இயக்குநர் விஷ்ணுவர்தன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் இயக்கியுள்ள படம் நேசிப்பாயா. இந்தப் படத்தில் மறைந்த நடிகர் முரளியின் மகனும் நடிகர் அதர்வாவின் சகோதரருமான ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 14ஆம் தேதி வெளியாகிறது. இதையொட்டி படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழு கடந்த சில வாரங்களாக ஈடுபட்டு வந்தனர்.
அந்த வகையில் ஒரு பேட்டியில் பேசிய விஷ்ணு வர்தன், ரஜினியின் பில்லா படம் சரியாக போகவில்லை என கூறியிருந்தார். இது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. ரஜினி ரசிகர்கள் பலரும் விஷ்ணு வர்தனுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து ரஜினியின் செய்தி தொடர்பாளர் ரியாஸ் தனது எக்ஸ் பக்கத்தில், விஷ்ணுவர்தனை டேக் செய்து, “1980ஆம் ஆண்டு வெளியான ‘பில்லா’ படம் சில்வர் ஜூபிளி ஹிட் என்பதை பணிவுடன் உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். இதனை அசல் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் பாலாஜியின் நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம். தவறான தகவல்களை தவிர்க்க உங்கள் வார்த்தைகளில் துல்லியத்தை உறுதி செய்யுமாறு நான் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
ரஜினியின் பில்லா படத்தை அஜித்தை வைத்து 2007ஆம் ஆண்டு ரீமேக் செய்திருந்தார் விஷ்ணு வர்தன். இப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.