
அஜித்குமார் கடைசியாக அதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்தார். இப்படம் இம்மாதம் 10ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனிடையே கார் ரேஸில் பல்வேறு நாடுகளில் நடக்கும் போட்டியில் கலந்து கொண்டு வருகிறார்.
இதனிடையே அவருக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து விருது வழங்கும் விழா கடந்த 28ஆம் தேதி டெல்லியில் உள்ள குடியரசு மாளிகையில் நடந்தது. அதில் பங்கேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கையால் பத்ம பூஷன் விருது வாங்கிய அஜித் நேற்றிரவு சென்னை திரும்பினார். அப்போது அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் மற்றும் செய்தியாளர்கள் குவிந்தனர். மேலும் அவரை கண்டதும் அவருடன் போட்டோ எடுக்க முற்பட்டனர். செய்தியாளர்களிடம் பேசிய அஜித் எல்லோருக்கும் நன்றி என சொன்னார். மேலும் விரைவில் சந்திப்பதாகவும் கூறினார்.
இந்த நிலையில் அஜித்குமார் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று விமான நிலையத்தில் அஜித் கூட்ட நெரிசலில் சிக்கியதால் காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் அஜித் தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. விரைவில் வெளியிடுவார்கள் எனக் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் அஜித் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.