Skip to main content

தூக்குதுரைன்னா அடாவடியுமில்லை, அலப்பறையுமில்லை... வேறு என்ன தெரியுமா? விஸ்வாசம் - விமர்சனம்    

Published on 11/01/2019 | Edited on 11/01/2019

தூக்குதுரைன்னா அடாவடி...  தூக்குதுரைன்னா அலப்பறை...  தூக்குதுரைன்னா தடாலடி... தூக்குதுரைன்னா கட்டுக்கடங்காத கிராமத்துக் காட்டு அடி...

இது 'விஸ்வாசம்' படத்தில் தம்பி ராமையா அஜித்திற்குக் கொடுக்கும் அறிமுகம். ஆனால், படம் முடியும்போது தூக்கு துரை இது எதுவுமில்லாமல் வேறு பிம்பமாக நம் மனதில் பதிகிறார். அது என்ன பிம்பம்? பார்ப்போம்.

 

ajith viswasam



'விவேகம்' படத்திற்குப்  பிறகு மீண்டும் சிவாவுடன் நான்காவது முறையாக கூட்டணி அமைத்த அஜித் படம் என்றவுடன்  'மீண்டும் சிவாவா?' என்ற எண்ணம் அஜித் ரசிகர்கள் உள்பட அனைவருக்கும் ஏற்பட்டது உண்மை. பாடல்கள், ட்ரெய்லர் என படிப்படியாக நம்பிக்கை ஊட்டி, எதிர்பார்ப்பை எகிறச் செய்த இந்த 'விஸ்வாசம்' படம் ரசிகர்களுக்கு விசுவாசமாக இருக்கிறதா?

கொடிவிலார்பட்டி மக்களுக்கு எந்தப் பிரச்சனை என்றாலும் வரிந்துகட்டிக்கொண்டு சண்டைக்கு செல்லும் அஜித், ஊர் மக்கள் வணங்கும் மரியாதைக்குரியவராகவும் வாழ்ந்து வருகிறார். மும்பையிலிருந்து  அந்த கிராமத்திற்கு மெடிக்கல் கேம்ப் அமைத்து மக்களுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக வருகிறார் நயன்தாரா. அப்போது அஜித்தின் சேட்டைகளும் அவரது  நல்ல மனசும் பிடித்துப்போக, அஜித் மீது காதல் கொண்டு திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையையும் பெற்றுக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அஜித்தை விட்டுப் பிரிந்து குழந்தையுடன் மும்பைக்கு சென்றுவிடுகிறார் நயன்தாரா. பத்து ஆண்டுகள் கழித்து ஊரில் நடக்கும் திருவிழாவுக்கு மனைவி, குழந்தையை அழைக்க மும்பை செல்கிறார் அஜித். அங்கு தன் குடும்பத்துக்கு இருக்கும் பெரிய ஆபத்தைத் தெரிந்துகொள்கிறார். ஆபத்து யாரால், அஜித் அவர்களை எப்படி காப்பாற்றுகிறார், நயன்தாரா மீண்டும் அவரை ஏற்றுக்கொள்கிறாரா என்பதே இயக்குனர் சிவாவின் விஸ்வாசம்.

 

nayanthara



விவேகம் படத்திற்குப் பிறகு மீண்டும் தன் பழைய ஃபார்முலாவுக்குத் திரும்பியிருக்கிறார் இயக்குனர் சிவா. பழைய ஃபார்முக்கும் திரும்பியிருக்கிறார் என்றே சொல்லலாம். அமர்க்களமான தூக்குதுரையின் அறிமுகத்துடன் படத்தை ஆரம்பித்து போகப்போக கலாட்டா, குடும்பம், காதல், கல்யாணம், பிரிவு, வலி, பாசம், நேசம் என பயணிக்கிறது விஸ்வாசம். அதிரடியாகவும் கலகலப்பாகவும் நகரும் முதல் பாதியில் அதிரடி வொர்க் அவுட்டாகியுள்ள அளவுக்கு காமெடி வொர்க் அவுட் ஆகவில்லை. தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ ஷங்கர் தொடங்கி ரமேஷ் திலக் வரை நிறைய காமெடி நடிகர்களும் கொஞ்சமாக காமெடியும் இருக்கிறது. படத்தில் ஆரம்பத்தில் இருக்கும் திருவிழாக் கூட்டம் படம்  முதல் பாதி முழுவதும் இருக்கிறது, காரணம் இருந்தாலும் இல்லையென்றாலும். தூக்குதுரையின் சேட்டைகள், சண்டைகள், பாடல்கள், காதல் காட்சிகள் என முதல் பாதி நகர, இடைவேளையில்தான் கதை தொடங்கி படம் உச்சத்தைத் தொடுகிறது. பின் மீண்டும் காமெடி, பாசம் என இறங்கி நகரும் இரண்டாம் பாதி ஒரு நல்ல மெஸேஜுடன் முடிகிறது. பழக்கப்பட்ட கதை, பல முறை பார்த்த திரைக்கதை, முழுவதுமாக ஒர்க்-அவுட் ஆகாத காமெடி என அனைத்தையும் தாண்டி படத்தைத் தாங்கி நிற்பவை  அஜித் - அனிகா இடையிலான அப்பா - மகள் பாசக்காட்சிகளும் அஜித் பேசும் அதிரடி, ஆத்மார்த்த வசனங்களும்தான். படத்தின் பலமாக இந்த இரண்டு விஷயங்களும் இருக்க, மற்றவை மிக பலவீனமாக இருக்கின்றன.

படத்தில் மதுரை மொழி பேசி மாஸ் காட்டுகிறார் அஜித். ஆனால், மதுரை பேச்சு வழக்கு ஆங்காங்கே மிஸ் ஆகிறது. சண்டைக் காட்சிகளிலும், செண்டிமெண்ட் காட்சிகளிலும் அதகளப்படுத்துகிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு கருப்பு முடி, கலர்ஃபுல் உடை, கலகலப்பான பேச்சு என செம ஆக்டிவ் அஜித். அதே சமயம் எமோஷனல் காட்சிகளில் உருகவும் வைத்துள்ளார். இறுதியில் 'என் சாமி' என்று அஜித் சொல்லும்போது கலங்காதவரும் கலங்குவார். இன்னொரு பக்கம் அஜித்திற்கு இணையாக ஆளுமை காட்டுகிறார் நயன்தாரா. அழகான காதலி, கோபமான பிசினெஸ் வுமேன் மனைவி என இரு பரிமாணங்களிலும் நயன்தாரா சிறப்பு. அஜித்தின் மகளாக நம் மனதை அள்ளி பாசத்தைப் பெருக வைத்துள்ளார் 'என்னை அறிந்தால்' அனிகா. அஜித்துக்கும் இவருக்கும் உண்மையான தந்தை - மகள் போல அப்படி ஒரு அந்நியோன்யம்.

 

viswasam jegapathy



படம் முழுவதும் அஜித்தின் கூடவே பயணிக்கும் வேடம் ரோபோ சங்கருக்கும், தம்பி ராமையாவுக்கும். ஆங்காங்கே கிச்சுகிச்சு மூட்ட இவர்கள் செய்யும் முயற்சியில் முந்துவது ரோபோ சங்கர். இரண்டாம் பாதியில் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுக்கும் விவேக் - கோவை சரளா காம்போ கொஞ்சம் கொஞ்சம் சிரிக்கவைக்கின்றனர். உணர்ச்சிகரமான வில்லனாக நடித்துள்ளார் நடிகர் ஜெகபதி பாபு. உணர்ச்சிகரம் என்று சொல்ல படத்தில் காரணம் இருக்கிறது. வழக்கமான வில்லன் நடிப்புதான் என்றாலும் குறையில்லை. படத்தில் மைம் கோபி, ஆர்.என்.ஆர்.மனோகர், ரமேஷ் திலக், கலைராணி உள்ளிட்ட பலர் சரியாகப் பயன்படுத்தப்படாமல் கூட்டத்தோடு கூட்டமாக வந்து செல்கின்றனர்.

காதலில் விழுவதும், ஒரே சண்டையில் பிரிவதுமென, மீண்டும் மும்பை சென்று பெரிய பிசினஸ் வுமேனாவதுமென எல்லா விஷயங்களும் சட்டென நடக்கின்றன. வில்லனை நாயகன் எதிர்கொள்வதில் வழிமுறைகள், தந்திரங்கள் என எதுவும் இல்லாமல் நேரடி அடிதடியாகவே இருக்கிறது. இது போன்ற விஷயங்களில் குறையும் சிந்தனை, 'நான் உன் கையை இப்படி பிடிச்சுக்கிட்டா, கட்டிக்கணும் போல இருக்குன்னு அர்த்தம்' என காதலிலும் மகளிடம் கதை பேசிக்கொண்டே சண்டையிடுவதிலும் இருக்கிறது. சிவாவின் அத்தனை படங்களிலும் இதை உணரலாம். 'பதினெட்டு வயசுக்குள்ள ஒருத்தர் தற்கொலை பண்ணிக்கிட்டா, அது தற்கொலை இல்லை, கொலை', 'ஒரு தடவ அழுகாத பணக்காரனும் இல்லை, ஒரு தடவ சிரிக்காத ஏழையும் இல்லை' என ஆழ்ந்த அர்த்தமும் உணர்வுப்பூர்வமுமாக இருக்கும் சிவா அண்ட் கோவின் வசனங்கள் படத்திற்கு பெரிய பலம்.

அடிச்சித்தூக்கு, வேட்டி கட்டு பாடல்கள் மூலம் ரசிகர்களை குதூகலப்படுத்திய டி.இமான் கண்ணான கண்ணே பாடல் மூலம் படத்திற்கும் ரசிகர்களுக்கும் ஒரு எமோஷனல் கனெக்டிவிட்டி ஏற்படுத்தி நெகிழச் செய்துள்ளார். காட்சிகளுக்கு தன் பின்னணி இசை மூலம் வேகத்தையும் கூட்டியுள்ளார். வெற்றியின் கேமரா ஆக்சன் காட்சிகளை தெறிக்க விட்டுள்ளது. குறிப்பாக மழை சண்டைக் காட்சி மற்றும் பாத்ரூம் சண்டைக்காட்சிகளை நேர்த்தியாக படம்பிடித்து ரசிக்க வைத்துள்ளார்.  தொடக்கத்தில் இவர் கொடுக்கும் ஏரியல் வ்யூ அறிமுகத்தில் கொடுவிலார்பட்டி கிராம எஃபக்ட் நமக்குள் இறங்குகிறது.

விஸ்வாசம் - பழக்கமான மசாலா, அதில் உணர்ச்சிகரமான தந்தை மகள் பாசம். மொத்தத்தில் அஜித் - சிவா காம்பினேஷனில் இன்னொரு படத்திற்கு வாய்ப்பு இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்