
இசைஞானி இளையராஜா கடந்த ஆண்டு 35 நாட்களில் எதுவும் கலக்காத ஒரு முழு சிம்பொனியை முடித்துவிட்டதாக தெரிவித்திருந்தார். அவரது முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் வருகிற 8ஆம் தேதி (08.03.2025) நடைபெறவுள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனையொட்டி இளையராஜாவுக்கு அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதலாவதாகத் தமிழக முதல்வர் ஸ்டாலின் இளையராஜாவின் இல்லத்திற்கு சென்று அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அதற்கு இளையராஜாவும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.
இந்த வரிசையில் வி.சி.க. தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் இளையராஜாவை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில், “இசைஞானியைச் சந்திக்கும் போதெல்லாம் வியப்பு மேலிடுகிறது. அவர் மானுட வாழ்வை எவ்வளவு தத்துவார்த்தமாக புரிந்திருக்கிறார் என்பதை நமக்குப் புரியவைக்கிறார். ‘இசை எனக்குத் தொழில் அல்ல; இசை என்னிலிருந்து வேறு அல்ல; இசையாகவே நான் வாழ்கிறேன்’ - என அவர் விளம்புகிறபோது அவரின் விழிகளிலிருந்து வீசும் ஞானஒளியை உணரமுடிகிறது.
அது-தான் என்கிற அகந்தையின் வெளிப்பாடு அல்ல; தன்னை உணர்ந்துள்ள மெய்ஞானத்தின் புலப்பாடு! அவர் இசைஞானி என்பதைவிட மெய்ஞானி என்பதே பொருந்தும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.