Skip to main content

"களத்துல பேசுபவர்கள்" - திருமாவளவனுக்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன்

Published on 20/07/2023 | Edited on 20/07/2023

 

sivakarthikeyan thanked thirumavalavan

 

மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 14 ஆம் தேதி வெளியான படம் 'மாவீரன்'. படத்தைப் பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் ஷங்கர், நடிகர் அருண் விஜய் உள்ளிட்ட பலர் பாராட்டினர். மேலும் திருமாவளவன் எம்.பி, படத்தைப் பார்த்து படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. அதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். 

 

அப்போது சிவகார்த்திகேயன் பேசுகையில், "நான் நிறைய வெற்றிப் படங்கள் பண்ணியிருக்கேன். ஆனால் இந்த படத்தினுடைய வெற்றி கொஞ்சம் ஸ்பெஷல். பொதுவாக என்னுடைய படங்களுக்கு வாழ்த்து வந்திருக்கு. என்னுடைய நடிப்புக்கு வாழ்த்து வந்திருப்பது இதுதான் முதல் முறை. உங்கள் எல்லாருக்கும் தெரியும் மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக இருந்துதான் நடிகனாக மாறியிருக்கேன். அதனால் எல்லா நடிகர்களுடைய பாதிப்பும் இருக்கும். வேற வழியில்லை. இருந்தாலும் அதுதான் எனக்கு நடிக்க வாய்ப்பு தேடிக் கொடுத்தது. எனக்கு டிவியில் வருவதே கஷ்டமான விஷயம். சினிமாவில் வருவது அதைவிடக் கஷ்டமான விஷயம். பிறகு உள்ளே நுழைந்த பின்பு காமெடி தான் என்னுடைய அடையாளமாக இருந்தது. இன்றைக்கும் சிறந்த நடிகராக இருப்பதை விடச் சிறந்த பொழுதுபோக்காளராக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. 

 

ஒரு நல்ல இயக்குநர் நினைத்தால் யாரை வேண்டுமானால் நல்ல நடிகராக மாற்றலாம். அப்படி எனக்கு கிடைத்தவர்தான் மடோன் அஷ்வின். என்னை அறிமுகப்படுத்திய பாண்டிராஜ் சார் முதல் எல்லாருமே என்னிடமுள்ள பாசிட்டிவ் மட்டுமே கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் என்னுடைய வழக்கமான வட்டத்திலிருந்து முற்றிலுமாக மாற்றியிருப்பது மடோன் அஷ்வின் தான். அவர் விருப்பப்பட்டால் மீண்டும் இணையத் தயாராக இருக்கிறேன். அப்படி இணையும் பட்சத்தில் நிச்சயமாக சிறந்த படமாக இருக்கும்.

 

இப்படத்தில் அரசியல் சம்மந்தப்பட்ட கதை என்பதால் யாரையும் புண்படுத்தாமல், பொதுவாக சொல்ல வேண்டும் என்பது முக்கியமான விஷயம். யார் பார்த்தாலும் சந்தோசம் ஆக வேண்டும் என நினைத்தேன். அது நடந்திருக்கு. தொல். திருமாவளவன் சாருக்கு நன்றி. அரசியல் ரீதியாகவும் நாங்கள் எடுத்துக்கிட்ட கதை சரியாக சொல்லப்பட்டிருக்கிறதனால் தான் அவங்கள மாதிரி களத்துல பேசுபவர்கள் நல்ல வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். மேலும் படத்தை பார்த்து பாராட்டிய அருண் விஜய், சூரி என அனைவருக்கும் நன்றி" என்றார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கடைசி தலைமுறையின் உணர்வுக் குவியல்” - சிவகார்த்திகேயன் பகிர்வு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
sivakarthikeyan Kurangu Pedal trailer released

சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதே சமயம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். சென்னையில் முழு வீச்சில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

இதனிடையே சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் சார்பில், கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் டீசருடன் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் ‘குரங்கு பெடல்’ என்ற தலைப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்தது மட்டுமல்லாமல் அதை வெளியிடவும் செய்கிறார். கமலக்கண்ணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மே 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனிடையே படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘கொண்டாட்டம்’ பாடலின் வீடியோ வெளியானது. 

sivakarthikeyan Kurangu Pedal trailer released

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. கோடை விடுமுறையில் வீட்டோடு இருக்க வேண்டும் எனப் பள்ளி சிறுவர்களிடம் சொல்ல, அச்சிறுவர்கள் தொடர்ந்து பகல் முழுக்க விளையாடி வருகின்றனர். அப்போது சிலம்பம், கோலி, நீச்சல் என விளையாடி வரும் சிறுவர்கள் சைக்கிள் ஓட்டி விளையாடுகிறார்கள். ஆனால் முதன்மை கதாபாத்திரத்தில் வரும் சிறுவன், சைக்கிள் ஓட்டத்தெரியாமல் இருப்பதால், எப்படியாவது சைக்கிள் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறான். அதற்காக முயற்சியும் எடுக்கிறான். இறுதியில் அவன் சைக்கிள் கற்றுக்கொண்டானா இல்லையா என்பதை காமெடி, எமோஷன் கலந்து சொல்லியிருப்பது போல் இப்படம் உருவாகியுள்ளது. 

இந்த ட்ரலைரை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த சிவகார்த்திகேயன், “கோடை விடுமுறையினை குதூகலமாய் கொண்டாடிய கடைசி தலைமுறையின் உணர்வுக் குவியலாய் இதோ இந்தக் குரங்கு பெடல் ட்ரைலர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
vck president thirumavalavan anoounced 20204 ambedkar sudar award to prakash raj

பிரகாஷ் ராஜ், நடிப்பைத் தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என மற்ற தளங்களிலும் பயணித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி குறித்தும், மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் ஏழு கட்ட வாக்குப்பதிவில், இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. அந்த வகையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது, பெங்களூருவில் வாக்களித்த பிரகாஷ் ராஜ், மாற்றத்திற்காக மற்றும் வெறுப்பிற்கு எதிராக வாக்களித்ததாக கூறினார். 

இந்த நிலையில் வி.சி.க. சார்பில் பிரகாஷ் ராஜுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வி.சி.க. சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சிறப்பாக தொண்டாற்றும் நபர்களுக்கு, ‘அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு’ ஆகிய பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 

2007ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், 2024ஆம் ஆண்டிற்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருதை பிரகாஷ்ராஜுக்கு வழங்குவதாக வி.சி.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வி.சி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவர் பிரகாஷ்ராஜ்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விருதுகள் அடுத்த மாதம் 25ஆம் தேதி, (25.05.2024) சென்னையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது திருமாவளவனும்,பிரகாஷ் ராஜும் சந்திப்பு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது சி.பி.ஐ. (எம்.எல்) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யாவிற்கு வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.