விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இதற்கிடையே படத்தில் தமிழக அரசை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அ.தி.மு.க தொண்டர்கள் தியேட்டர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி விஜய்யின் பேனர்களை கிழித்தனர். இதைத்தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற அரசு வழங்கிய இலவச பொருட்களை தீயில் வீசி எரிக்கும் காட்சிகளை பட நிறுவனம் நீக்கியது. பின்னர் படத்தை மறுதணிக்கை செய்து திரையரங்குகளில் மறு வெளியீடு செய்தது படக்குழு. இந்நிலையில் தற்போது கேரளாவிலும் 'சர்கார்' படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. திருச்சூரில் உள்ள தியேட்டரில் விஜய் புகைப்பிடிக்கும் பேனர் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு திருச்சூர் சுகாதார துறை எதிர்ப்பு தெரிவித்து விஜய் மற்றும் கேரள விநியோகஸ்தர், தயாரிப்பாளர், தியேட்டர் உரிமையாளர் ஆகியோர் மீது தற்போது வழக்கு தொடர்ந்துள்ளது. ஏற்கனவே கேரளாவிலுள்ள கொல்லத்தில் 'சர்கார்' படத்திற்காக நடிகர் விஜய்க்கு 175 அடியில் பேனர் வைத்து பின்னர் அதற்கு கேரள அரசு தடை விதித்ததையடுத்து அந்த பேனர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.