Skip to main content

கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய காவலாளி... ஏ.வி.எம் வாசலில் நின்று சபதம் எடுத்த பாரதிராஜா!

Published on 17/08/2021 | Edited on 17/08/2021

 

writer sura

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், இயக்குநர் இமயம் பாரதிராஜா குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

தமிழ்த்திரையுலகில் முன்னணி இயக்குநராகக் கொடிகட்டிப் பறந்தவர் பாரதிராஜா. புதுமை இயக்குநரான பாரதிராஜா எப்படி ஆழமான முத்திரைகளைப் பதித்தார் என்பது வரலாறு. ஆரம்பக்காலத்தில் பல படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி, அதில் கிடைத்த நீண்ட அனுபவம் மூலமாக 16 வயதினிலே படத்தை இயக்கினார். உதவி இயக்குநராகச் சேர்வதற்கு முந்தைய காலகட்டம் பாரதிராஜாவிற்கு எப்படி இருந்தது?

 

அந்தக் காலகட்டங்களில் வடபழனியில் நிறைய ஸ்டூடியோக்கள் இருக்கும். இன்றைக்கு அவை மருத்துவமனைகளாகவும் திருமண மண்டபங்களாகவும் மாறிவிட்டன. 30 வருடத்திற்கு முன்பு ஏ.வி.எம் ஸ்டூடியோவைப் பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருக்கும். ஏ.வி.எம் ஸ்டூடியோவிற்குள் எல்லோராலும் சாதாரணமாக நுழைந்துவிட முடியாது. வாசலிலேயே செக்யூரிட்டி தடுத்துவிடுவார்கள். ஏ.வி.எம் ஸ்டூடியோ வளாகத்திற்குள் நடந்து செல்வதையே பலர் பிறவிப்பயனாக நினைப்பார்கள். ஏ.வி.எம் மட்டுமல்ல வாகினி, சத்யா, ஜெமினி ஆகிய ஸ்டூடியோவிற்குள் நுழைவதென்பதும் பெரிய விஷயம். முதன்முறையாக பி.ஆர்.ஓவாக அந்த ஸ்டூடியோவிற்குள் நுழைந்தபோது எனக்கும் அதே உணர்வுதான் இருந்தது. 

 

நடிகராக வேண்டும் என்ற ஆசையுடன்தான் பாரதிராஜா ஊரிலிருந்து சென்னைக்கு வந்தார். இங்கு வந்து நடிக்க வாய்ப்பு கேட்டு ஏ.வி.எம் ஸ்டூடியோவிற்குச் சென்றுள்ளார். வழக்கம்போல வாசலிலேயே செக்யூரிட்டி தடுத்து நிறுத்திவிடுகின்றனர். கடைசியில் அவரை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடுகின்றனர். அதில், அதிருப்தியான பாரதிராஜா, 'பெரிய நடிகராகி இதே ஸ்டூடியோவிற்குள் ஒருநாள் நான் நுழைவேன்' என வெளியே நின்று சபதம் எடுத்துக்கொண்டு கிளம்பிவந்தாராம். அப்படியே காலங்கள் ஓடின. ஒரு கட்டத்தில் இயக்குநராக முடிவெடுத்த பாரதிராஜா, ஜெகநாதன், ஏ.எஸ்.பிரகாசம், ரா.சங்கரன் உட்பட பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதன் பிறகு அவர் இயக்கிய 16 வயதினிலே திரைப்படம் வெளியானபோது பெரிய அளவில் பேசப்பட்டது. யார் இந்த பாரதிராஜா... இப்படிப்பட்ட ஒரு திறமைசாலி எங்கிருந்து வந்தார் என அனைவரும் பேசவும் தேடவும் ஆரம்பித்தனர்.

 

அதனைத் தொடர்ந்து வெளியாகிய கிழக்கே போகும் ரயில், தேவி காம்ப்ளக்சில் 50 வாரங்கள் ஓடியது. அதன் பின்னர் வெளியான புதிய வார்ப்புகள் 175 நாட்கள், சிகப்பு ரோஜாக்கள் 100 நாட்கள், நிறம் மாறாத பூக்கள் 125 நாட்கள் என தொடர்ந்து 5 வெற்றிப்படங்கள் கொடுத்தார். இந்த ஐந்து படங்கள் வெளியான பிறகு தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இயக்குநர் என்றால் அது பாரதிராஜாதான் என்றானது. பாரதிராஜா படம் வெளியாகிறது என்றால் தேவி பாரடைஸ் தியேட்டரில் ஒரே நேரத்தில் ஆயிரம்பேர் அமர்ந்து படம் பார்ப்பார்கள். எந்த ஏ.வி.எம் ஸ்டூடியோ வாசலில் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப்பட்டாரோ பின்னாட்களில் அதே நிறுவனம் பாரதிராஜா இயக்கிய படத்தைத் தயாரித்தது. எந்த ஸ்டூடியோவில் அவமானப்படுத்தப்பட்டாரோ அதே நிறுவனத்திற்கு படம் இயக்குவதென்பது எவ்வளவு பெரிய வெற்றி என யோசித்துப்பாருங்கள். இயக்குநராகத் தன்னை நிரூபித்த பின், ராஜமரியாதையுடன் அந்த ஸ்டூடியோ வளாகத்திற்குள் நடந்தார் பாரதிராஜா.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சிவாஜி பேச மறுத்த வசனம்; அவருக்காக இவர் தான் பேசினார்” - எழுத்தாளர் சுரா பகிர்ந்த சுவாரசியம்  

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

sura

 

நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்கு எழுத்தாளர் சுரா அவர்கள் ஞான ஒளி திரைப்படத்தின் ஒரு பாடல் பற்றி பகிர்ந்து கொண்ட சுவாரசியமான தகவல்கள் பின்வருமாறு…

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து நூறு நாட்கள் ஓடிய திரைப்படம் ஞான ஒளி. இத்திரைப்படத்தின்  கதை, வசனம் எழுதியவர்  வியட்நாம் வீடு சுந்தரம். இவர் சிவாஜி நாடக மன்றத்துக்கு வியட்நாம் வீடு  என்ற நாடகத்தை எழுதினார். நாடகத்தின் நாயகனாக சிவாஜி கணேசன் நடித்தார். நாடகத்தின் புகழ் காரணமாக, இதே கதையை சிவாஜி பிலிம்ஸ் திரைப்படமாக தயாரித்தது. பி.மாதவன் வியட்நாம் வீடு என்ற படத்தை இயக்கினார். இதுவும் நூறு நாட்கள் ஓடியது. பின்பு அதன் புகழ் காரணமாக கதை ஆசிரியர் சுந்தரம், வியட்நாம் வீடு சுந்தரம் என அழைக்கப்பட்டார். அதன் பிறகு, சிவாஜி கணேசனை வைத்து கௌரவம் என்ற படத்தை வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கினார். கதை ஆசிரியராக இருந்த வியட்நாம் வீடு சுந்தரம் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநர் ஆனார்.  இந்தப் படமும்  நூறு நாட்கள் ஓடியது. 

 

இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் வக்கீலாகவே வாழ்ந்து மிகவும் சிறப்பாக நடித்தார். அதன் பிறகு, கர்ணன் என்ற கதாபாத்திரம் மூலமும், சுந்தரம் என்ற கதாபாத்திரம் மூலமும் காலம் கடந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

 

இதே மாதிரி  ஞான ஒளி என்ற நாடகத்திற்கு வியட்நாம் சுந்தரம் கதை எழுதினார். நாடகத்தின் வெற்றி, அதன் புகழ் காரணமாக திரைப்படமாக ஜெ.ஆர்.மூவிஸ் என்ற நிறுவனம் தயாரித்தது. சிவாஜி கணேசன் உடன் இணைந்து மேஜர் சுந்தர்ராஜன் நடித்தார். இதுவும் நூறு நாட்கள் ஓடியது. பி.மாதவன் என்பவர் இயக்கினார். சிவாஜி கணேசன் நடித்த மிகச்சிறந்த திரைப்படங்களில் ஞான ஒளியும் ஒன்று. ஞான ஒளி திரைப்படத்தை இப்போது உள்ள தலைமுறையினர் பார்த்தால் கூட ஒரு மிகச்சிறந்த திரைப்படம் என்பதை உணரலாம். சிவாஜி கணேசன் எந்த அளவுக்கு ஆழமாக நடித்து முத்திரை பதித்து உள்ளார் என்பதை உணரலாம். ஆண்டனி என்ற கிறிஸ்தவ கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பார் என்பதையும் அறியலாம். 

 

ஞான ஒளி திரைப்படத்தில் வரும், 'தேவனே என்னை பாருங்கள்' என்ற பாடல் இன்றளவும் மிகவும் பிரபலமாக வானொலி, மேடைகள், கலை நிகழ்ச்சிகளில் ஒலித்துக் கொண்டுள்ளது. இந்தப் பாடலின் நடுவில் வரும் வசனமான ‘ஓ  மை  லார்ட் பார்டன்  மீ,  இந்த மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் இரு வேறு பாதையில் போய் விட்டன’ என்ற வசனத்தை சிவாஜி உச்சரிக்க மறுத்து விட்டார். பின்பு அவரது உதவியாளர் ஜோசப்  கிருஷ்ணன் என்ற ஆங்கிலோ இந்தியரை வைத்து பாட வைக்க முடிவு செய்தனர். பின்பு தவிர்த்து விட்டனர். அதன் பிறகு, சதன் என்ற மிமிக்ரி கலைஞர் அவர்கள் மூலம் பாட வைக்கலாம் என முடிவு செய்தனர். ஆனால் அதுவும் ஒர்க்கவுட் ஆகவில்லை. 

 

பின்பு பாடல் மற்றும் வசனம் என இரண்டையும் டி.எம். செளந்தராஜன் அவர்களே பாடவும் முடிவு செய்தார்கள். இருந்தாலும் சிவாஜி எப்படி உச்சரிப்பாரோ அது போன்று உச்சரிக்க வேண்டும் என்று சிவாஜியை உச்சரிக்கச் சொல்லி, அதை காதில் வாங்கி, சிவாஜி எப்படி உச்சரிப்பாரோ அதே போன்று டி.எம்.சௌந்தரராஜன் பாடினார். சிவாஜி கணேசன் எந்த அளவிற்கு உணர்ச்சிவசப்பட்டு நடிப்பாரோ அந்த அளவிற்கு உச்சரித்தார் டி.எம்.எஸ்.  ஐம்பது சதவீதம் சிவாஜி கணேசன் அளவுக்கு உச்சரித்தார். அதனால் தான்  இரண்டு மாமன்னர்களும் காலங்கடந்து சென்றாலும், மக்கள் மனதில் பசுமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

 


 

Next Story

"நிராகரித்தவர்கள் மத்தியில் தன்னை நிரூபித்தவர் விஜய் சேதுபதி" - எழுத்தாளர் சுரா பகிர்ந்த சுவாரசிய தகவல்

Published on 29/09/2022 | Edited on 29/09/2022

 

writer sura about talk vijay sethupathi

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில், நடிகர் விஜய் சேதுபதி குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு....

 

"சாதாரண நிலையில் இருந்து ஒரு உயர்ந்த இடத்திற்கு வந்துள்ள விஜய் சேதுபதியை நீங்கள் ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர் தனது வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளை சந்தித்துள்ளார். தனது சொந்த ஊரான ராஜபாளையத்தில் இருந்து சினிமாவில் பெரிய ஆளாக்கிடனும்னு சென்னைக்கு வருகிறார். அந்த மாதிரி நேரடியா எடுத்த உடனே சினிமாவில் பெரிய ஆளாக்கி முடியாது என்பதை  உணர்ந்த விஜய் சேதுபதி ஒரு சிறிய சிமெண்ட் கம்பெனியில் அக்கவுண்டன்ட்டா வேலைக்கு சேர்ந்து பணி செய்துகொண்டு வருகிறார். அதன்பிறகு  செல்போன் கடை, பாஸ்ட்புட், சேல்ஸ்மேன் என கிடைக்கிற வேலை எல்லாம் செய்து வருகிறார். 

 

அந்த சமயத்தில் ஒரு நாள் விஜய் சேதுபதிக்கு துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் அக்கவுண்டன்ட்டாக நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கிறது. தொடர்ந்து 4 ஆண்டுகள் துபாயில் வேலை பார்த்தார். இதனிடையே ஆன்லைன் மூலம் ஜெஸி என்ற பெண்ணுடன் அறிமுகமாகி அவரையே திருமணமும் செய்துகொண்டார். ஒரு கட்டத்தில் துபாய் வேலையும் அவருக்கு பிடிக்காமல் போக, மீண்டும் சென்னைக்கு வந்து தனது நண்பர்களுடன் இணைந்து இன்டீரியர் டெக்கரேஷன் வேலைகளை செய்து வந்தார். அப்படி இருக்கையில் ஒரு நாள் சினிமாவிற்கு அடித்தளமாக இருக்கும் கூத்துப்பட்டறை போஸ்டர் ஒன்றை பார்க்கிறார். அப்போதும் கூட அந்த கூத்துப்பட்டறையில்  அக்கவுண்டன்ட்டாகத்தான் பணிக்கு சேர்ந்துள்ளார். அதன் பிறகு தான் தனுஷின் புதுப்பேட்டை, கார்த்தியின் நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட பல படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம். இந்தி என பிறமொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். 

 

ஆனால் விஜய் சேதுபதி 16 வயதில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நம்மவர் படத்தில் நடிப்பதற்காக நேர்காணலுக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு நிராகரிக்கப்படுகிறார். ஆனால் அவரின் விடா முயற்சியால் அன்று யார் படத்தில் விஜய் சேதுபதி நிராகரிக்கப்பட்டாரோ இன்று அவருடனே விக்ரம் படத்தில் நடித்து பாராட்டுகளை குவித்து இருக்கிறார். அதனால் கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள் விஜய் சேதுபதியை ரோல் மாடலாக வைத்துக் கொள்ளலாம்".