
மத்திய அரசு கடந்த ஜனவரியில் கலைத் துறை சார்பில் அஜித்குமாருக்கு இந்தாண்டுக்கான பத்ம பூஷன் விருது அறிவித்தது. இதையடுத்து விருது வழங்கும் விழா கடந்த 28ஆம் தேதி டெல்லியில் உள்ள குடியரசு மாளிகையில் நடந்த நிலையில் அதில் பங்கேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கையால் அஜித் பத்ம பூஷன் விருது வாங்கினார். அவர் வாங்கும் போது அவரது மனைவி ஷாலினி, அவரது குழந்தைகள் மற்றும் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா எழுந்து நின்று மனம் நெகிழ்ந்து கைதட்டி பாராட்டினர்.
இதையடுத்து விருது வாங்கிவிட்டு சென்னை திரும்பிய அஜித், விமான நிலையத்தில் எல்லோருக்கும் நன்றி என செய்தியாளர்களிடம் சொன்னார். மேலும் விரைவில் சந்திப்பதாகவும் கூறினார். இதையடுத்து ஷாலினியும் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது, “ராஷ்டிரபதி பவனில் அஜித், இந்த விருது வாங்கியதை பார்க்கும் போது சந்தோஷமாகவும் சிறந்த அனுபவமாகவும் இருந்தது. ரொம்ப பெருமையாவும் இருக்கு” என்றார்.
ஷாலினி 80 மற்றும் 90களில் குழந்தை நட்சத்திரமாகத் தமிழ் மற்றும் மலையாள படங்களில் வலம் வந்தார். பின்பு கதாநாயகியாக 1997ஆம் ஆண்டு ‘அனியாதிப்ராவு’ என்ற மலையாள படம் மூலம் அறிமுகமானார். பின்பு அதே படத்தின் தமிழ் ரீமேக்கான ‘காதலுக்கு மரியாதை’ மூலம் தமிழுக்கு அறிமுகமானார். பின்பு பல்வேறு படங்களில் நடித்த அவர் அஜித்துக்கு ஜோடியாக ‘அமர்க்களம்’ படத்தில் நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்து பின்பு இருவரும் 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு அவர் நடிப்பில் இருந்து விலகியிருக்கிறார்.