‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு எச். வினோத் - அஜித் - போனி கபூர் கூட்டணி ‘வலிமை’ படத்திற்காக மீண்டும் இணைந்தது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்க, வில்லனாகத் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பானது, கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டங்களாகத் தடைப்பட்டது. இருப்பினும், மிகுந்த நெருக்கடிகளுக்கு இடையே தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது.
இந்த வாரத்தில் வலிமை படத்தின் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், வலிமை படத்தின் வில்லன் நடிகர் கார்த்திகேயா தொடர்பான சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. நடிகர் கார்த்திகேயா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு, இந்த சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கையில் சேட்டிலைட் ஃபோன் மற்றும் மதுக்குப்பியுடன் கார்த்திகேயா காட்சியளிக்கும் இந்த போஸ்டரை வைத்து படத்தின் கதை தொடர்பாக அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர்.