உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் இந்த நிகழ்வு இந்த மாதம் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கும்பமேளாவில், இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். கும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்கள் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடமான திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இதுவரை 10 கோடிக்கும் மேலான பக்தர்கள் புனித நீராடியுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திரைப்பிரபலங்கள் பாடகர் ஷங்கர் மகாதேவன், நடிகை ஹேமா மாலினி, நடிகை பூனம் பாண்டே உள்ளிட்ட பலரும் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டனர். அந்த வரிசையில் நடிகை சம்யுக்தா கங்கையில் புனித நீராடி உள்ளார். இது தொடர்பான புகைப்படங்களைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த சம்யுக்தா, “வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட பரந்த தன்மையை நாம் காணும்போது அதன் அர்த்தம் வெளிப்படுகிறது. மகாகும்ப மேளாவில் கங்கையில் புனித நீரோட்டத்தைப் போல, எப்போதும் நனவின் நீரோட்டத்தை ஊட்டமளிக்கும் அதன் எல்லையற்ற உணர்விற்காக நான் எனது கலாச்சாரத்தை மதிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சம்யுக்தா தமிழில் தனுஷுடன் வாத்தி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மலையாள நடிகையான இவர் தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.