
பிரபல பின்னணி பாடகிகளில் ஒருவர் கல்பனா. இவர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நிஜாபேட்டையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக அவருடைய வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த குடியிருப்பு வாசிகள் அவருடன் பேசுவதற்காக இன்று மாலை கதவைத் தட்டியுள்ளனர். இருப்பினும் வீட்டின் உள்ளே இருந்து யாரும் கதவைத் திறக்கவில்லை. இதனால் மேலும் சந்தேகம் அடைந்த குடியிருப்பு வாசிகள் அவருடைய உறவினர்களுக்கு இது குறித்து தகவல் அளித்தனர்.
இதனையடுத்து உறவினர்கள் தொலைப்பேசி மூலம் கல்பனாவைத் தொடர்பு கொள்ள முயன்றனர். அப்போதும் கல்பனாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள் இது குறித்துப் பற்றி போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கட்டிலில் மயங்கிக் கிடந்த கல்பனாவை மீட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை விழுங்கி கல்பனா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர். மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் கல்பனாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்றுவரும் சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.