
‘களவாணி’, ‘வாகை சூட வா’, ‘மஞ்சப்பை’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான விமல் கடைசியாக 'விலங்கு' வெப்சீரிஸில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 'எங்க பாட்டன் சொத்து', 'மஞ்சள் குடை', 'குலசாமி', 'துடிக்கும் கரங்கள்' உள்ளிட்ட சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இதனிடையே நடிகர் விமல் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இதையடுத்து அது வதந்தி என்று தெரிவிக்கும் வகையில் விமல் படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியானது. இந்த நிலையில், இந்த தகவல் குறித்து நடிகர் விமல், படப்பிடிப்பு தளத்தில் இருந்தபடி ரத்த கறை மேக்கப்புடன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "செய்தி அறிந்தேன். நான் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நான் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். புதுமுக இயக்குநர் மைக்கேல் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் உள்ளேன். இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு முடியப்போகுது. அதனால் வதந்திகளை நம்ப வேண்டாம்.
இன்னொரு செய்தியையும் பார்த்தேன். நான் மது பழக்கத்திற்கு அடிமையாகி வீட்டிலேயே ரகசிய சிகிச்சை எடுத்து வருவதாக. இதெல்லாம் பார்க்கும் போது சிரிப்பாக வருகிறது. இது போன்று யார் கிளப்பி வருகிறார்கள் என்று தெரியவில்லை. ஏதோ ஒரு வேண்டாத விஷக் கிருமிகள் இது போன்று செய்து வருகிறது. அது யார் என்றும் எனக்கு தெரியும். அதனால், இந்த சின்னப்புள்ள தனமான வேலையை விட்டுவிட்டு உருப்படியான வேலையை பாருங்கள். நீங்களும் வாழுங்கள், மற்றவர்களையும் வாழ விடுங்கள். தேவையில்லாமல் சில்லறை தனமா இந்த செய்திகளைக் கிளப்பி என்னை காயப்படுத்த நினைக்காதீர்கள்.
நான் காயமெல்லாம் படமாட்டேன். எனக்கு தெம்பு இருக்கு. ஆண்டவன் கொடுத்த அருள் இருக்கு. 2023 ஆம் ஆண்டில் நல்ல படங்களைக் கொடுப்பேன்" என்றார்.