சமீப காலமாக தொடர் வெற்றி படங்களை கொடுத்து பிஸியான நடிகராக வலம் வருகிறார் எஸ்.ஜே. சூர்யா. குறிப்பாக வில்லனாக இவர் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கடைசியாக சூர்யாவின் சனிக்கிழமை என்ற நானியின் தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். தமிழில் தனுஷின் ராயன் படத்தில் நடித்திருந்தார்.
இப்போது ஷங்கர் - ராம் சரண் கூட்டணியின் கேம் சேஞ்சர், ஷங்கர் - கமலின் இந்தியன் 3, விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’, விக்ரம் - அருண்குமாரின் ‘வீர தீர சூரன்’, கார்த்தி - பி.எஸ்.மித்ரனின் ‘சர்தார் 2’ உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார். இதையடுத்து கில்லர் என்ற தலைப்பில் அவர் மீண்டும் ஒரு படம் இயக்கவுள்ளதாக ஒரு தகவல் உலா வந்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் எஸ்.ஜே. சூர்யா கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 15வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்ற நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம். பிர்லா கையில் பெற்றுக் கொண்டார். இதையடுத்து அவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன்னதாக சிம்பு, ராம் சரண் ஆகியோருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.