் நாராயணனின் இசையில் அன்பரே, அம்மா நானா பாடல்கள் கவனம் பெற்றுள்ளன. அதே போல் இவரது பின்னணி இசையும் படத்தின் மூடை நன்றாக என்ஹான்ஸ் செய்து பார்ப்பவர்களுக்கு ஆங்காங்கே பரவசம் கொடுத்துள்ளது.
சந்தானம் படம் என்றாலே கலகலப்பாக தான் இருக்கும் என்று எதிர்பாராமல் அவரிடமிருந்து வித்தியாசமான முயற்சியை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கான படமாக இப்படம் அமைந்துள்ளது.
குலு குலு - ஜில் குறைவு!