இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிப்பில் ‘கேம் சேஞ்சர்’ படம் உருவாகி வருகிறது. இப்படத்தில், கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த் மேகா, அஞ்சலி, நவீன் சந்திரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடந்தது. இறுதிக்கட்டத்தை தற்போது எட்டியுள்ளது. ஆந்திராவில் தற்போது படப்பிடிப்பு நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இப்படம் அரசியல் சார்ந்து பல விஷயங்களைப் பேசும் படமாக இருக்கும் எனப் பரவலாகச் சொல்லப்படுகிறது.
முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ராம் சரண், தற்போது தயாரிப்பாளராகவும் கால் பதிக்கவுள்ளார். ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, கார்த்திகேயா ஆகிய 2 வெற்றி படங்களைத் தயாரித்த அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் மற்றும் வி மெகா பிக்சர்ஸ் நிறுவனத்தின் விக்ரம் ரெட்டி ஆகியோருடன் இணைந்து நடிகர் ராம் சரண் ‘தி இந்தியா ஹவுஸ்’ படத்தை தயாரிக்கிறார். ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் நிகில் சித்தார்த்தா நடிப்பில் உருவாகும் இப்படத்தின் தொடக்க விழா இன்று தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. சாயீ மஞ்சரேக்கர் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் அனுபம் கேர் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.