கடந்த ஜூன் 14ஆம் தேதி பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டார். தற்போது இவரது மரணம் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றது. வாரிசு அரசியலால் தான் சுஷாந்த்திற்கு மரணம் ஏற்பட்டதாக பாலிவுட்டில் பரவலாக பேசப்பட்டுவரும் நிலையில் அதே வாரிசு அரசியலால் தானும் பாதிக்கப்பட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் மன்சூர் அலிகான் பட்டோடி மற்றும் நடிகை ஷர்மிளா தாகூர் தம்பதியின் மகனும், நடிகருமான சைஃப் அலிகான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் பேசும்போது...
"என் ஆரம்பகாலங்களில் நான் பெயர் தெரியாத படங்களில் மூன்றாம் நாயகனாகக் கூட நடித்திருக்கிறேன். ஆனால் நான் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று எண்ணியதே இல்லை. நானும் வாரிசு அரசியலால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்று சொல்லியிருந்தேன். நான் சொல்ல வந்தது என்னவென்றால் இது ஒரு வியாபாரம். இங்கு எல்லாம் நடக்கும். இங்கும் அரசியல், அதிகாரம், சூழ்ச்சி எல்லாம் இருக்கும். எல்லோருமே அவரவர் தேவைக்குத்தான் இங்கிருக்கின்றனர். ஒரு அளவுக்கு அதிகாரம் இருந்தால் அவர்களால் விஷயங்களைக் கட்டுப்படுத்த முடியும். எனவே அதை செய்கிறார்கள். எனக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு அடுத்த நாளே யாரோ ஒருவரது செல்வாக்கினால் என் வாய்ப்பு பறிபோயிருக்கிறது. மன்னித்துவிடுங்கள், இதுதான் நிலைமை, எங்கள் கையில் இல்லை என்பார்கள்.
முதல் முறை எனக்கு அப்படி நடந்த போது என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் இரண்டாவது முறை நடந்த போது நானே சிலரை தொலைப்பேசியில் அழைத்து பிரச்சினை செய்தேன். பிறகு அந்த வாய்ப்பு கிடைத்தது. தவறு எங்கு நடந்தாலும் தவறு தான். அதனால்தான் நானும் வாரிசு அரசியலால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்று சொன்னால் கிண்டல் செய்பவர்களைப் பார்க்கும் போது கோபம் வருகிறது. ஏனென்றால் நானும் கடினமாக உழைத்தே வந்திருக்கிறேன். உனக்கு சலுகை இருந்தது, வாரிசு அரசியல் பிரச்சினை உனக்குத் தெரியாது என்று சிலர் சொல்வார்கள். எனக்கும் மோசமான காலகட்டம் இருந்திருக்கிறது, தனிமையான போராட்டங்கள் இருந்திருக்கிறது. எங்கள் எல்லோருக்குமே அப்படித்தான்" என கூறியுள்ளார்.