நக்கீரன் ஸ்டூடியோவிற்கு, தயாரிப்பாளர் தனஞ்செயன் தமிழ் சினிமாவின் வியாபார யுக்தி; புரொமோசன் விசயங்கள் குறித்து பேசினார்; அப்போது உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் பங்களிப்பு பற்றிய நம்முடைய கேள்விக்கு அவர் அளித்த பதிலை காண்போம்.
ரெட் ஜெயண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் மிகப்பெரிய பலமே அவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய ஒரு நெட்வொர்க் இருக்கிறது. எல்லா பெரிய படங்களுமே அங்கிருந்து வெளியாகிறது. அதே சமயத்தில் குறைந்த முதலீட்டில் எடுக்கப்படுகிற படங்களைக் கொடுத்தாலும் அவர்கள் வெளியிடும் பட்சத்தில் நல்ல பலன் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது
திரையரங்குகள் ரெட் ஜெயண்ட்டின் வெளியீடு என்றால் லாபத்திலிருந்து 70 சதவீதம் பணத்தை கொடுப்பார்கள். மற்றவர்களுக்கு என்றால் 50 சதவீதம்தான் தருவார்கள். இதனாலேயே தான் அனைத்து தயாரிப்பாளர்களுமே ரெட் ஜெயண்ட் வெளியிட வேண்டும் என்று அவர்களிடமே குவிகிறார்கள்
ரெட் ஜெயண்ட் வெளியிடப்போகிறார்கள் என்றாலே அந்தப் படத்திற்கு வேறு எதுவும் பிரச்சனை வராது. வெளியீடும் சுமூகமாக நடந்துவிடும். அத்தோடு லாபத்தினையும் கணக்கிட்டு உங்களுக்கான பங்கினைக் கொடுத்து விடுவார்கள்
உதயநிதி ஸ்டாலின் அவர்களோட பங்களிப்பு என்பது இந்த 2022-ல் தமிழ் சினிமாவிற்கு மிக முக்கிய பங்களிப்பாகும். இந்த வருடம் தமிழ் சினிமாவிற்கு மிக சிறப்பான வருடமாக மாறியிருக்கிறது என்றால் அதற்கு மிக முக்கியமான காரணம் உதயநிதி ஸ்டாலின் தான். அவர் நிறைய படங்களை வெளியிட்டு பெரிய அளவிலான வசூல் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்
இப்போது அமைச்சர் ஆகிவிட்டார்; அவருக்கான பொறுப்புகள் அதிகரித்துள்ளன; ரெட் ஜெயிண்ட் நிறுவனத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பொறுத்திருந்து பார்ப்போம்.