விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல்டைம்’. இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருக்க வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். யுவன் இசையமைத்திருந்த இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபு தேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் சிவகார்த்திகேயன், த்ரிஷா ஆகியோர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். மறைந்த விஜயகாந்த் மற்றும் பவதாரிணியின் குரலை ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தியிருந்தனர். புது முயற்சியாக படத்தில் டி-ஏஜிங் தொழிநுட்ப உதவியுடன் விஜய் இளமை பருவத் தோற்றத்தில் நடித்திருந்தார்.
இப்படம் பார்வையாளர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றாலும் முதல் நாளில் ரூ.126 கோடிக்கு மேலாக வசூலித்துள்ளது. இந்நிலையில் வெங்கட் பிரபு எக்ஸ் வலைதள பக்கத்தில் ஸ்பேஸ் மூலம் ரசிகர்களிடையே கலந்துரையாடினார். அப்போது படத்திற்கு வந்த நெகட்டிங் விமர்சனங்கள் குறித்து அவர் பேசுகையில், “என்னை பொறுத்தவரை கமர்ஷியல் படத்துக்கான விமர்சனத்தை அவர்கள் பண்ணவில்லை. இந்த படத்தின் ஜானர் தொடர்பான விமர்சனமே யாரும் பண்ணவில்லை. எதுக்கு பாடல், எதுக்கு பழைய படத்தின் ரெஃபரன்ஸ் இந்த மாதிரியான விஷயங்கள்தான் நிறைய பேர் பேசுகிறார்கள். ஆனால், படத்தை பற்றிய விமர்சனம் குறைவாகத்தான் இருக்கிறது.
கேமியோ இருக்கிறது, ரெஃபரன்ஸுக்கு ரெஃபரன்ஸ் இருக்கிறது என விமர்சிக்கிறார்கள். எனக்கு அதைப் பற்றி கவலை கிடையாது, வேண்டுமென்றேதான் அதை படத்தில் வைத்தேன். எந்த ஒரு பெரிய நட்சத்திரங்கள் படத்திலும் மற்ற நடிகர்களின் ரெஃபரன்ஸ் கிடையாது. இந்த படத்தில் மட்டும்தான் இருக்கிறது. இது போல மற்ற நடிகர்கள் ஒப்புக்கொள்வார்களா என்று தெரியாது. விஜய் நினைத்திருந்தால் அதை கட் செய்ய என்னிடம் சொல்லியிருக்க முடியும். ஆனால், எல்லா நடிகர்களின் ரசிகர்களும் இந்த படத்தை செலிபிரேட் பண்ண வேண்டும் என அவர் நினைத்தார். இந்த மாதிரி எந்த நடிகர்களின் படங்களிலும் பண்ண முடியாது. ரெஃபரன்ஸை தாண்டி படத்தில் என்ன கதை இருக்கிறது என்பதை விமர்சனம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். விமர்சனம் செய்வது அவர்களின் தனிப்பட்ட விரும்பம். அதனால் அதை ரொம்ப ஆராய முடியாது” என்றார்.