பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருக்கும் ரன்பீர் கபூர், 'பிரம்மாஸ்திரம்' படத்தை அடுத்து 'தூ ஜூதி மைன் மக்கார்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 8 ஆம் தேதி வெளியாகிறது. இதனால் ப்ரோமோஷன் பணிகளில் பிசியாக ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது நெறியாளர் ஒருவர், "பாலிவுட் தற்போது மோசமான கட்டத்தை நோக்கி செல்கிறதே" எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த ரன்பீர் கபூர், "என்ன சொல்கிறீர்கள்? பதான் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை நீங்கள் பார்க்கவில்லையா?" என்றார். தொடர்ந்து அந்த நெறியாளர் கேள்வி கேட்க, குறுக்கிட்ட ரன்பீர் கபூர், "நீங்கள் எந்த ஊடகம்" என்றார். "பிபிசி" என அந்த நெறியாளர் பதிலளிக்க, "கடந்த சில நாட்களாக உங்கள் நிறுவன அலுவலகத்திலும் தான் ஏதேதோ நடக்கிறது. அதைப் பற்றி முதலில் சொல்லுங்கள்" என்று ரன்பீர் கபூர் பேசியுள்ளார்.
பிபிசி நிறுவனம், சமீபத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது. மத்திய அரசு இந்த ஆவணப்படத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆவணப்படத்தை வெளியிடத் தடை விதித்தது. அதனைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர் பிபிசி நிறுவனத்தின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் மூன்று நாள் தொடர்ந்து சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.