Skip to main content

"எனக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்ல..." சர்ச்சையை கிளப்பும் விஜய் சேதுபதி பட இயக்குநர்!

Published on 06/03/2021 | Edited on 06/03/2021

 

vijay sethupathi

 

அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. இப்படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க, வில்லனாக மகிழ் திருமேனி நடித்துள்ளார். விவேக், மோகன் ராஜா, ரித்விகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்தின் டீசர் கடந்த வியாழன் (04.03.2021) அன்று வெளியானது. இந்த டீசரில் இடம்பெற்றிருந்த 'என்கிட்டே ஆதார் கார்டு இல்ல' என விஜய் சேதுபதி பேசும் வசனத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. டீசர் வெளியாகி மிகக்குறுகிய காலத்திலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த டீசருக்கும் தனக்கும் சம்மந்தம் இல்லையென அப்படத்தின் இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் தெரிவித்துள்ளார்.

 

ad

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அன்பார்ந்த ஃபேஸ்புக் நண்பர்களுக்கு... மன்னிக்கவும்... இதுவரை நான் இயக்கிய, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படம் பற்றிய அத்தனை அப்டேட்களையும் தவறாமல் பதிவிட்டிருக்கிறேன். இந்தமுறை டீசர் வெளிவருவது சம்மந்தமான போஸ்டரையோ, வெளிவந்த டீசரையோ நான் எனது முகநூல் பக்கத்தில் பதிவிடவில்லை. அதற்கு மிக முக்கியமான காரணம் நான் இயக்கிய படமான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்துக்கான டீசர் வெளிவருகிறது என்று எனக்குத் தெரியாது. கூடவே, மிக முக்கியமான தகவல், அந்த டீசருக்கும் எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. நான் அந்த டீசர் ரிலீஸாகி 45 நிமிடங்கள் கழித்தே பார்த்தேன்.

 

திரும்பவும் மன்னிக்கவும். நான் வேறு வழியில்லாமல் அந்த டீசரை பற்றி பேசாமல் மௌனமாக கடந்து போகிறேன். உண்மையில் இந்தப் படத்தின் ஆன்மாவை உள்ளங்கையில் காட்டக் கூடிய, நான் கட் பண்ணிய டீசர் என்னிடம் இருக்கிறது. டப்பிங் செய்யப்படாமல், பின்னணி இசை கோர்க்கப்படாமல், கலரிங் செய்யப்படாமல் அப்படியே இருக்கிறது. தயாரிப்பு தரப்பிடம் இந்தக் குளறுபடிக்கான அடிப்படை காரணம் பற்றி கேட்டிருக்கிறேன். தக்க பதில் வந்தால் என் முகநூல் நண்பர்களுக்கு அறிவிக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

பட இயக்குநருக்கே தெரியமால், படத்தின் டீசரை தயாரிப்பு தரப்பு வெளியிட்டது ஏன் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்