அறிமுக இயக்குநர் அஜித்குமார் இயக்கத்தில் கிஷோர் குமார், ஆர்ஷா சாந்தினி பைஜு நடிப்பில் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள படம் 'முகை'. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் எஸ்.வி. சேகர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
அப்போது எஸ்.வி. சேகர் பேசுகையில், "ஒரு படம் வெற்றி படமாக இருக்கலாம் அல்லது தோல்வி படமாக இருக்கலாம். தோல்வி படமாக இருந்தாலும் அது நல்ல படமாக இருக்க வேண்டும். 10 ரூபாய் போட்டு 10 கால் ரூபாய் வந்தாலும் அது வெற்றி படம் தான். ஆனால் அது நேர்மையாக இருக்க வேண்டும். நாம் என்ன செலவழிக்கிறோம் என்று நமக்கு தெரிய வேண்டும். ஏனென்றால் பாக்கெட்டில் இருந்து பணம் கொடுக்கும் ஒரே சாதி தயாரிப்பாளர் சாதி. மற்ற அனைவரும் பணம் வாங்கக்கூடிய இடத்தில் இருக்கிறார்கள். அவர்கள் கூடுதல் பொறுப்போடு இருக்க வேண்டும். நேர்மையாக சம்பாதித்தால் அந்த பணம் நம்மிடம் இருக்கும்.
சினிமாவில் ஒழுக்கத்தை தாண்டி நிறைய விஷயங்களை காட்டிக்கிட்டே இருக்கிறோம். முன்பெல்லாம் கடவுளை பற்றி ஆரம்ப காட்சி இருக்கும். இப்போதெல்லாம் டாஸ்மாக் காட்சி தான் இருக்கிறது. வெறும் பணத்துக்காக சினிமா எடுத்து சமூகத்தை கெடுப்பேன் என்றால் மிக மோசமான பாதிப்பு அவர்களுக்குத் தான். அதே போன்று சினிமாவில் ஜாதி ரீதியான படங்களை எடுப்பதை குறைத்து கொள்ளவும். எல்லா சாதிக்காரங்களும் படம் பார்க்க வேண்டும் என்றால் எல்லா சாதியினருக்கும் பிடித்த மாதிரி படம் எடுங்கள். சாதியை தூக்கிப் பிடியுங்கள் தப்பில்லை. அடுத்த சாதியை தவறாக பேசாதீர்கள். இந்தியா போன்று ஒரு சிறந்த நாடு எங்கேயும் கிடையாது" என்றார்.