தமிழில் பிரபல பிண்ணனி பாடகராக வலம் வருபவர் வேல்முருகன். சென்னை மதுரவாயல் பகுதியில் வசித்து வரும் இவர், நேற்று முன்தினம் விருகம்பாக்கம் ஆற்காடு சாலை வழியாக தனது காரில் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் இரும்பு தடுப்பு போடப்பட்டு அந்த சாலை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. அந்த இரும்பு தடுப்பை தள்ளிவிட்டு வேல்முருகன், சென்றதாக கூறப்படுகிறது.
அதனால் அங்கு பணியிலிருந்த மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர் வேல்முருகனை கண்டித்துள்ளார். பின்பு வேல்முருகனும் ஊழியரிடம் கடுமையாக பேசியதாக கூறப்படும் நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஊழியரை வேல்முருகன் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இந்த மோதலில் காயமடைந்த வடிவேல் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின் வீடு திரும்பினார்.
இதனிடையே அந்த ஊழியர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வேல்முருகனுக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த காவல் துறையினர், தற்போது வேல்முருகனை கைது செய்துள்ளனர். பின்பு ஜாமீனில் அவர் வெளியே வந்துள்ளார். இது அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இதே போன்று கடந்த மார்ச் மாதம் சென்னை விமான நிலையத்தில் வேல்முருகன், மது போதையில் சென்று பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.