'நீலம் புரொடக்ஷன்ஸ்' சார்பாக பா. ரஞ்சித் தயாரிப்பில் ஜெய்குமார் இயக்கத்தில் ஷாந்தனு, அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'ப்ளூ ஸ்டார்'. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவான இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கடந்த 25 ஆம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. இப்படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்ற நிலையில், பா. ரஞ்சித், அஷோக் செல்வன், ஷாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர்.
அதில் ஷாந்தனு பேசுகையில், “இந்த வெற்றிக்காக நான் 15 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருந்தேன். இன்னும் கூட என்னால் இதை நம்பமுடியவில்லை. இப்படி ஒரு நல்ல விஷயம் என் வாழ்வில் நடக்கிறதா..?, என் மனைவியிடம் கூட நேற்று என்னால் நம்பமுடியவில்லை என்று பேசிக் கொண்டிருந்தேன். சக்சஸ் மீட்டில் சந்திப்போம் என்று பலமுறை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசி இருக்கிறோம். ஆனால் சக்சஸ் மீட் என்பது இதுதான் என் வாழ்வில் முதல்முறை. ப்ருத்வி பேசிய அனைத்தும் எனக்கும் பொருந்தும். இப்படத்தின் வெற்றி எப்படிப்பட்ட படத்தை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதை எனக்குக் கற்றுக் கொடுத்தது. மேலும் என் அப்பா அம்மாவை சந்தோசப்படுத்திப் பார்க்கும் வாய்ப்பை எனக்கு இந்த ப்ளூ ஸ்டார் கொடுத்திருக்கிறது.
ராஜேஷ் என்னும் இந்தக் கதாபாத்திரம் இன்று இந்த அளவிற்கு பேசப்படுகிறது என்றால் அதற்கு முழு முதற்காரணம் வசனம் எழுதிய எழுத்தாளர் தமிழ் பிரபா மற்றும் இயக்குநர் ஜெயக்குமார் இருவரும் தான். அவர்களுக்கு பெரிய நன்றி. எழுத்தாளர் ஒரு படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை நான் முதலில் என் அப்பாவிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.. இப்பொழுது ப்ளூ ஸ்டார் படத்தின் மூலம் அது மீண்டும் நிரூபனமாகி இருக்கிறது. என் அப்பா, எத்தனையோ நடிகர்களுக்கு நான் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கிறேன்… ஆனால் என் மகனுக்கு என்னால் அப்படி ஒரு வெற்றியைக் கொடுக்க முடியவில்லையே என்று கண்கலங்கி இருக்கிறார். ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றி அந்தக் கண்ணீரைத் துடைத்திருக்கிறது. அதற்காகவும் இப்படக்குழுவினருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்த வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்து என் அப்பா இயக்குநர் கே.பாக்யராஜ் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அது மிகவும் எமோஷனலாக இருந்தது” என்றார்.