
பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன், கடைசியாக பிரபு தேவாவின் ‘பேட்ட ராப்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். இதையடுத்து இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
திரைப்படங்களைத் தாண்டி பொது நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது கவனம் செலுத்தி வரும் சன்னி லியோன், ஹைதராபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்தார். இந்நிகழ்ச்சி கடந்த 30ஆம் தேதி ஜூப்ளி ஹில்சில் உள்ள ஒரு மதுபான விடுதியில் டி.ஜே. பாட்டு நிகழ்ச்சியுடன் நடைபெறுவதாக இருந்தது. சன்னி லியோன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இரவு 11 மணிக்கு ஆரம்பித்து மறுநாள் நள்ளிரவு 12.30 மணி வரை மொத்தம் ஒன்றரை மணி நேரம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆன்லைன் மூலமாக 500 டிக்கெட் விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்நிகழ்ச்சிக்கு காவல் துறையினர் அனுமதி வழங்க மறுத்துள்ளனர். காவல் துறையினர் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி தர மறுத்துள்ளனர். இருப்பினும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சி நடத்த முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் காவல் துறையினர் அங்கு சென்று நிகழ்ச்சியை ரத்து செய்யும்படி கூறினர்.
பின்பு அங்கு டிஜிட்டல் பதாகையில், “உடல்நலக்குறைவு காரணமாக சன்னி லியோன் இன்று பங்கேற்கவில்லை. உங்கள் சிரமத்திற்கு வருந்துகிறோம்” என குறிப்பிட்டனர். கடைசி நேரத்தில் சன்னி லியோன் நிகழ்ச்சி ரத்தானதால் நிகழ்ச்சியை பார்க்க ஆவலோடு சென்றிருந்த ரசிகர்கள் விரக்தியில் சோகமுடன் திரும்பினர். இந்த சம்பவம் அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.