கே.ஜி.எஃப் மூலம் இந்தியா முழுவதும் கவனம் பெற்ற கன்னட நடிகர் யஷ். நேற்று அவரது பிறந்த தினத்தை, கர்நாடகாவில் அவரது ரசிகர்கள் பேனர், போஸ்டர், பட்டாசு, கேக் வெட்டுதல் உள்ளிட்ட கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அந்த வகையில் கர்நாடகா மாநிலம் கடக் மாவட்டத்தில் உள்ள சரங்கி கிராமத்தில், இளைஞர்கள் 8 பேர் சேர்ந்து சுமார் 25 அடி உயரத்தில் பிறந்தநாள் வாழ்த்து பேனர் வைக்க முற்பட்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவில், அந்த கட் அவுட்டை நிற்க வைக்கும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக அந்த பேனர், மேலே இருந்த மின்சாரக் கம்பியில் உரச, அதிலிருந்து மின்சாரம், கட் அவுட் வைத்திருந்த இளைஞர்கள் மீதும் பாய்ந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே ஹனுமந்த் (21), முரளி (20), நவீன் (19) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமுள்ள இளைஞர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான மூவரின் உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து, யஷ் அந்த உயிரிழந்த ரசிகர்களின் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார். அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிவிட்டு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நீங்கள் முழு மனதுடன் எங்கிருந்து வாழ்த்தினாலும் அதுவே சிறந்த வாழ்த்தாக அமையும். இதுபோன்ற சோகமான சம்பவங்கள் எனது பிறந்தநாளையே கொண்டாட பயம் கொள்ள செய்கிறது. இப்படி காட்டுவது மனப்பான்மை அல்ல. தயவு செய்து உங்கள் அன்பை இப்படி காட்டாதீர்கள். பேனர்கள் வைக்காதீர்கள், பைக் சேஸ்கள் செய்யாதீர்கள், ஆபத்தான முறையில் செல்ஃபி எடுக்காதீர்கள். என்னை ரசிப்பவர்களும் என்னுடைய ரசிகர்களும், என்னைப் போலவே வாழ்க்கையில் வளர வேண்டும் என்பதே எனது நோக்கம்.
நீங்கள் என்னுடைய உண்மையான ரசிகராக இருந்தால், உங்கள் வேலையை விடாமுயற்சியுடன் செய்யுங்கள், உங்கள் வாழ்க்கையை உங்களுக்காக அர்ப்பணித்து மகிழ்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் மாற்றுங்கள். உங்கள் குடும்பங்களுக்கு நீங்கள்தான் எல்லாமே. அவர்களைப் பெருமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருங்கள். எனது ரசிகர்களின் அன்பை வெளிப்படுத்தி பிரபலமடைவதில் எனக்கு விருப்பமில்லை. என் ரசிகர்கள் வருத்தப்பட்டாலும் அதை வெளியில் சொல்வதை எப்போதும் குறைத்துக் கொள்வேன். நீங்கள் என்னை மதிக்கிறீர்கள் என்றால், முதலில் பொறுப்பாக இருங்கள். இந்த ஆண்டு, கொரோனா வழக்குகள் அதிகரித்து வருவதால், எனது பிறந்தநாளைக் கொண்டாட விரும்பவில்லை. நம் முடிவில் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது. அதனால் தான், அதை எளிமையாக வைத்து, குடும்பத்துடன் மட்டும் கொண்டாட முடிவு செய்தேன்,'' என்றார். பின்பு உயிரிழந்த குடும்பங்களுக்கு பொருளாதார ரீதியாக உதவுவதாகவும் உறுதி அளித்தார். தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களையும் பார்த்து நலம் விசாரித்தார்.