ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘சொர்க்கவாசல்’. ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். இப்படத்தில் செல்வராகவன், நட்டி, சானியா ஐயப்பன், பாலாஜி சக்திவேல், கருணாஸ், ஹக்கீம் ஷா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், பாசிட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் படத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்து ஆர்.ஜே.பாலாஜி நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சொர்க்காசல் படத்தில் எழுத்தாளர்களில் ஒருவரான அஸ்வின் ரவிச்சந்திரனும் உடனிருந்தார். அதில் ஆர்.ஜே.பாலாஜி பேசுகையில், “நானும் அஷ்வினும் வேறொரு படத்தின் ஷூட்டிங்கில் இருக்கிறோம். அதனால் தியேட்டர் தியேட்டராக சென்று சொர்க்கவாசல் படத்தை புரொமோட் செய்ய முடியவில்லை. ஆனால் நீங்க படம் பிடிச்சிருப்பதாக சொல்லும் போது ரொம்ப சந்தோஷம். என்னை விட அஷ்வினுக்கு ரொம்ப சந்தோஷம். ஏனென்றால் அவருடைய முதல் படம் இதுதான்.
அதெ போல் என்னுடைய நடிப்புக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு. ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு. அது என்னுடைய நம்பிக்கையை பூஸ்ட் பண்ணியிருக்கு. ஃபெஞ்சல் புயல் இருந்தாலும் மற்ற மாவட்டங்களில் நல்ல ரெஸ்பான்ஸ் இருப்பதாக எங்க பட டிஸ்ட்ரிபியூட்டர் சொன்னார். எனக்காக இல்லைனாலும் அஷ்வினுக்காக எல்லாரும் பாருங்க. நல்ல படத்தை எப்போதுமே நீங்க வாழ வைப்பீங்கன்னு மறுபடியும் ஒரு தடவை நிரூபிச்சிருக்கீங்க” என்றார். ஆர்.ஜே. பாலாஜி தற்போது சூர்யாவை வைத்து இன்னும் பெயரிடாத தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். படப்பிடிப்பு கோவையில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.