மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகிறார். அந்த வகையில் திரைப்படங்கள் குறித்தும் அவ்வப்போது பதிவிட்டு வந்த ஆனந்த் மஹிந்திரா, தற்போது இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலிக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
அந்த பதிவில், "வரலாற்றை உயிர்ப்பிக்கும் மற்றும் நம் கற்பனையைத் தூண்டும் அற்புதமானவை சிந்து சமவெளி நாகரீகம். அந்தப் பழங்கால நாகரிகத்தைப் பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் எஸ்.எஸ்.ராஜமௌலி ஒரு திரைப்படத்தை எடுக்க வேண்டும்" என ராஜமௌலியை டேக் செய்து பதிவிட்டிருந்தார். மேலும், சிந்து சமவெளி நாகரீகம் குறித்தும் அவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பது குறித்தும் ஒரு நீண்ட பதிவை பகிர்ந்திருந்தார்.
ஆனந்த் மஹிந்திராவின் இந்த பதிவிற்கு ராஜமௌலி பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில், "தோலாவிராவில் மகதீரா படப்பிடிப்பின் போது பழமையான ஒரு மரத்தைப் பார்த்தேன். அது புதைபடிமமாக மாறி இருந்தது. சிந்து சமவெளி நாகரீகத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி பற்றிய ஒரு கதையை அந்த மரத்தை வைத்து யோசித்தேன்.
சில வருடங்கள் கழித்து பாகிஸ்தானுக்கு சென்று மொஹஞ்சதாரோ பகுதிக்கு செல்ல முயன்றேன். துரதிர்ஷ்டவசமாக எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது" எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக ராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை இந்தியாவின் உலகளாவிய பிராண்ட் என ஆனந்த் மஹிந்திரா புகழ்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.