கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, இன்று 99வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றன. முதல்வர் மு.க. ஸ்டாலின், “99 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர், எளிமையின் அடையாளமான தகைசால் தமிழர், தோழர் நல்லகண்ணு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்! ஆங்கிலேய அடக்குமுறை ஆட்சியை நம் மண்ணில் இருந்து அகற்றப் போராடிய ஐயா நல்லகண்ணு, நமக்கெல்லாம் ஊக்கமாகவும் உறுதுணையாகவும் இருந்து என்றும் வழிநடத்திட வேண்டும்” என அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், அவரது எக்ஸ் தள பதிவில், “விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவே கால் நூற்றாண்டுக் காலம் செயல்பட்ட எளிமையின் எடுத்துக்காட்டான தலைவர் தோழர் நல்லகண்ணு பிறந்தநாள் இன்று. 18 ஆம் வயதில் தொடங்கிய சிவந்த அரசியல் வாழ்க்கையை இந்த 98 ஆம் வயதிலும் தொடரும் பேராளர் ஐயா நல்லகண்ணு. தனக்கென்று ஒரு நொடியையும் பயன்படுத்திக்கொள்ளாதவர்; தனக்கென்று ஒரு நிதியையும் எடுத்துக்கொள்ளாதவர்; அனைத்துமே தான் கொண்ட கொள்கைக்காகவும் தன் கட்சிக்காகவும் என்றே பெரும் தியாக வாழ்வு வாழும் தலைவருக்கு என் பெருமதிப்போடு கூடிய பிறந்தநாள் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே சிவக்குமார் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார். அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த சிவக்குமார் அவரின் காலில் விழுந்து ஆசியும் பெற்றுக்கொண்டார்.